இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, December 09, 2022

இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.

ஆதவன் 🖋️ 682 ⛪ டிசம்பர் 10,  2022 சனிக்கிழமை

"அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 )

அப்போஸ்தலரான பவுல் அடிகள் மேல்  யூதர்கள் குற்றம் சுமத்தி அவர் ரோமையில் விசாரணைக் கைதியாக இருந்தபோது அவரிடம் பேலிக்ஸ் ராஜா விசாரணை செய்தான். பவுல் அப்போஸ்தலரது பதில்களும் மறுமொழிகளும் சுவிசேஷ அறிவிப்புகளாகவே வெளிவந்தன. பவுல் பேசிய பேச்சுக்களைக் கேட்டு பேலிக்ஸ் பயமடைந்தான் என்று இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது. 

உண்மையினை நேருக்குநேர் சந்திக்க பலரும் விரும்புவதில்லை.  பேலிக்ஸ் ராஜாவும் அப்படியே இருந்தான். பவுல், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்தான் என்று வாசிக்கின்றோம். இந்த பயத்துக்குக் காரணம் என்ன? அவனிடம் நீதி, இட்சையடக்கம் போன்ற குணங்கள் இல்லை என்று பொருள். 

பொதுவாக மனிதர்களுக்குத் தங்களது குற்றங்கள் குறைகளையும் பாவங்களையும் பிறர் எடுத்துக்கூறுவது பிடிக்காது. அதிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தங்களைப்  பிறர் குறைகூறுவது ஏற்கவே முடியாதது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்பவர்கள் தங்களது வாழ்க்கையினை மாற்றிக்கொள்ள வழியுண்டு. விசாரணைக் கைதியான பவுல் பேசிய பேச்சுக்கள் பேலிக்சை உள்ளத்தில் குத்தியதால் அவன் பயமடைந்தான். ஆனாலும் அவன் மனம் திரும்பவில்லை.  

இன்று நான் எழுதும் வேதாகம தியானங்களைச் சில கிறிஸ்தவ ஊழியர்கள் விரும்புவதில்லை. சிலர் ஏதாவது தேவையற்ற விமரிசனங்களைச் சொல்வார்கள். ஆனால் நான் கவனித்த ஒரு விசயம், குறைகூறும் இந்த ஒருசில ஊழியர்கள் வாழ்க்கையில் நற்சாட்சி இல்லாதவர்கள். தனது மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு தான் நடத்திய கடையில் பணிசெய்த பெண்ணை மனைவிபோல  சேர்த்துவைத்துக்கொண்டு வாழ்பவர்,   நிதி மோசடி வழக்குகளில் சிக்கி நீதிமற்றத்துக்கும் வீட்டுக்குமாக  அலைபவர், ரியல் எஸ்டேட் நடத்துவதாகக் விளம்பரம் செய்து பொய்களைக்கூறி ஒன்றுக்கும் உதவாத நிலத்தை அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்.....  இவர்களே.

இதுபோன்ற செயல்பாடுகளைக் கொண்டவர்களுக்கு வேத வசனங்கள் கசக்கவேச் செய்யும்.  எப்போதும் ஆசீவாத வசனங்களையே கூறிக்கொண்டிருந்தால் பாராட்டுவார்கள். அப்போஸ்தலரான பவுல் பேசிய வார்த்தைகள் இதுபோலவே பேலிக்ஸ் ராஜாவை அச்சுறுத்தின. எனவே அவன், "நீ போகலாம், எனக்குச் சமயம் கிடைக்கும்போது உன்னை அழைப்பேன்" என்று கூறி அனுப்பிவிட்டான். 

அன்பானவர்களே, தேவன் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புவதால் பொறுமையோடு காத்திருந்து பல்வேறு விதமாகத் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அந்தச் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தாமல்  பேலிக்ஸ் ராஜாவைப்போல, "எனக்குச் சமயம் கிடைக்கும்போது பேசலாம், நீ போ "  என உதறிவிட்டோமானால் இரட்சிப்பு அனுபவத்தை நாம் பெறமுடியாது.  "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 )

குறிப்பிட்ட சில வேத வசனங்களைக் கேட்கும்போது நமக்கு எரிச்சலோ, கோபமோ பயமோ வருகின்றது என்றால் நம்மிடம் ஏதோ குறை இருக்கின்றது என்று பொருள். வசனத்தின்மேலோ, அதனைக் கூறுபவர் மேலோ கோபம் கொள்ளாமல் நம்மை ஆராய்ந்துபார்த்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திரும்புவோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: