ஆதவன் 🖋️ 701 ⛪ டிசம்பர் 29, 2022 வியாழக்கிழமை
"உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 8 : 26 )
விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டப் பெண்ணை இயேசு கிறிஸ்து கிருபையாய் மன்னித்து அனுப்பினார். பின்னர் சுற்றிநின்ற யூதர்களிடம், "நான் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன் என்று பேச ஆரம்பித்தார். தொடர்ந்து யூதர்களுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின்போது இயேசு கிறிஸ்து இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றார்.
அதாவது இயேசு கிறிஸ்து கூறுவதன் பொருள் என்னவென்றால், "உங்களைக்குறித்து எனக்கு பல காரியங்கள் தெரியும், உங்கள் ஒவ்வொருவருடைய பாவ காரியங்கள், உங்கள் மீறுதனான செயல்கள் எல்லாம் எனக்குத் தெரியும். அனால் நான் அவைகளை பேச விரும்பவில்லை. என்னை அனுப்பிய பிதா உண்மையுள்ளவர், நான் அவரிடத்தில் கேட்டவைகளை மட்டுமே உலகத்துக்குச் சொல்லுகிறேன்" என்பதாகும்.
அன்பானவர்களே, நாம் அனைவருமே இயேசு கிறிஸ்து கூறுவதுபோல வாழப் பழகிவிட்டால் நமது ஆவிக்குரிய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடியும். நம்மைச் சுற்றியுள்ளவர்கள், நமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் செய்யும் செயல்பாடுகள், அவர்களது தவறானப் பழக்கங்கள் இவை நமக்கு ஒருவேளைத் தெரியவருமேயானால் இயேசு கிறிஸ்து கூறுவதுபோல அவைகளைக்குறித்து பேச விரும்பக்கூடாது.
ஆனால் பெரும்பாலான மக்கள் பிறரைப்பற்றி ஏதாவது செய்தி தங்களுக்குத் தெரியவந்தால் அதற்குக் கண் காது மூக்கு வைத்து மற்றவர்களிடம் பரப்புபவர்களாக இருக்கின்றனர். அப்படிப் பேசும்போது அந்த நேரத்துக்கு நமக்கும் அதனைக் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அப்படிப் பேசுவதால் எந்த பலனும் ஏற்படாது; மாறாக பகைதான் வளரும்.
இயேசு கிறிஸ்து தனக்கு எதிராகப் பேசிச் செயல்பட்ட யூதர்களைக்குறித்து ஒன்றுமே குற்றம் சொல்லவில்லை. ஆனால் மறைமுகமாகக் கண்டித்தார். "உங்களில் பாவமில்லாதவர் இவள்மேல் கல்லெறியட்டும்" என்ற வார்த்தைகள் அவர்களது பாவங்களை அவர்களுக்கு உணர்த்தியதால் ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்துவிட்டனர்.
இயேசு கிறிஸ்து கூறியதுபோல, தேவனிடம் நாம் கேள்விப்பட்டவைகளையே பிறருக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளோம். யாரைப்பற்றி எந்தச் செய்தி நமக்குக் கிடைத்தாலும் அது குற்றம்கண்டுபிடிக்கும் அல்லது குற்றம்சுமத்தும் செய்தியானால் அவற்றைத் தவிர்த்திடுவோம்.
தேவனிடம் நாம் தனிப்பட்ட உறவில் வளரும்போது தேவன் நமக்குப் பல ஆவிக்குரிய சத்தியங்களை வெளிப்படுத்தித் தருவார். அந்த உண்மையையே நாம் பேசுவதற்கு முன்னுரிமைகொடுக்கவேண்டும். அப்படிப் பேசும்போது நாம் பலருக்கு கிறிஸ்துவை அறிவிக்கமுடியும். பிறரைப்பற்றி அவதூறு பேசுவது குறையும்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
.jpg)
No comments:
Post a Comment