ஜீவனுள்ளவர்களாக கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்வோம்.

ஆதவன் 🖋️ 686 ⛪ டிசம்பர் 14,  2022 புதன்கிழமை

"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 )

ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கின்றதா இல்லையா என்பதை அவனது நாடித்துடிப்பினால் அறியலாம், சுவாசம் இருக்கின்றதா இல்லையா என்பதைக்கொண்டு அறியலாம். இதுபோல ஆவிக்குரிய மனிதர்கள் என்று கூறிக்கொள்வோர்களது நிலைமையினை எதனைக்கொண்டு அறிவது?  உண்மையிலேயே அவர்கள் ஆவிக்குரிய உயிருள்ள வாழ்க்கை வாழ்கின்றார்களா இல்லை செத்த வாழ்க்கை வாழ்கின்றார்களா என்பதை எப்படிக் கண்டறிவது? இதனையே அப்போஸ்தலரான யோவான் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் தெரியப்படுத்துகின்றார். 

அதாவது, "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." என்கின்றார். குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை வழிபடுபவர்கள் என்றோ, அவரை விசுவாசிக்கின்றோம் என்று கூறுபவர்கள் என்றோ அவருக்காகவோ அவரது ஆலயங்களுக்காகவோ பல்வேறு செயல்பாடுகளை செய்பவர்கள் என்றோ கூறாமல் "குமாரனை உடையவன்" என்று கூறுகின்றார்.

ஒரு பொருள் நமக்கு உடைமையாக இருக்கின்றது என்றால்தான் நமக்கு அது பெருமை. அதுபோல குமாரனாகிய கிறிஸ்துவை நமது உடைமை ஆக்கிக்கொள்வதில்தான்  ஆவிக்குரிய ஜீவன் இருக்கின்றது. அப்படிக் கிறிஸ்துவை உடைமையாக்கிக் கொள்ளும்போது தான் அவர் நம்மில் நிலைத்திருப்பார். 

கிறிஸ்து நம்மில் நிலைத்திருப்பதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம் என்பதையும் யோவான் பின்வருமாறு கூறுகின்றார்:- "அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  3 : 24 ) தேவனுடைய ஆவியானவர் நம்மில் நிலைத்திருக்கின்றார் என்பதை உறுதி செய்யும்போது அவர் நம்மில் நிலைத்திருக்கின்றதையும்  நாம் அறிவோம். ஆம், அப்போதுதான் நாம் குமாரனை உடையவர்கள் ஆகி, ஜீவனுள்ளவர்களாவோம்.

தேவனுடைய ஆவியானவர் நம்மில் நிலைத்திருப்பதை நாம் ஆவிக்குரிய கனிகளின்மூலமே அறியமுடியும். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."( கலாத்தியர் 5 : 22, 23)

தேவனுடைய ஆவியானவர் நம்மில் இருப்பதை அலறி ஆர்ப்பரிப்பதனாலல்ல, மாறாக கனியுள்ள வாழ்க்கையினால் அறியலாம்.  சுருக்கமாகச் சொல்வதானால், ஆவிக்குரிய கனிகள் உள்ளவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டிருந்து ஜீவனுள்ளவனாக இருப்பான், ஆவிக்குரிய கனியற்றவனோ கிறிஸ்து இல்லாத ஜீவனற்றவனாக இருப்பான்.  

அன்பானவர்களே, வெறும் ஆராதனையோடு நின்றுவிடாமல் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம், ஜீவனுள்ளவர்களாக கிறிஸ்துவுக்குச் சாட்சியாக  வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்