பலவீனத்தில் மேன்மை

 ஆதவன் 🖋️ 703 ⛪ டிசம்பர் 31,  2022 சனிக்கிழமை

"நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக்குறித்து மேன்மை பாராட்டுவேன். "  ( 2 கொரிந்தியர் 11 : 30 )

இந்த உலகத்து மனிதர்கள் தங்களது பலத்தைக்குறித்துதான் பெருமைபாராட்டுவார்கள். தங்களது பண பலம் , உடல்பலம், உயர்ந்த அந்தஸ்து, பெரிய பதவி  இவைகளைக் குறித்துப்  பெருமைபாராட்டுவார்கள். ஆனால் அப்போஸ்தலரான பவுல் இதற்கு மாறுபட்டுக் கூறுகின்றார். அதாவது தனது பலவீனங்களைக் குறித்துத்  தான் பெருமைப்படுவதாகக் கூறுகின்றார்.

இதற்குக் காரணம் என்ன? நாம் நல்ல பலத்தோடு இருக்கும்போது நாம் தேவனது வல்லமையையும் அவரது உன்னதமான அதிசய காரியங்களையும் சுவைத்து உணர முடியாது. போதுமான பணம் நமக்கு இருக்கும்போது பணமில்லாத ஒருவரை தேவன் எப்படி அதிசயமான முறையில் நடத்துகின்றார் எனும் அனுபவத்தைப் பெற முடியாது. நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவரால் உடல் நலம் குன்றி இருக்கும் ஒருவரை தேவனது அதிசய கரம் பலவீனத்திலும்  கூட இருந்து நடத்துவதை  அறிய முடியாது. எந்த உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் இல்லாமல் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நிலையில் இருக்கும் ஒருவருக்குத்தான்  தேவன் அதிசயமாக அவரை உயர்த்தி வைக்கும் அனுபவத்தை ருசிக்க முடியும். 

ஆம், பலவீனத்தில்தான் நாம் தேவனது அதிசயத்தையும் அன்பையும் அதிகம்  உணர முடியும். இதனைத் தனது  அனுபவத்தால் அனுபவித்து உணர்ந்ததால் அப்போஸ்தலரான் பவல், "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 ) என்றுகூறுகின்றார். 

நடக்கமுடியாதவனுக்குத்தான்  ஊன்றுகோலின் அவசியமும் அதன் தேவையும் அதிகம் விளங்கும். எனவே, "கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்." ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்கின்றார் பவுல்.

வேலையிலாமை, பணக் கஷ்டம், சமுதாயத்தால் புறக்கணிப்பு போன்ற பல்வேறு துன்பச்  சூழல்கள் உங்களை நெருக்குகின்றதா? தேவனைச் சார்ந்துகொள்ளுங்கள். பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல தேவ கரம் இத்தகைய சூழலிலும் கூட இருந்து நடத்துவதை ருசிக்கும் அனுபவம் பெறுவீர்கள். 

"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 34 : 8 ) என்பதைத் தாவீது செல்வச் செழிப்பில் இருந்துகொண்டு கூறவில்லை, மாறாக மிகுந்த இக்கட்டில் இருந்தபோதுதான் அனுபவித்துக் கூறினார். 

கையில் நல்ல வேலையும், பணமும், பதவியும் இருக்கும்போது ,  " கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்"  என்று எளிதில் கூறலாம், பாடலாம். ஆனால், இவை எதுவும் இல்லாத நிலையில் கூறுவதுதான் உண்மையில் அனுபவித்துக் கூறுவது. பவுல் எனவேதான், நான் மேன்மை பாராட்ட வேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக்குறித்து மேன்மை பாராட்டுவேன். என்கின்றார். கர்த்தரைச் சார்ந்தகொண்டு இந்த அன்பவத்தோடு நமது பலவீனங்களை மேற்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்