Sunday, December 25, 2022

இருளிலிருந்து ஒளியைநோக்கி ...

ஆதவன் 🖋️ 698 ⛪ டிசம்பர் 26,  2022 திங்கள்கிழமை

"சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்" ( யோவான் 3 : 21 )

இருளிலிருந்த மக்களை விடுவித்து ஒளியைநோக்கி நடத்திட ஒளியாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக உலகினில் வந்தார். இங்கு "மெய்யான ஒளி" எனும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படியானால், பொய்யான ஒளி என்று ஒன்றும் இருக்கின்றது என்பது விளங்குகின்றது. பலரும் பொய்யான ஒளியை மெய்யான ஒளி என எண்ணி மோசம்போகின்றனர். ஆத்தும இரட்சிப்பில்லாத போலி அற்புதங்கள் போலி ஆசீர்வாதங்கள் இவை பொய்யான ஒளியினால் ஏற்படுபவை. ஆம், எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே" (II கொரிந்தியர் 11:14) என எழுதுகின்றார். 

மெய்யான ஒளியான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பிரகாசிக்கச் செய்பவரல்ல.; அவர் எந்த மனிதனையும் பிரகாசிக்கச்செய்பவர். அவர் மனிதரிடம் வேற்றுமை பாராட்டுபவரல்ல. ஆனால் இந்த உலகம் அன்று இயேசு கிறிஸ்துவை அறியாமல் இருந்ததுபோலவே இன்றும் அறியவில்லை. "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 )

ஆம் அன்பானவர்களே, ஒளியைப் பகைக்கிறவனாக ஒருவன் இருக்கிறானென்றால் அவன் இருள் நிறைந்தவனும், ஒளியை ஏற்றுக்கொள்ள முடியாதவனுமாய் இருக்கிறான் என்று பொருள். தேள், பூரான், கரப்பான், இன்னும் கற்களுக்கடியில் பதுங்கி வாழும் உயிரினங்களும் இரவில் நடமாடும் விலங்கினங்களும் ஒளியை விரும்புவதில்லை. அவை இருளையே நாடிச்செல்லும். அதுபோலவே ஜீவ ஒளியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒருவன் பகைக்கிறானென்றால் அவனது இருதயம் இருளின் ஆட்சியிலும் பொய்யான ஒளியின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றது என்று பொருள். 

இதனையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3 : 20 ) என்று குறிப்பிடுகின்றார். ஆனால், "சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்" ( யோவான் 3 : 21 )

சத்தியத்தின்படி வாழ்ந்து, நமது செயல்கள் தேவனுக்குள்ளான தூய்மையான செயல்கள் என்று கருதினால் நாம் ஒளிக்குத் தூரமானவர்கள் அல்ல.  அதே நேரம் நாம் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாலும் நமது செயல்கள் இருளின் செயல்பாடுகளாக இருக்குமேயானால் நாம் இன்னும் மெய்யான ஒளியை நமக்குள் பெறவில்லை என்று பொருள். 

"இருளில் நடக்கிற ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." ( ஏசாயா - 9:2 ) என்று ஏசாயா இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து தீர்க்கதரிசனம் கூறினார்.  ஆம், இருளில் நடக்கிற ஜனங்கள் சிறிய ஒளியையல்ல, பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மட்டுமல்ல, அந்த ஒளி மரண இருளில் குடியிருப்பவர்கள்மேல் பிரகாசித்தது என்றும் கூறப்பட்டுள்ளது. 

எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனும் மெய்யான ஒளி, இன்று கிறிஸ்துவைப் பகைக்கும், வெறுக்கும் மனிதர்களையும் பிரகாசிக்கச் செய்யக்கூடியது.  இதற்கு ஆயிரக்கணக்கான உயிருள்ள சாட்சிகள் உண்டு. கம்யூனிச சித்தாந்தத்தில் மூழ்கி கிறிஸ்துவைக்குறித்து அவமானமாய்ப் பேசித்திரிந்த நானும் இதற்கு ஒரு சாட்சியே. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

No comments: