Friday, December 02, 2022

மான் கால்கள்

 ஆதவன் 🖋️ 675 ⛪ டிசம்பர் 03,  2022 சனிக்கிழமை

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது." ( சங்கீதம் 94 : 18 )

ஒரு தாய் தனது குழந்தையினை பாதுகாத்து பராமரிப்பதுபோல தேவன் நம்மைப் பாதுகாத்துப் பராமரித்து வருகின்றார். சிறு குழந்தைகள் நடக்கத் துவங்கும்போது சில நேரங்களில் அவைகளின் கால் தடுமாறும்போது,  "அம்மா" எனக் கூவிடும்போது தாய் உடனே ஓடி அதன் கைகளைப் பற்றிக் கொள்கின்றாள். நம்மை தேவன் இத்தகைய தாய் அன்புடன் வழி நடத்துகின்றார். 

எனவேதான் சங்கீத ஆசிரியர், "என் கால் சறுக்குகின்றது என்று நான் சொல்லும்போது , கர்த்தாவே உமது கிருபை என்னைத் தாங்குகின்றது" என்று கூறுகின்றார். தேவனது முன்னிலையில் நாம் எல்லோருமே சிறு குழந்தைகள்தான். இந்த உலகத் துன்பங்கள், நெருக்கடிகள் நம்மைக் கலங்கச் செய்கின்றன. அவைகளை நாம் எதிர்கொள்ள முடியாமல் தேவனை நோக்கி முறையிடும்போது தேவனது கரம் நம்மைத் தாங்கிடுகின்றது.

தாவீதின் வாழ்க்கையினைப்  பார்க்கும்போது அவரைத் தேவன் கிருபையால் தாங்கி நடத்தியதை நாம் பல இடங்களில் வாசிக்கலாம். தாவீது தேவனது கிருபைக்காக  அதிகமாக மன்றாடுவதை நாம் அவரது சங்கீதங்களில் வாசிக்கலாம். தேவ கிருபைக்காக  நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியது அவசியம்.

மட்டுமல்ல,  நாம் தேவனது குழந்தைகளாக, அவரைப்போல உலகினில் நடக்க ஆர்வமுடையவர்களாக வாழ வேண்டியது அவசியம். அப்போஸ்தலரான பேதுருவுக்கு அந்த ஆசை அதிகம் இருந்தது. இயேசு கிறிஸ்துவைப்போல கடலின்மேல் நடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். இயேசு கிறிஸ்துவும் அவரது ஆசையினை அங்கீகரித்தார். ஆனால் கிறிஸ்துவைவிட்டு பார்வையை அகற்றி காற்றையும் அலைகளையும் பார்த்தபோது பேதுரு பயந்துவிட்டார். 

"காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்." ( மத்தேயு 14 : 30 ) என்று வசனம் கூறுகின்றது. இன்றைய வசனம் இதனைத்தான் கூறுகின்றது. பேதுரு பயந்து கூவியது ஒரு குழந்தை "என் கால் சறுக்குகிறது" என்று கூறுவதைப் போலத்தான்.  ஆண்டவராகிய இயேசு பேதுருவை கடலில் அமிழ்ந்துபோகவிடவில்லை. கைநீட்டித் தூக்கிவிட்டார். 

அன்பானவர்களே, நாமும் கர்த்தருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புவிப்போம். தேவனது கிருபைக்காக அதிகம் ஜெபிப்போம்.  அப்படி ஜெபித்து, அவரைப்போல  வாழ முயலும்போது நமக்கு ஏற்படும் இக்கட்டுகளில் தேவ கிருபை நம்மைத் தாங்குவதை உணரலாம். 

ஆபகூக் தீர்க்கதரிசியும் தாவீதைப்போல கர்த்தரது கிருபையினை உணர்ந்திருந்ததால் கூறுகின்றார்,  "ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." ( ஆபகூக் 3 : 19 ) ஆம், சறுக்கும் நமது கால்களைப் பலப்படுத்தி மான் கால்களைப்போல மாற்றி   உயரமான மலைகளில் தாவி ஓடக்கூடிய பலத்தை தேவன் நமக்குத் தருவார். மெய்யாகவே என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: