Friday, December 30, 2022

எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம்.

ஆதவன் 🌞 704 🌻 ஜனவரி 01,  2023 ஞாயிற்றுக்கிழமை

"சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 )


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! 

நம் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லவர் என்று வேதம் கூறுகின்றது. அவரால் கூடாத காரியம் எதுவுமே இல்லை. அவர் மனிதர்களாகிய நமக்குள் செயல்படும் விதம் ஆச்சரியமானதாகும். நமக்கு  பிரச்சனையோ தேவையோ ஏற்படும்போது தேவனை நோக்கி வேண்டுகின்றோம். அப்படி வேண்டும் நாம் ஜெபத்துக்குப் பதிலளிக்க அவருக்குக் காத்திருக்கவேண்டும்.  அவர் நமது ஜெபத்துக்குப் பதிலளிக்கும் விதம் ஆச்சரியமானதாக  இருக்கும். அதனை ருசிக்கும் அனுபவம் நமக்கு வேண்டும்.

இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்த  ஜார்ஜ் முல்லர் (1805 - 18980) எனும் தேவ மனிதரைக்குறித்தும் அவரது விசுவாசம் குறித்தும்  பல செய்திகளை நாம் அறியலாம். விசுவாசமாக ஜெபிப்பது மட்டுமல்ல, ஜெபித்துவிட்டு எப்படியும் தேவன் இந்த ஜெபத்துக்குப் பதில் தருவார். ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த அதிசய முறையில் தேவன் அதனைச் சந்திக்கபோகிறார் என்று ஆவலுடன் அதிசயத்துக்குக் காத்திருக்கும் அனுபவமும் அதனைப் பெற்றுக்கொள்ளும் அருளையும் பெற்றிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான அனாதைக் குழந்தைகளை வெறும் விசுவாச ஜெபத்தால்  மட்டுமே தேவ உதவி பெற்று ஆதரித்து வந்தார் அவர்.

அவரது வாழ்வில் நடந்த பல  சம்பவங்களில் ஒன்று...

ஒரு முறை அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு காலை உணவுக்கு கொடுப்பதற்குப் பால் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. இங்கிலாந்து நாட்டில் பொதுவாக பாலும் ரொட்டியும்தான் முக்கிய உணவு. முல்லர் அதிகாலையிலேயே எழுந்து தேவனிடம் தனது தேவையினை முறையிட்டார். "ஆண்டவரே,உமது வார்த்தையின்படியே இந்தக் குழந்தைகளை ஆதரித்து வருகின்றேன். இன்று இக்குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு பால் வாங்குவதற்குக்கூட என்னிடம் பணமில்லை. அன்பான ஆண்டவரே நீரே இந்தத் தேவையைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இந்தக் குழந்தைகளை உமது  பாதத்தில் ஒப்படைக்கிறேன்; பசியில்லாமல் பாதுகாத்துக்கொள்ளும்"  என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அப்போது அவரது ஜெப அறையின் கதவு தட்டப்பட்டது. முல்லர் எழுந்து வந்து கதவைத் திறந்து அங்கே  நின்ற மனிதனிடம் என்ன என விசாரித்தார். அந்த மனிதன் கூறினான், "ஐயா, நான் பால் வண்டி (Milk Van)  ஓட்டக்கூடியவன்.  பக்கத்து நகருக்கு எனது பால் வண்டியில் தினசரி  பால் கொண்டு செல்கின்றேன்.  இன்று எனது வண்டியின் அச்சாணி சரியாக உங்களது இந்த ஆசிரமத்து கேட் எதிரே வரும்போது உடைந்துவிட்டது. வண்டியைச் சரிசெய்ய வேண்டுமானால் வண்டியின் எடையினைக் குறைக்கவேண்டும்; எல்லா பாலையும் இறக்கவேண்டும். உங்களது ஆசிரம பெயர் பலகையினைப்   பார்த்தேன். இந்த ஆசிரமம் அருகில் இருப்பதால் உங்களிடம் வந்தேன். பெரிய பாத்திரங்களைக் கொண்டுவந்து பாலைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்றான். முல்லர் முழங்கால் படியிட்டு தேவனுக்கு நன்றி கூறினார்.

அன்று அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு வழக்கத்துக்கு  அதிகமான பால் கிடைத்தது. இதுபோல முல்லரின் ஆசிரமத்துப் பலத் தேவைகளை தேவன் அதிசயமாகச் சந்தித்து நடத்தினார். "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை" என்று இதனைத் தள்ளிவிட முடியாது. காரணம், ஒருமுறையல்ல பல முறை பல அதிசயங்கள் இதுபோல நடந்தன.  

அன்பானவர்களே, நமது தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், அவருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள். இந்தப் புத்தாண்டில் இதனை நாம் நினைவில்கொண்டு அவர்மேல் விசுவாசம்கொண்டு உறுதியாக நிற்போம். அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரையே சார்ந்து வாழ்வோமானால் இந்த ஆண்டு மட்டுமல்ல, எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம். 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: