- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
ஆதவன் 612 ⛪ அக்டோபர் 01, 2022 சனிக்கிழமை
"நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 14 )
கிறிஸ்துவின்மேல் நம்பிக்கைகொண்டு விசுவாசிகள் ஆகின்ற நாம் அவர்மேல் கொண்ட
நம்பிக்கையினை முடிவுவரைக் காத்துக்கொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.
எனக்குத் தெரிந்த சில பெயர் கிறிஸ்தவர்கள் தங்களது குடும்ப பிரச்சனைகள்,
நோய்களுக்காக பிற மதத்தினரைப்போல குறி கேட்கவும், மந்திரவாதம் செய்யவும்
முற்படுவதைப் பார்த்துள்ளேன். இது அவர்களுக்கு எள்ளளவும் கிறிஸ்துவின்மேல்
விசுவாசம் இல்லை என்பதையே காட்டுகின்றது.
கிறிஸ்துவின்மேல் நாம் கொண்டுள்ள சிறிது விசுவாசத்தை நாம்
காத்துக்கொண்டால்கூட அவர் நம்மை கனப்படுத்துவார். ஆம், அவர் நம்மிடம்
எதிர்பார்ப்பது கடுகளவு விசுவாசம்தான். (லூக்கா 17:6)
நாம் கிறிஸ்தவராக இருப்பதால் மற்றவர்களால் பகைக்கப்படலாம்; சில அரசாங்கச் சலுகைகள் நமக்கு கிடைக்காமல் போகலாம்.
அதற்காக நாம் கிறிஸ்துவை மறுதலிக்க முடியாது. ஆனால் இன்று பலர் அரசாங்கத்தின்
சலுகைகளைப் பெறுவதற்குவேண்டி கிறிஸ்துவை மறுதலிப்பவர்களாக இருக்கின்றனர்.
ஆனால், இன்றைய வசனம் கூறுவது இவற்றைவிட வேறான பொருளிலாகும். அதாவது,
ஆவிக்குரிய மறுதலிப்பு. உலகப்பிரகாரமான மறுதலிப்பைவிட, ஆவிக்குரிய வாழ்வில்
கிறிஸ்துவை மறுதலிப்பது அதிக தீமையானதாகும்.
ஒருவேளை நமது குடும்பத்தினர்; மனைவி அல்லது கணவர் கிறிஸ்துவ ஆவிக்குரிய
வாழ்வில் வளர்ச்சியடையாமல் இருக்கலாம். அவர்களுக்காக சிலமுரண்பாடான காரியங்களை நாம் செய்யவேண்டியிருக்கலாம்.
அத்தகைய நிலையில் மனத்தளவில்நாம் கிறிஸ்துவைவிட்டு மாறிடாமல் இருக்கவேண்டியது
அவசியம். மெய்யான ஆவிக்குரிய
வாழ்வு வாழ்பவர்களுக்கு இது ஒரு சிலுவை போன்றது.
மெய் தேவனை அறிந்துகொண்ட நாகமான் எலிசாவிடம் ரிம்மோன் கோவிலுக்குள் செல்ல
அனுமதியை கேட்டதுபோல (2 ராஜாக்கள் 5:18) தேவ அனுமதியோடு நமது இருதயம் கர்த்தரை
நோக்கி இருக்க நாம் சில காரியங்களைச் செய்யவேண்டியது இருக்கும். நமது தேவன் இருதயங்களை ஆராய்ந்து
அறிகின்றவர். நமது வாயில் சொல் பிறக்குமுன்பே அதனை அறிந்துள்ளவர். எனவே ஆவிக்குரிய
வாழ்வு வாழும் நமது செயல்பாடுகள் சிலவேளைகளில் முரண்பாடுபோல உலகுக்குத்
தெரிந்தாலும் தேவனுக்குமுன் அது நீதியும் சரியான செயலுமாக இருக்கும்.
இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிற மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கலாம். உங்கள் வீடுகளில் கிறிஸ்துவுக்கு பிரியமில்லாத காரியங்கள் நடைபெறலாம். உங்களைக் கட்டாயப்படுத்திச் சில காரியங்களைச் செய்யும்படிச் சொல்லலாம். மனம் தடுமாறவேண்டாம். உங்கள் இருதயம் மட்டும் கிறிஸ்துவுக்கு நேராக இருந்தால் போதும்.
ஆம் அன்பானவர்களே, ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை மட்டும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்பீர்களென்றால், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்பீர்கள்.
ஆதவன் 🖋️ 613 ⛪ அக்டோபர் 02, 2022 ஞாயிற்றுக்கிழமை
"வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது." ( நீதிமொழிகள் 28 : 9 )
கிறிஸ்தவர்கள் பலரும் ஜெபத்தைக்குறித்து கொண்டுள்ள கருத்துக்கள் விபரீதமானவை. பல ஊழியர்களும்கூட ஜெபம் என்பதை ஏதோ கடமைபோல எண்ணுகின்றனர். அதிகாலையில் ஜெபிக்கும் ஜெபத்துக்கு வல்லமை அதிகம், ஒரு நாளைக்கு பத்தில் ஒரு பங்கு நேரம் , அதாவது 2 மணி 40 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும், காலை ஜெபிப்பதற்குமுன் மற்றவர்களிடம் பேசக்கூடாது (ஏனெனில் ஆண்டவரிடம்தான் முதலில் பேசவேண்டுமாம்) இப்படிப் பல மூடத்தனமான எண்ணங்கள் கொண்டுள்ளனர். இவற்றை பல ஊழியர்கள் விசுவாசிகளுக்கும் கட்டளைபோலச் சொல்லிக்கொடுத்துள்ளனர்.
தேவன் நமது தாய் அல்லது தகப்பன் என்று வேதம் கூறுகின்றது. தேவனை தாயாக, தகப்பனாக எண்ணி மேற்படி கருத்துக்களை சிந்தித்துப்பாருங்கள். எந்த தாயும் தகப்பனும் தன்னிடம் தனது பிள்ளை அதிகாலையில் கேட்டால்தான் எதனையும் கொடுப்பேன் என்றோ, தினமும் 2 மணி 40 நிமிடம் தன்னுடன் பேசவேண்டுமென்றோ, காலையில் முதலில் தன்னிடம்தான் பேசவேண்டுமென்றோ நிபந்தனை விதிப்பதில்லை. அடிப்படை அன்புதான் நம்மை அவர்களோடும் அவர்களை நம்மோடும் பிணைத்துள்ளது. இதுபோல தேவனை நாம் தாயும் தகப்பனுமாக எண்ணும்போதுதான் அவரிடம் அன்பு ஏற்படுமே தவிர மற்றபடி அன்பு ஏற்படாது.
மட்டுமல்ல, எந்த தாயும் தகப்பனும் தனது பிள்ளை தனது சொல்படி கேட்டு நல்ல ஒழுக்கமும் நேர்மையுமுள்ளவனாக வளரவேண்டுமென்றே விரும்புவார்கள். துன்மார்க்கமாய் அலையும் தறுதலைப் பிள்ளையைப் பெற்றவர்கள் வெட்கப்படுவார்களேதவிர அந்த பிள்ளைக்கு எதனையும் இரங்கிச் செய்யமாட்டார்கள்.
ஆம், இதுபோலவே நாம் தேவனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளைக் கொண்டிருந்தோமானால் தேவன் நமது ஜெபங்களைக் கேட்பதில்லை. வேதத்தில் தேவன் நாம் நடக்க வேண்டிய வழிகளைக் கூறியுள்ளார். அந்த வேதத்தையே கேட்கமாட்டோம் என்று கூறுபவனது ஜெபத்தைத் தேவன் எப்படிக் கேட்பார்? எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது". என்று.
ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன் இதனை ஏற்கெனவே கூறியுள்ளார். "நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது." ( ஏசாயா 1 : 15 )
இன்று கிறிஸ்தவர்களில் பலர் நாம் சுவிசேஷம் சொல்லும்போது நகைக்கின்றனர். எங்களுக்கு எங்கள் பாரம்பரிய முறைமைகள்போதும் என்கின்றனர். அன்பானவர்களே, பாரம்பரிய முறைமைகள் அல்ல, வேதம் கூறும் முறைமைகள் தான் முக்கியம். நமது ஜெபங்கள் கேட்கப்பட வேண்டுமானால் முதலில் நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறவேண்டும்.
வேத வசனங்களைக் கேட்கக் கேட்க நாம் நமது பாவங்களை, குற்றங்களை உணர்ந்துகொள்கின்றோம். ஒரு கண்ணாடி எப்படி நமது முகத்தின் அழகைப் பிரதிபலிக்கின்றதோ அதுபோல வேத வசனங்கள் நமது அகத்தின் அழகினைப் பிரதிபலிக்கும். நமது ஆவிக்குரிய வாழ்வை அவை சீர்படுத்தும். எனவேதான் நாம் வேதத்துக்குச் செவிகொடுக்காவேண்டியது அவசியம். அப்படி நம்மை நாம் சீர்படுத்தும்போது மட்டுமே தேவனுக்கு ஏற்புடையவர்களாகின்றோம். அப்போதுதான்தேவன் நமது ஜெபத்தைக் கேட்டு நமக்குப் பதிலளிப்பார்.
ஆதவன் 🖋️ 614 ⛪ அக்டோபர் 03, 2022 திங்கள்கிழமை
"இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." ( ஏசாயா 48 : 17 )
நமது தேவனாகிய கர்த்தர் உலக செல்வ ஆசீர்வாதங்களைத் தந்து நம்மை நடத்துபவரல்ல; மாறாக, நம்மை அவர் விரும்பும் பரிசுத்தமான வழியில் நடக்க விரும்புபவர், நடத்துபவர். நான் பரிசுத்தர் எனவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்று கூறியவர் அப்படி நாம் பரிசுத்த வாழ்க்கை வாழ உதவி செய்பவராகவும் இருக்கின்றார்.
கர்த்தரின் பரிசுத்தமான வழியில் நாம் நடப்பதற்கு வழிகாட்டவும் நமக்கு முன்மாதிரியாக அந்தப் பரிசுத்த வழியில் நடந்து மாதிரி காண்பிக்கவும் இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். எனவேதான் அவர் கூறினார், " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) ஆம், பரிசுத்தரான பிதாவை அடைந்திட கிறிஸ்து ஒருவரே வழியும் உண்மையாய் இருக்கின்றார்.
இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்த நாட்களில் தனது சீடர்களோடு இருந்து நடத்தினார். அவர் தனது மீட்புப் பணியினை நிறைவு செய்து மீண்டும் தந்தையிடம் செல்லுமுன்பாக தந்து சீடர்களை வழிநடத்தவும், தன்னை விசுவாசிப்பவர்களை பரிசுத்த வழியில் நடத்திடவும் பரிசுத்த ஆவியனவரை வாக்களித்தார். பரிசுத்த ஆவியான "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து.
"பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று வாக்களித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று பரிசுத்த ஆவியாக நம்முடனிருத்து நடத்துகின்றார்.
ஆனால், இன்றைய பெரும்பாலான மக்களுக்கு இயேசு கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களை கொடுக்கும் ஒரு தெய்வமாகவே காண்பிக்கப்படுகின்றார். அன்பானவர்களே, இந்த உலகத்தில் நடக்கக்கூடிய காரியங்களைக்கொண்டே இது தவறான எண்ணம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். இன்று உலக அளவில் ஆசீர்வாதங்களை பெற்றுள்ளவர்கள் கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. கிறிஸ்துவை அறியாத, அவரது போதனைகளைக் கடைபிடிக்காதவர்களே இன்று பெரும் உலக பணக்காரர்களாகவுள்ளனர். இதிலிருந்தே கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களுக்காக வரவில்லை என்பது தெளிவு.
கிறிஸ்து இல்லாத வாழ்க்கையில் எவ்வளவு பணமோ பதவியோ இருந்தாலும் அங்கு பரிசுத்தம் இருக்காது; தேவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை இருக்காது. சமுதாயத்தில் மதிப்போடு பார்க்கப்படும் பலர் சில வேளைகளில் தவறு செய்து சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களைப்பற்றி வெளிவரும் செய்திகள், "ஐயோ, இவரா இப்படியெல்லாம் வாழ்ந்தார்?' என உலகம் ஆச்சரியப்படுகின்றது. ஆனால் நாம் கிறித்துவுக்குள் இருந்தால் இந்த ஆச்சரியம் நமக்கு வராது. காரணம், கிறிஸ்து இல்லாத வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென்று நமக்குத் தெரியும்.
