ஆதவன் 🖋️ 688 ⛪ டிசம்பர் 16, 2022 வெள்ளிக்கிழமை
"அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 8 )
மனிதர்கள் நாம் பலவீனமானவர்கள்; அடிக்கடி பாவத்தில் விழக்கூடிய சூழ்நிலையில் வாழ்வதால் நம்மையும் மீறி பாவத்தில் விழுந்துவிடுகின்றோம். ஆனால் நாம் உள்ளான மனிதனில் நேர்மையாக தூய்மையாக வாழவேண்டும் எனும் விருப்பம் உள்ளவர்களாக வாழ்வோமானால் நாம் பாவம் செய்யும்போது தேவன் கோபத்தில் தனது முகத்தை நமக்கு மறைத்தாலும் தனது கிருபையால் இரக்கம் செய்வார். அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது.
பவுல் அப்போஸ்தலருக்கு இப்படி பரிசுத்த வாழ்வு வாழும் ஆசை இருந்தும் அதனைத் தன்னால் செய்யமுடியவில்லை எனும் ஏக்கம் அல்லது வருத்தம் இருந்தது. எனவேதான், "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்." ( ரோமர் 7 : 18, 19 ) என்று கூறுகின்றார்.
ஒரு தாய் தனது குழந்தை தவறு செய்யும்போது அந்தக் குழந்தையைச் சிறிது கண்டித்தாலும் ஒரேயடியாக ஒதுக்கிவிடுவதில்லை. அதுபோலவே தேவனும் இருக்கின்றார். எனவேதான், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்" என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர்.
மேலும், பாவம் செய்யாமல் பரிசுத்தராக வாழ வேண்டும் எனும் எண்ணமுடன் வாழும் நமது மன நிலையினை தேவன் அறிவார். இந்த எண்ணமும் பாவத்தை வெறுக்கும் மனநிலையும் நமக்கு இருக்குமேயானால் தேவனது கிருபை என்றும் நம்முடன் இருக்கும். காரணம் அத்தகைய எண்ணமுடன் வாழும் மக்கள்மேல் அவர் மனதுருக்கம் கொண்டிருக்கின்றார்.
மேலும், கிறிஸ்துவால் மீட்கப்பட்டு ஞானஸ்நானம் பெறும்போது பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்திருப்பதாக அவரோடு உடன்படிக்கை பண்ணுகின்றோம். அந்த உடன்படிக்கையினை மனிதர்களாகிய நாம் மீறினாலும் அவர் மீறாமல் நினைவில் மொண்டுள்ளார்.
எனவேதான் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 10 )
\ஆம் அன்பானவர்களே, மனித பலவீனத்தால் பாவம்செய்தாலும் அதனை உணரும் மனமும் பரிசுத்தமாக வாழவேண்டும் எனும் எண்ணமும் உள்ளவர்களை தேவன் கைவிடுவதில்லை; அவர்களைவிட்டு அவரது கிருபை மாறுவதில்லை. இமைப்பொழுது தனது முகத்தை அவர் நமக்கு மறைத்தாலும் நித்திய கிருபையுடன் நமக்கு இரங்குவார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment