இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, December 07, 2022

விதைத்தலும் அறுத்தலும்

ஆதவன் 🖋️ 681 ⛪ டிசம்பர் 09,  2022 வெள்ளிக்கிழமை

 

"மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 )

வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது தமிழ் பழமொழி. அதாவது நாம் பிறருக்கு என்னச் செய்கின்றோமோ அதுவே நமக்கும் நடக்கும் என்று பொருள்.  முட்செடியின் விதையினை விதைத்துவிட்டு நல்ல அத்திப்பழங்களை அவை தரும் என்று எதிர்பார்க்க முடியாது. 

ஆவிக்குரிய வாழ்க்கையும் இதுபோலவே இருக்கின்றது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 ) என்று கூறுகின்றார். 

இந்த உலக ஆசீர்வாதங்களுக்காகவே நாம் உழைத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை அவை நமக்குக் கிடைக்கலாம். ஆனால் அவற்றின் முடிவு அழிவு. நமது உழைப்பினால் இந்த உலகத்தையே ஆதாயமாக்கிக் கொண்டாலும் நமது ஆத்மாவுக்கு எந்த பயனும் இல்லை. அது அழிவுக்குநேராகவே நம்மைக் கொண்டு செல்லும். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்று.

ஆவிக்கென்று விதைப்பது என்பது, ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமைகொடுத்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நாம் செய்யும் செயல்பாடுகளைக் குறிக்கின்றது. பாவத்துக்கு விலகி, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி நடப்பது.

நமது சிந்தனையே செயலாக மாறுகின்றது. மாமச சிந்தை கொண்டிருந்தோமானால் மாம்ச காரியங்களையே செய்வோம். ஆவிக்குரிய சிந்தை நமக்கு இருக்குமானால் ஆவிக்குரிய செயல்களைச்  செய்து ஆவிக்குரிய மக்களாக வாழ்வோம்.  "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.

அன்பானவர்களே, நமது வாழ்கையினையும் செயல்பாடுகளையும் சிந்தித்துப் பார்ப்போம். நமது சிந்தனைகளும் செயல்களும் எப்படியுள்ளன ? 

முற்றிலுமாக உலக ஆசைகொண்டு அலைந்துவிட்டு நாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை எதிர்பார்க்க முடியாது. காரணம், மாம்சத்துக்கென்று உழைப்பதால் ஆவிக்குரிய வாழ்வை இழந்து நாம் அழிவுக்குநேராகவே செல்வோம். ஆனால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கு உழைக்கும்போது தேவன் உலக ஆசீர்வாதங்களையும் சேர்த்துத் தருவார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

ஆவிக்கென்று விதைப்போம், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: