மனுஷர்மேல் பிரியமும் நம் ஒவ்வொரு கிறிஸ்தவன் மூலமும் உலகினில் உண்டாவதாக.

ஆதவன் 🖋️ 697 ⛪ டிசம்பர் 25,  2022 ஞாயிற்றுக்கிழமை

"அந்நேரமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்."  (  லுூக்கா 2 : 13, 14 ) 

 அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் !!! 

கிறிஸ்து பிறந்தவுடன் அவரைப்பற்றி அறிவிக்கப்பட்ட முதல் அறிவிப்பு, கிறிஸ்து பிறந்ததால்  பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று கூறுகின்றது. சமாதானக் காரணர் என்றே இயேசு கிறிஸ்து அறியப்படுகின்றார். அவர் பல  இடங்களில்  மக்களையும் சீடர்களையும் பார்த்துக் கூறிய வார்த்தைகள் சமாதான வார்த்தைகளே. 

மனிதனது பாவச் செயல்பாடுகளே சமாதானக் குறைவுக்குக் காரணம் என்பதால் பழைய ஏற்பாட்டுக்  காலத்தில்  பல்வேறு கட்டளைகள்  கொடுக்கப்பட்டன. இக்கட்டளைகள் மனிதனை பாவத்தில் விழாமல் காப்பாற்றும் என எண்ணப்பட்டது.  இவற்றை நியாயப்பிரமாணக் கட்டளைகள்  என்று கூறுகின்றோம். பத்துக் கட்டளைகளைத் தவிர,  யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் நூல்களில் பலக் கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இவை மொத்தம் 613 கட்டளைகள் என்று வேத அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆனாலும் பாவமும் தொலையவில்லை  சமாதானமும் வரவில்லை. 

ஆனால் பலியாக இறப்பதற்காகவே உலகினில் பிறந்த கிறிஸ்து, தனது இரத்தத்தால் நித்திய  மீட்பை உண்டுபண்ணி பாவத்தை மன்னிக்கும் மீட்பை உண்டுபண்ணி  அந்தப் பாவங்களில் மனிதர்கள் விழுந்துவிடாமல் அவர்களை வழிநடத்திட பரிசுத்த ஆவியானவரையும் நமக்குத் தந்துள்ளார். கிறிஸ்துவின் கிருபைக்குள்  வந்துவிடும்போது பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை  நமக்குக்  கிடைக்கின்றது. சமாதானமும் கிடைக்கின்றது.  

இதனையே நாம் ரோமர் நிருபத்தில், "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." (  ரோமர் 8 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

இரண்டாவது மனிதத்தன்மையுடன் பிறரிடம் நடக்கக்கூடிய மன நிலை. இதுவும் கிறிஸ்து இயேசுவால் வந்ததே. கட்டளைகளைப் பார்க்காமல் மனிதரை மதித்து நடக்கவேண்டிய மனநிலை. இதனால்தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், " மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது".  ஆகவே சட்டங்கள்   மனிதனுக்காகவேத் தவிர மனிதன் சட்டத்திற்காக அல்ல. எந்தச்  செயலைச் செய்யும்போதும்  முதலில் நாம் பார்க்கவேண்டியது மனித நலம். மனித நலமா தேவ கட்டளையா என்று பிரச்சனைவரும்போது மனித நலனை முன்னிலைப்படுத்தி நாம் செயல்படும்போது அதுவே தேவனுக்குப் பிரியமானதாக ஆகின்றது. இல்லாவிடில்  நாம் ஒரு வறட்டு வேதாந்தியாகவே உலகுக்குத் தெரிவோம்.

அன்பானவர்களே, இன்றைய கிறிஸ்துப் பிறப்பு நமக்கு இத்தகைய சிந்தனையைத் தர தேவனை வேண்டுவோம்.  பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் நம் ஒவ்வொரு கிறிஸ்தவன் மூலமும் உலகினில் உண்டாவதாக.

 தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                     தொடர்புக்கு :- 9688933712 


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்