Friday, December 09, 2022

தேவன் நமது தகப்பன்

ஆதவன் 🖋️ 683 ⛪ டிசம்பர் 11,  2022 ஞாயிற்றுக்கிழமை

"அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." ( எபேசியர் 3 : 12 )

இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் நமக்குக் கிடைக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் முக்கியமான ஆசீர்வாதம் பற்றி இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது. 

பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனை வழிபட்டாலும் அவர்கள் ஒருவித பயத்தோடேயே வழிபட்டுவந்தார்கள். தேவனை அவர்கள் ஒரு கண்டிப்பான அதிகாரியைப்போல எண்ணினர். "ஒரு தாய் தேற்றுவதுபோல நான் உன்னைத் தேற்றுவேன்", "ஆறுகளைக் கடக்கும்போது உன்னோடு நானிருப்பேன்", "அக்கினியில் நடக்கும்போதும் வேகாதிருப்பாய்", "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்", "உன்னை விடுவிக்கும்படி நான் உன்னோடே இருக்கிறேன்" என்று நூற்றுக்கணக்கான அன்பு வசனங்களைத் தேவன் அருளியிருந்தாலும் குறிப்பிட்ட சில தீர்க்கதரிசிகள் மட்டுமே அந்த அன்பை உணர்ந்து அனுபவித்துவந்தனர்.  

பொதுவாகவே  பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனது குரலுக்கு அஞ்சி ஒதுங்கினர்; தேவனது குரலைக் கேட்கப் பயப்பட்டனர். "மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்." ( யாத்திராகமம் 20 : 19 )

ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பயத்தை மாற்றினார். தேவன் ஒரு சிலரை மட்டும் தனிக் கவனம் செலுத்தி ஆதரிப்பவரல்ல. அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் அனைவருக்குமே அவர்  நெருக்கமாக உள்ளார். 

தேவன் நமது தகப்பன். தேவனை அப்பா என்று கூப்பிடும் வாய்ப்பினை இயேசு நமக்குத் தந்துள்ளார். இது பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் உணராதது. ஒரு உலகத் தகப்பனைபோலவும், அதற்கு மேலான தகப்பனாகவும் தேவன் இருக்கின்றார் எனும் அருமையான உண்மையினை இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுத்தந்துள்ளார்.   எனவேதான் அப்போஸ்தலரான் பவுல் அடிகள், "அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." என்கின்றார்.

அதாவது கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் நமக்கு முதலில் தைரியம் ஏற்படுகின்றது. காரணம் அவர் நமது தகப்பன். இரண்டாவது, திடமான நம்பிக்கை ஏற்படுகின்றது. தேவன் தகப்பனாக இருப்பதால், நம்மை எந்தச் சூழ்நிலையிலும் நம்மைக் கைவிடமாட்டார் எனும் நம்பிக்கை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நாம் தேவனிடம் சேர்வோம் எனும் மேலான பாக்கியம் நமக்குக் கிடைக்கின்றது. 

அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உயிருள்ள விசுவாசத்தோடு வாழ்வோம். இந்த விசுவாசமே நம்மை இரட்சிக்கும். இவ்வுலகு மற்றும் மறுமை இன்பத்தை பெற்று மகிழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


No comments: