மனிதர்களைப் பிரியப்படுத்தப் பேசுதல்

ஆதவன் 🖋️ 680 ⛪ டிசம்பர் 08,  2022 வியாழக்கிழமை

"சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்." ( 1 தெசலோனிக்கேயர் 2 : 4 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இரண்டுவித சுவிசேஷ அறிவிப்புகளைக் கூறுகின்றார். ஒன்று, மனிதர்களைப் பிரியப்படுத்தும் விதமாக பேசி தவறாக மக்களை வழிநடத்துதல். இரண்டு, தேவனுக்கே பிரியமுண்டாகப்  பேசுதல்.

உதாரணமாக, மனிதர்களைப் பிரியப்படுத்தப் பேசுதல் என்பது, மனம் திரும்பாத ஒரு மனிதனிடம் இரட்சிப்புக்கேற்ற வார்த்தைகளைப் பேசி சத்தியத்தை உணர்த்தாமல்  "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.." என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவது, அல்லது அத்தகைய மனிதர்கள் அளிக்கும் காணிக்கைகளை  மகிழ்வோடு பெற்றுக்கொண்டு, "கர்த்தர் உங்களை பத்து மடங்காக ஆசீர்வதிப்பார்" என்பது, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை எங்களது குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைத்தால் நாங்கள் உங்களுக்காகத் தினமும் ஜெபிப்போம் என்பது...இத்தகைய முறைமைகள் மனிதர்கள் கடைபிடிக்க எளிமையானவை. எனவே இவற்றுக்கு மக்களது ஆதரவு அதிகம் கிடைக்கும். இத்தகைய போதனைகளைக் கொடுக்கும் ஊழியன் மக்களால் அதிகம் விரும்பப்படுவதால் இவர்களுக்குக் கூட்டமும் அதிகம் சேரும். 

தேவனுக்குப் பிரியமானவைகளைப் பேசுதல் என்பது, பாவத்திலிருந்து மனம் திரும்புதல், ஆத்தும இரட்சிப்பு, நித்திய ஜீவன் இவைகளைக்குறித்துப் பேசி மக்களை வழி நடத்துதல். இத்தகைய போதனைகளை தேவனுக்கு உத்தமமும் பிரியமுமான போதகர்களால்தான் போதிக்கமுடியும். எனவேதான் பவல் இன்றைய தியான வசனத்தின் துவக்கத்தில் " சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணின படியே" என்று கூறுகின்றார். ஆனால், பெரும்பாலான மக்கள் இத்தகைய போதனைகளை விரும்புவதில்லை. இவற்றை போதிக்கும் ஊழியர்களுக்கு மக்கள்கூட்டம் சேர்வதுமில்லை. 

அன்பானவர்களே, ஒரு ஊழியர் எத்தகைய விதமாக பிரசங்கிக்கிறார் என்பதைக் கவனித்து அந்த மனிதன் தேவனுக்கு உகந்தவனாகப் பேசுகின்றானா அல்லது மனிதர்களைத் திருப்திப்படுத்த பேசுகின்றானா என்பதை நிதானிக்கக்கூடிய அறிவு நமக்கு வேண்டும். இன்று பல விசுவாசிகள் வேதாமத்தை வாசிப்பதே இல்லை. வாசித்தாலும் கடமைக்காக வேதாகமத்தைத் திறந்து குறிப்பிட்ட ஒரு சில வசனங்களை வாசிப்பவர்களாக இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களால் ஊழியர்களை அவர்களது போதனையின் அடிப்படையில் இனம்காண முடியாது. 

வேதாகம வார்த்தைகள் நம் அன்பின் ஆண்டவர் நமக்கு எழுதிக்கொடுத்த வார்த்தைகள். அவற்றை தேவ அன்போடு, அவரை இன்னும் இன்னும் அதிகமாக அறியவேண்டுமெனும் ஆர்வத்தில் வாசிக்கும்போதுதான் நாம் சத்தியத்தை அறிய முடியும். போலிகளையும் மனிதர்களைத் திருப்திப்படுத்த போதிப்பவர்ளையும் இனம்காண முடியும்.

மனிதர்களைப் பிரியப்படுத்தப் போதிக்கும் போதனைகளை கேட்டு வாழ்ந்தோமானால் ஆத்தும மரணத்தையும் தேவனுக்குப் பிரியமான போதனைகளைப் போதிக்கும் ஊழியர்களது போதனைகளைக் கேட்டு நடந்தோமானால் நித்திய ஜீவனையும் பெறுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்