கிறிஸ்துவுக்குப் பகைஞனும் எதிரியும் யார்?

ஆதவன் 🖋️ 679 ⛪ டிசம்பர் 07,  2022 புதன்கிழமை

"அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" ( கலாத்தியர் 1 : 4 )

இயேசு கிறிஸ்து எதற்காகச் சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்டார் என்பதனை இன்றைய தியானத்துக்குரிய வசனம் விளக்குகின்றது. 

இந்தஉலகத்தில் வாழும் நாம் பல்வேறு பாவத் தளைகளில் சிக்கித் தவிக்கின்றோம். இந்தப் பாவக் கட்டுகளிலிருந்தும் உலக ஆசாபாசங்களிலிருந்தும்  நாம் விடுதலையாகி   பரிசுத்தர்களாக மாறி உன்னத ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டும். இது மனித முயற்சியால் கூடாதது. பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் பரிசுத்தமாகவேண்டுமென்றால் இரத்தம் சித்தியாகவேண்டும். அதுவும் பரிசுத்த இரத்தம் சிந்தப்படவேண்டும்.

"நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." ( எபிரெயர் 9 : 22 ) பழைய ஏற்பாட்டு முறைமைகளில் பாவ மன்னிப்புக்காக காளைகளும் ஆடுகளும் பலியிடப்பட்டன. ஆனால் மிருகங்களின் இரத்தம் மனிதர்களை முற்றும் கழுவி சுத்திகரிக்கமுடியாதவை.  எனவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  பாடுபட்டு மரித்து உயிர்த்து தனது சுய இரத்தத்தால் பாவமன்னிப்பை உண்டாக்கினார். 

இந்தநாளில் ஆசீர்வாதங்களையே போதிக்கும் போலி ஊழியர்கள் இருப்பதுபோல அந்தக் காலத்தில் நியாயப்பிரமாணத்தைப் பிரதானமாய்ப் போதித்து கிறிஸ்து பாடுபட்டு தனது கிருபையால் உண்டாக்கிய மீட்பினை மறுதலிக்கும் ஊழியர்கள் இருந்தனர்.  இத்தகைய ஊழியர்கள் கலாத்தியா சபையின் மக்களைக் குழப்பி வந்தனர். நியாயப்பிரமாண கட்டளைகளையே பிரதானப்படுத்தி அவர்கள் போதித்தனர். இதனையே அப்போஸ்தலரான பவுல் "வேறொரு சுவிசேஷம்" என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய சுவிசேஷம் வேத புரட்டாகும்.

எனவேதான் பவுல் அடிகள் அந்த மக்களுக்கு எழுதும்போது, "வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல." ( கலாத்தியர் 1 : 7 ) என்று எழுதுகின்றார்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாக்கப்பட்ட மீப்பினை அறிவிக்காமல் வேறு என்ன நற்போதனைகளை செய்தாலும் அவை போலி சுவிசேஷ அறிவிப்புகள்தான். அவை வேறொரு சுவிசேஷமாகும். அவற்றுக்குச் செவிகொடுக்கும்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தை அவமதிக்கின்றோம்.

கிறிஸ்து நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் என்பதே சுவிசேஷம். இதுவே அடிப்படை சத்தியம். இந்த அடிப்படை இல்லாத சுவிசேஷ அறிவிப்புகள் அடித்தளமில்லாத கட்டிடங்களைப்போலானவை. 

இந்தச்  சத்தியத்தினை ஏற்றுக்கொண்டு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. வேறொரு சுவிசேஷம் இல்லை. அப்படி வேறொரு சுவிசேஷத்தை அறிவிப்பவனே  கிறிஸ்துவுக்குப் பகைஞனும் எதிரியும்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்