அன்பானவர்களே, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற நம் தேவனாகிய கர்த்தரிடம் பரிசுத்த ஆவியானவரை வேண்டுவோம். அவரே நம்மை நீதியில் பாதையில் நடத்தி நித்திய ஜீவனை நாம் பெற்றிட உதவிட முடியும்.
ஆதவன் 🖋️ 615 ⛪ அக்டோபர் 04, 2022 செவ்வாய்க்கிழமை
"அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்." ( லுூக்கா 16 : 31 )
இன்று கடவுளைப்பற்றி பேசும்போது சிலர், "கடவுள் என ஒருவர் உண்டென்று சொன்னால் அவர் என்னிடம் நேரில் வந்து பேசட்டும் , அப்போது நான் நம்புகின்றேன்" என்று கூறுவதுண்டு. கடவுளுக்கு ஒவ்வொரு மனிதனிடமும் வந்து நான் இருக்கிறேன் என்று மெய்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. எவர்கள் தங்களைத் தாழ்த்தி உண்மையான மனதுடன் அவரைத் தேடுகிறார்களோ அவர்களுக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவார்.
இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து கூறிய செல்வந்தனும் லாசரும் உவமையில் கூறப்பட்டுள்ளது. மரித்து புதைக்கப்பட்ட செல்வந்தன் பாதாளத்திலிருந்து மேலே பரலோகத்தில் ஆபிரகாமின் மடியில் இருக்கும் லாசரைப் பார்க்கின்றான். அவனுக்கும் ஆபிரகாமுக்கு நடந்த உரையாடலின் இறுதியில் அவன், லாசரை தனது சகோதரர்களிடம் அனுப்பி அவர்களை மனம்திரும்பி நல்ல வாழ்க்கை வாழவும் இந்த பாதாளத்தில் அவர்களும் வராமல் இருக்கவும் அறிவுறுத்த அனுப்புமாறு வேண்டுகின்றான். அவனுக்கு ஆபிரகாம் கூறிய பதில்தான் இன்றைய வசனம்.
எனது நண்பர் சகோதரர் சொர்ணகுமார் (இயேசு விசாரிக்கிறார் ஊழியங்கள்) அவர்கள் ஒருமுறை தான் சந்தித்து உரையாடிய ஒரு சாட்சியைப்பற்றி என்னிடம் கூறினார்கள்.
கிறிஸ்துவை அறியாத சமூகத்தில் பிறந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அவரை அவரது மத நம்பிக்கையின்படி செய்யவேண்டிய அனைத்துச் சடங்குகளும் செய்து மயானத்தில் எரியூட்டுவதற்குக் கொண்டு வந்தார்கள். அங்கும் சில சடங்குகளைச் செய்து அவரை எரிப்பதற்குக் கொண்டுசெல்லும் போது அவர் உயிர்பெற்று எழுந்துவிட்டார். அவரைத் தூக்கிச் சென்றவர்கள் பயந்து அலறி ஓடினார்கள்.
அவர் எழுந்து தனது வீட்டிற்குச் சென்றார். வீட்டிலிருந்தவர்களும் பயந்து பிசாசு என அலறினர். அவர் தான் மரித்தபின் மேலே சென்றதாகவும் அங்கு இயேசு கிறிஸ்துவைக் கண்டதாகவம் அவரே தன்னைப்பற்றி சாட்சிகொடுக்க மீண்டும் பூமியில் அனுப்பியதாகவும் கூறினார். அவர் கூறியதை அவர் சமூகத்தைச் சார்ந்த ஒருவர்கூட நம்பவில்லை. பிசாசு என கருதி அவரை வீட்டிலேயே சேர்க்கவில்லை. அவர் அருகிலிருந்த ஊரிலிருந்த கிறிஸ்தவ ஊழியரிடம் சென்று தனது அனுபவத்தைச் சொல்லி, கிறிஸ்தவ அனுபவத்தில் வளர்ந்து ஞானஸ்நானம் பெற்று அவரோடு இணைந்து இப்போது ஊழியம் செய்து வருகின்றார். அந்த மனிதனே மேற்படி அனுபவத்தை நேரடியாக எனது சகோதர நண்பனிடம் கூறியுள்ளார்.
ஆம் அன்பானவர்களே, வேதத்தில் கூறப்பட்டுள்ள காரியங்களை விசுவாச கண்கொண்டு பார்க்காமல் குதர்க்கம் பேசுபவர்கள் மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள். குறிப்பிட்ட ஒரு சமூகத்தை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த தேவன் தெரிந்துகொண்ட மேற்படி சாட்சியில் கூறப்பட்ட நபர் கூறியதை ஒருவர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை; மனம்திரும்பவுமில்லை. காரணம், அவர்கள் தங்களது மத நம்பிக்கையை விட்டு வெளிவர விரும்பவில்லை.
வேத சத்தியங்கள் பலவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டியவை. அவைகளைக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தோமானால் நாம் உண்மையை அறியமுடியாது. இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்த பின் தனது சீடர்களுக்குத் தோன்றியபோது ஒரு சீடரான தோமா அவர்களோடு இல்லை. அவர்கள் கிறிஸ்துவை நாங்கள் கண்டோம் என்று கூறியபோது தோமா நம்பவில்லை. ஆனால் அவர் மறுபடி காட்சியளித்தபோது தோமா அவரைக்கண்டு விசுவாசித்தார். அப்போது இயேசு கிறிஸ்து, "தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்." ( யோவான் 20 : 29 )
ஆம் அன்பானவர்களே, வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நம்பி ஏற்றுக்கொள்வோம். அப்போதுதான் நாம் மேலான வெளிப்பாடுகளை பெற்று தேவனையும் அவரது அன்பினையும் ருசிக்கமுடியும். பரலோகம், நரகம் இவை நம்பமுடியாத கட்டுக்கதைகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் இறுதியில் ஆபிரகாமிடம் கெஞ்சிய செல்வந்தனைப்போலவே இருப்பார்கள்.
ஆதவன் 🖋️ 616 ⛪ அக்டோபர் 05, 2022 புதன்கிழமை
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே." ( 2 கொரிந்தியர் 8 : 9 )
தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டுமென்பதற்காக தாய் தகப்பன்மார் பல்வேறு உபத்திரவங்களைச் சகிக்கின்றனர்; கடுமையாக உழைக்கின்றனர். ஒருமுறை 80 வயதில் பனையேறும் ஒரு முதியவரைச் சந்தித்தேன். இந்தத் தள்ளாடும் வயதிலும் அவர் தனது குடும்பத்துக்காக உழைக்கின்றார். இதுவரைத் திருமணமாகாத தனது மகளை நல்ல இடத்தில திருமணம் செய்துகொடுக்க வேண்டுமென்பதே அவரது எண்ணமெல்லாம். இதுபோலவே கிடைக்கும் சிறு வருமானத்திலும் தங்களது ஆசைகளை அடக்கி தங்கள் குழந்தைகளது படிப்புக்காக தியாகம் செய்கின்றனர் பல பெற்றோர்கள்.
ஆம் அன்பானவர்களே, இதுபோலவே நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இருக்கிறார் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. அவர் செல்வந்தன்தான். ஆனால் நாம் செல்வந்தர்கள் ஆகவேண்டும் என்பதற்காக; நாம் மீட்கப்பட்டு பரலோகத்தைச் சுதந்தரிக்கவேண்டும் என்பதற்காக அவர் தந்து செல்வ நிலைமையை விட்டுவிட்டு நமக்காக தரித்திரனானார். எப்படி ஒரு தாய் தனது பிள்ளைக்காக தியாகம் செய்வாளோ அதுபோல அவர் மிகப்பெரிய தியாகம் செய்தார்.
"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." ( பிலிப்பியர் 2 : 6,7 )
அடிமை என்பவன் எந்த அடிப்படை மனித உரிமையும் இல்லாதவன். இந்த அண்ட சராசரங்களைப் படைத்து ஆளும் தேவன் ஒரு அடிமையைப்போல ஆனார் என்பதை எண்ணிப்பாருங்கள். எதற்காக? நமக்காக. நாம் மீட்பு பெறவேண்டுமென்பதற்காக. நாம் முன்பு பார்த்த உதாரணத்தில் அந்த முதியவர் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உழைத்தார். ஆனால் கிறிஸ்து இயேசுவோ எல்லாம் இருந்தும் நமக்காகத் தன்னை ஒன்றுமில்லாதவராக மாற்றினார். இந்த விதத்தில் அவரது அன்பு மனிதர்களது அன்பைவிட பல மடங்கு மேலானதல்லவா?
வறுமையில் பல தியாகங்கள் செய்து சேகரித்தப் பணத்தில் மகனைப் படிக்கவைக்கும் தாய், அந்த மகன் வேண்டாத நண்பர்களது சகவாசம்கொண்டு படிக்காமல் தாய் அனுப்பும் பணத்தையும் தாறுமாறாய்ச் செலவழித்தால் அந்தத் தாய் எவ்வளவு வேதனைப்படுவாள்?
அன்பானவர்களே, இன்று பலரும் கிறிஸ்துவின் மீட்பினை அலட்சியம்செய்து உலக ஆசையில் மூழ்கி கிறிஸ்துவை மறுதலித்து வாழும்போது அவர் இதுபோலவே வேதனைப்படுவார் என்பதை எண்ணிப்பாருங்கள். நமக்காகத் தரித்திரரான இயேசு கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் அவரது விருப்பப்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம்.
அன்பான இயேசுவே இதனை நாட்களும் உமது மேலான அன்பை உணராமல் அலட்சியமாக வாழ்ந்துவிட்டேன். என்னை மன்னியும். உமக்கு ஏற்ற வாழ்க்கை வாழ இன்றே என்னை ஒப்புக்கொடுக்கிறேன். என் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமது பரிசுத்த ஆவியானவரை எனக்குத் தந்து உமக்கு ஏற்புடைய வழியில் நான் தொடர்ந்து நடக்க எனக்கு உதவி செய்யும் என வேண்டுதல் செய்வோம்.
நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவர் நமக்காகச் செய்த உயிர் தியாகம் வீணாவதை அவர் விரும்பமாட்டார். தனிமையில் கிறிஸ்துவிடம் மனம் திறந்து பேசுங்கள். மேலான தேவ அனுபவத்தை அளித்து நம்மை மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார்.
ஆதவன் 🖋️ 617 ⛪ அக்டோபர் 06, 2022 வியாழக்கிழமை
"துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்." ( எபிரெயர் 10 : 22 )
பழைய ஏற்பாட்டு முறைமையின்படி ஆசாரியன் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கமுடியும். ஆனால் இன்று புதிய ஏற்பாட்டின் முறைமையில் நாம் எல்லோருமே ஆசாரியர்கள்தான். எனவே நாம் அனைவருமே பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட கிறிஸ்துவே தனது இரத்தத்தால் வழி உண்டாக்கியுள்ளார்.
இதனையே இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றன:- "ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்," ( எபிரெயர் 10 : 19, 20 ) என்று.
தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினால் ( எபிரெயர் 10 : 21 ) நாம் பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய உரிமை பெற்றுள்ளோம். ஆனால் அப்படி நுழைந்திட இன்றைய தியான வசனம் இரண்டு நிபந்தனைகளை கூறுகின்றது. அவை:-
1. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம்
2. சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரம்
ஆம் அன்பானவர்களே, முதலாவது, நமது இருதயம் இயேசு கிறித்துவின் இரத்தத்தால் தெளித்து துப்புரவாக்கப்பட்ட சுத்த இருதயமாக இருக்கவேண்டியது அவசியம். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரே? இருதயத்தில் சுத்தமில்லாமல் நாம் செய்யும் வழிபாடுகளோ, ஆராதனைகளோ, நாம் செலுத்தும் காணிக்கைகளோ நம்மைத் தேவனிடம் சேர்க்காது.
அதுபோல நமது உடலானது பாவ பழுதற்றதாக இருக்கவேண்டியது அவசியம். அதனையே சுத்த ஜாலத்தால் கழுவப்பட்ட சரீரம் என்று வசனம் கூறுகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று எழுதுகின்றார்.
உடலால் பாவச் சேற்றில் வாழ்ந்துவிட்டு அதனைப்பற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நாம் செய்யும் ஆராதனைகள் தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. நமது உடலை தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். ஆடு மாடுகளைப் பலியிடுவதில்கூட பழுதற்றவைகளையே பலியிடவேண்டுமென்று பழைய ஏற்பாட்டு முறைமையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல நமது உடலை தேவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கும்போது அது பரிசுத்தமானதாக, பாவமில்லாததாக இருக்கவேண்டியது அவசியம்.
அன்பானவர்களே, நமக்கு ஏற்கெனவே மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட நமது பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்து தனது சொந்த இரத்ததால் வழியமைத்துக் கொடுத்துள்ளார். அவரது இரத்ததால் உண்டாக்கப்பட்ட மீட்பினை நாம் விசுவாசிக்கவேண்டும். அவரது இரத்தத்தால் நாம் கழுவப்பட நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். அவர் நம்மைத் தூய்மையாக்கி மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழையத் தகுதிப்படுத்துவார்.
அப்போதுதான் நாம் இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் பரலோகத்தில் சேரமுடியும்.
உள்ளத்திலும் உடலிலும் தூய்மையில்லாமல் நாம் செய்யும் எந்த ஆராதனையும், சடங்குகளும், காணிக்கைகளும் நம்மைப் பரலோகம் கொண்டு செல்லாது.
ஆதவன் 🖋️ 618 ⛪ அக்டோபர் 07, 2022 வெள்ளிக்கிழமை
"மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?" ( யோபு 4 : 17 )
யோபு சாத்தானால் சோதிக்கப்பட்டு அனைத்துச் செல்வங்களையும் உடல் நலத்தையும் இழந்து இருந்ததைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கவந்த தேமானியனாகிய எலிப்பாஸ் எனும் நண்பனைப்பார்த்து தேவன் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார்.
இன்றைய வசனம், மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? என்று சந்தேக கேள்வி எழுப்புகின்றது. இதற்குப் பதில் மனிதன் தேவனைவிட நீதிமானாகவும் சுத்தமானவனாகவும் முடியாது என்பதுதான். ஆனால் புதிய ஏற்பாடு, நீதிமானாகவும் சுத்தமானவனாகவும் இல்லாதவனையும் தேவன் தன்னோடு தனக்கு ஒப்பாகச் சேர்த்துக்கொள்ள விரும்புவதைக் கூறுகின்றது. இதற்காக இயேசு கிறிஸ்து பின்வருமாறு ஜெபிக்கவும் செய்தார்.
"பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 ) அதாவது, நீதியும் பரிசுத்தமும் இல்லாத மனிதர்களும் பிதாவோடும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் ஒன்றாக இருக்க முடியும். இந்த மேன்மை மனிதனுக்கு இயேசு கிறிஸ்துவினால் கிடைத்தது.
ஆனால் இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களை மிஞ்சிய நீதிமானாகக் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். அந்த மிஞ்சுதல் அவர்களை கடவுளைவிடத் தாங்கள் மேலானவர்கள் என எண்ணும் நிலைமைக்குக் கொண்டுபோய்விடுகின்றது. இன்று இதுபோல பல ஊழியர்கள் இருக்கின்றனர். தங்களது பலவீனங்களை மறைத்து; தங்களது பாவங்களை மறைத்து வாழ்ந்துகொண்டு அவை வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நீதிமான்கள்போல நடிக்கின்றனர். அந்த நடிப்பு தங்களை தேவனைவிட நீதிமானாக அவர்களை வெளிக்காட்டிகொள்ளச் செய்கின்றது.
ஒருமுறை நாங்கள் சிலர் ஒரு ஊழியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, "நடிகர் விஜய் இருக்கிறாரே....." என்று எனது நண்பரான ஊழியர் ஒருவர் பேசத் துவங்கவும் அந்த ஊழியர், "விஜய்யா? எனக்கு அப்படி ஒருவரைத் தெரியாது" என்றார். அதாவது நடிகர் பெயரைத் தெரியுமென்று கூறினால் இவரை உலக ஆசையை விடாதவர் என்று மற்றவர்கள் எண்ணிக்கொள்வார்களாம். இத்தகைய ஊழியர்களே தேவனைவிட தங்களை மேலானவர்களாக காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்.
ஆபாசப் படங்களைத் தங்கள் கைபேசியில் பார்த்து ரசிக்கும் ஊழியர்கள் பலர் உண்டு. ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து ரசிக்கும் ஊழியர்கள் உண்டு. ஆனால் இவர்களது பிரசங்கங்களில் தங்களைத் தேவ தூதர்கள்போலவும் சபைக்குவரும் விசுவாசிகளை மகா பாவிகள்போலவும் கருதி பேசுவார்கள். இத்தகைய ஊழியர்கள் மனம் திரும்பி தேவனின் இரகத்தைக் கெஞ்சவேண்டியது அவசியம்.
