Friday, December 23, 2022

பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

ஆதவன் 🖋️ 696 ⛪ டிசம்பர் 24,  2022 சனிக்கிழமை

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." ( 1 யோவான்  4 : 10 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்தது தேவன் உலகத்தின்மேல் கொண்ட அன்பினை வெளிப்படுத்துகின்றது. நாம் இன்று அவரிடம் அன்புகூருவதற்குமுன்பே அவர் நம்மீது அன்பு கூர்ந்தார். அப்படி அன்புகூர்ந்ததால் தந்து குமாரனை பாவப்பரிகார பலியாக உலகினில் அனுப்பினார்.  இப்படி அவர் நம்மீது அன்புகூர்ந்ததால் அன்பு உண்டாகியிருக்கிறது. 

தேவன் மனிதர்களுக்காக ஏற்படுத்திய நித்திய ஜீவனை சாத்தானால் மோசம்பண்ணப்பட்டு மனிதர்கள் இழந்துபோவது தேவனுக்கு வேதனை தந்தது. ஆனால் மனிதர்கள் சாத்தானின் தந்திரத்தை எதிர்த்து நிற்க முடியாதவர்களாகி அவனுக்கு அடிமைகளாகிவிட்டனர். ஆம், பாவம் செய்பவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று இயேசு கிறிஸ்து கூறியபடி மனிதர்கள் பாவத்துக்கு அடிமைகளாகிவிட்டனர்.  

எனவே, "பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்." ( 1 யோவான்  3 : 8 ) இதுவே கிறிஸ்து உலகினில் மனிதனாக வெளிப்பட்டதன்  நோக்கம்.

அன்பானவர்களே, நாம் இன்று ஒரு அரசியல் தலைவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதுபோல இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். குடில்களும், அலங்கார விளக்குகளும், வகை வகையான இனிப்புகளும் உண்டு, புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று கறி சாப்பாடு சாப்பிட்டு சாதாரண உலக மக்களைப்போல இந்த நாளைக் கொண்டாடுவது ஏற்புடையதுதானா என்று எண்ணிப்பார்க்கவேண்டும். 

இயேசு கிறிஸ்து உண்மையில் இதே நாளில்தான் பிறந்தாரா என்று யாருக்கும் தெரியாது ஆனால், அவர் இந்த உலகத்தில் பிறந்தார் என்பது சரித்திர உண்மை. உலக வரலாற்றையே அவரது பிறப்புதான் இரண்டாகப் பிரித்தது. அவர் பிறந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அந்த நோக்கத்தை நிறைவேற்றிடாமல் வெறும் கொண்டாட்டங்கள் அர்த்தமற்றவையே.

வெறும் ஒருநாள் கொண்டாட்டத்தை தேவன் விரும்புவதில்லை. இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார் என்றும், சாத்தானின் பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்க வெளிப்பட்டார் என்றும் விசுவாசிக்கவேண்டும். நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு அவரால் மட்டுமே உண்டு என்பதை விசுவாசிக்கவேண்டும். நமது பாவங்களை உணர்ந்து மனம் திரும்பிய வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இவை இல்லாத கொண்டாட்டங்கள் அர்த்தமிழந்தவையே. அவைகளினால் எந்தப் பயனும் இல்லை. 

ஆம், நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. அதனைநாம் மறந்துவிடக்கூடாது. அவர்மேல் விசுவாசம்கொண்டு மனம் திரும்பிய வாழ்க்கை வாழ இந்தநாளில் முடிவெடுத்து நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு நித்திய ஜீவனுக்கான வழியில் நடக்க முயலுவோம்.

"குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் " ( யோவான் 3 : 36 )

செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                                            தொடர்புக்கு- 96889 33712


No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

சங்கீதம் 44: 6 / Psalm 44:6

  வேதாகமத் தியானம் - எண்:- 1,434 'ஆதவன்' 💚ஜனவரி 11 , 2025. 💚சனிக்கிழமை "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பத...