இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, December 28, 2022

ஆபிரகாம்போல முழு அர்ப்பணிப்புடன்........

ஆதவன் 🖋️ 702 ⛪ டிசம்பர் 30,  2022 வெள்ளிக்கிழமை

"விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்." ( எபிரெயர் 11 : 8 )

விசுவாசம் என்பது நம்பப்படுபவைகளில் உறுதியாக இருப்பது என்று வேதம் கூறுகின்றது. ( எபிரெயர் 11 : 1 ) நாம் தேவனை உறுதியாக நம்பினோமானால்,  அவர் நமக்குத் தருவதை ஏற்றுக்கொள்ளும் உறுதி நமக்கு வேண்டும். இந்த உறுதியினையே ஆபிரகாம் கொண்டிருந்தார். அதனையே இன்றைய வசனம், "தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்." என்று கூறுகின்றது.  

அதாவது ஆபிரகாம் தனது சுய ஆசை விருப்பங்களை நிறைவேற்றிட தேவனை விசுவாசிக்கவில்லை. மாறாக தேவன் விரும்புவதை அவர் தனக்குச் செய்யட்டும் என்று தன்னை ஒப்புக்கொடுத்தார்.  

நாம் தேவனை அறியாமல் இருந்தபோது தேவன் நம்மை அழைத்து தனது நித்திய ஜீவ பாதையினை நமக்கு வெளிப்படுத்தினார். அப்படி நம்மை அழைத்து, நமது பாவங்களை மன்னித்து வழிநடத்தும் அவர் முற்றுமுடிய நம்மை நடத்துவார். இப்படி விசுவாசித்து நம்மை தேவனுக்கு அர்ப்பணித்து வாழ்வதையே அவர் விரும்புகின்றார். 

அனைத்துப் பரிசுத்தவான்களும் இப்படியே வாழ்ந்தனர்; அனைத்து தேவ தாசர்களும் இப்படியே வாழ்ந்தனர்.  ஆபிரகாம் தன்னை தேவன் அழைத்தபோது எங்கு போகின்றோம் நமக்கு  என்ன நடக்கும் என்று விசாரியாமல் போனார். மோசே, தேவன்  தன்னை இஸ்ரவேலருக்குத் தலைவராக ஏற்படுத்தவேண்டும் என்று ஜெபிக்கவில்லை, சாமுவேல் மற்றும் நியாதிபதிகள் தங்களுக்கு தேவன் வெளிப்படுத்தியபடியே செயல்பட்டனர். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீது தன்னைத் தேவன்  ராஜாவாக மாற்றவேண்டும் என்று  ஜெபிக்கவில்லை. தேவ சித்தத்துக்கு இவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்து வாழ்ந்தனர்.

ஆனால் இன்று பலருடைய ஜெபங்களும், பல ஊழியர்களது ஜெபங்களும், எதிர்கால தரிசனங்கள் என்று தாங்கள் தங்கள் மனதில் எண்ணிக்கொண்ட ஆசைகள் நிறைவேறிட ஜெபிப்பதாகவே இருக்கின்றன. "பிதாவே, எனது சித்தமல்ல; உமது சித்தமே நிறைவேறட்டும்" என்று ஜெபித்து நமக்கு முன்மாதிரி காட்டினார் இயேசு கிறிஸ்து.   ஆம், இத்தகைய ஜெபத்தையே நம்மிடம் விரும்புகின்றார் தேவன்.

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனதுபோல தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நாம் ஆவிக்குரிய பயணத்தைக் தொடரவேண்டும்.

நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். நம்மை ஒரு நோக்கத்துக்காக அவர் அழைத்திருப்பாரேயானால் அதனைக் கண்டிப்பாக நம்மைக்கொண்டு நிறைவேற்றுவார். அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோமானால் ஆபிரகாமுக்கு அளித்ததுபோல நமக்கும் வாக்குறுதிகள் அளித்து நாம் விசுவாசத்தில் நிலைத்து நிற்க உதவுவார். 

தேவன்மேல் கொண்ட விசுவாசத்தில் குறைவுபடாமல் கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போன ஆபிரகாம்போல முழு அர்ப்பணிப்புடன் தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதையே தேவன் விரும்புகின்றார். அத்தகைய அர்பணிப்புக்கு நமது சுய ஆசைகள் தடையாக நில்லாமல் பார்த்துக்கொள்வோம். அவரே நமக்கு நியமித்த காரியங்கள் வாய்க்கும்படிச் செய்வார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

No comments: