மரித்தாலும் பிழைக்கும் வாழ்க்கை

 ஆதவன் 🖋️ 676 ⛪ டிசம்பர் 04,  2022 ஞாயிற்றுக்கிழமை

 

"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்." ( யோவான் 11 : 25, 26 )

மரித்த லாசரின் சகோதரியாகிய மார்த்தாளிடம் இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகள். "ஆண்டவரே, நீர் இங்கேயே இருந்திருந்தால் எனது சகோதரன் மரித்திருக்க மாட்டான்" என்று கூறி அழுகின்றாள் மார்த்தாள். அவளிடம் பேசும்போது இயேசு கிறிஸ்து இன்றைய வார்த்தைகளைக் கூறி அவளைத் தேற்றுகின்றார். 

இங்கு இயேசு கூறும் வார்த்தைகள் ஆவிக்குரிய மரணத்தைக்குறித்தவையாகும். இரண்டு காரியங்களை இயேசு இங்கு குறிப்பிடுகின்றார். ஒன்று, "என்னை விசுவாசிப்பவன் மரித்தாலும் பிழைப்பான்" என்பது.  அதாவது ஒருவன் பாவம் செய்து பாவத்தில் மரித்த ஒரு  வாழ்வு  வாழ்ந்துகொண்டிருந்தாலும் கிறிஸ்துவை விசுவாசித்தால் அவன் பிழைப்பான். அவனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மேற்படி பாவம் செய்யாதபடி அவனை இரட்சித்து வழிநடத்துவார். 

இரண்டாவதாக, "உயிரோடிருந்து என்னை விசுவாசிப்பவன் என்றென்றும் மரியாமலும் இருப்பான்" என்பது.  கிறிஸ்துவின் மீப்பு அனுபவம் பெற்று பாவங்கள் மன்னிக்கப்பட்ட உயிருள்ள ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவன் என்றென்றும் மரணத்தைக் காணாத நித்திய ஜீவனை அடைவான்.

இந்த இரண்டு காரியங்களும் நமது ஆவிக்குரிய வாழ்வில் நடைபெற வேண்டும். முதலாவது பாவத்தால் மரித்துப்போயுள்ள நமது வாழ்க்கை பிழைக்கும் வாழ்க்கையாக மாறவேண்டும். அதற்கு நமது பாவங்களை அவர் மன்னிக்கும்படி கிறிஸ்துவிடம் வேண்டுதல் செய்து நாம்  பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்படி பாவ மன்னிப்பு பெற்றபின்னர், தொடர்ந்து ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் காத்துக்கொள்ளவேண்டும். அப்போது கிறிஸ்துவின் முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவனை நாம் அடையலாம். 

இது எப்படி என்பதைத்தான் "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்ற முதல் மூன்று வார்த்தைகள் கூறுகின்றன.  கிறிஸ்துவே மரித்து உயிர்த்த முதல் கனி. அவரே உயிர்த்தெழுதல், அவரே ஜீவன். எனவே அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நாமும் உயிர்த்தெழுவோம், நாமும் ஜீவனைக் கண்டடைவோம். 

பெயரளவில் ஆராதனைக் கிரிஸ்தவர்களாக நாம் இருந்தால் போதாது; ஆவிக்குரிய அனுபவமுள்ள உயிருள்ள கிறிஸ்தவர்களாக மாறவேண்டியது அவசியம். அத்தகைய  அனுபவ கிறிஸ்தவர்களாக நாம் மாறும்போதுதான் நாம் மற்றவர்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்க முடியும்.  வெறும் மதவாதியாக இருக்கும் நாம் அப்போதுதான் ஆவிக்குரிய ஆன்மீக கிறிஸ்தவர்களாக மாற முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்