இயேசு கிறிஸ்து கூறினார், "சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல." ( மத்தேயு 10 : 24 ) என்று. மேலும், "சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்." என்றார். எனவே நாம் கிறிஸ்துவைப்போலவே வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
அன்பானவர்களே, இன்றைய வசனம் கூறுகின்றபடி நாம் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாக முடியாது; நம்மை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமானாக முடியாது; ஆனால் கிறிஸ்து இயேசுவின் கிருபையினால் அவருக்கு ஒப்பானவர்களாக மாற முடியும். அப்படி நம்மை மாற்றிடவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். நம்மை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து மீட்பு அனுபவம் பெற்று வாழும்போது அவர் நம்மை அதற்குத் தகுதி ஆக்குவார். கிறிஸ்துவைப்போல அவர் நம்மை மாற்றிட வேண்டுவோம். இத்தகைய வேண்டுதல்மேல் அவர் அதிக பிரியமுள்ளவராய் இருக்கிறார்.
ஆதவன் 🖋️ 619 ⛪ அக்டோபர் 08, 2022 சனிக்கிழமை
"சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்." ( மத்தேயு 16 : 16 )
இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அனைவருமே கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படித் தன்னை அறிக்கையிட்ட பேதுருவை நோக்கிக் கூறினார்:-
"யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்." ( மத்தேயு 16 : 17 )
மேற்படி வசனத்தின்மூலம் நாம் அறிந்துகொள்வது கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடவேண்டுமானால் நமக்குப் பிதாவாகிய தேவன் அருளும் ஆவிக்குரிய வெளிப்பாடு வேண்டும். இயேசு கிறிஸ்துவோடு இருந்த சீடர்களுக்கே இப்படி வெளிப்பாடு தேவையாயிருக்கும்போது நமக்கு அது எவ்வளவு அதிகம் தேவை!
இயேசு கிறிஸ்துவைப் பலரும் பலவிதமாக எண்ணியிருந்தார்கள். சிலர் யோவான் ஸ்நானகன் என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது எலியா என்றும் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் எண்ணிக்கொண்டனர். (மத்தேயு 16:14) மற்றபடி அவரைப் பார்த்த பலரும் மரியாளின் மகனாக யோசேப்பின் மகனாகத்தான் பார்த்தனர்.
இன்றும் இயேசு கிறிஸ்துவிடம் அதிசய அற்புதங்களை எதிர்பார்த்து வரும் விசுவாசிகளும், அற்புத அதிசயங்களையே போதிக்கும் ஊழியர்களும் இப்படிக் கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று அறியாதவர்களே. இயேசு கிறிஸ்துவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவேண்டுமானால் அவர் உலகினில் வந்த நோக்கத்தை அறிந்திருக்கவேண்டும். அதனை அப்போஸ்தலரான யோவான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது." ( யோவான் 20 : 31 ) ஆம், நித்திய ஜீவனுக்காக கிறிஸ்துவைத் தேடுபவர்கள் மட்டுமே இயேசுவை தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்தவர்கள். இயேசு கிறிஸ்து மந்திரவாதம்போல அதிசயங்களைச் செய்துகாட்ட வரவில்லை. அவர் அதிசயங்களை செய்தது மக்கள் தான் சொல்வதை நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் ; அதனால் மீட்பு அனுபவம் பெறவேண்டும் என்பதகற்காகவே.
உலக ஞானத்தினாலும் கல்வி அறிவினாலும் ஒருவேளை தேவனைப்பற்றி அறியலாம் ஆனால் தேவனை அறியமுடியாது. இதுபோல பரலோக ராஜ்ய ரகசியங்களை அறிந்தவர்களே கிறிஸ்துவை தேவனுடைய குமாரனாக அறியமுடியும். அதற்கு சிறு குழந்தைக்ளுக்குள்ள கபடமற்ற இருதயம் தேவை. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்"( மத்தேயு 11 : 25 ) என்று.
அன்பானவர்களே, எல்லோரும் சொல்வதாலோ அல்லது நமக்குச் சிறு வயதில் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் சொல்லிக்கொடுத்ததாலோ நாம் இயேசு தேவனுடைய குமாரன் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவரை வாழ்வில் உணர்ந்து அனுபவித்து பேதுருவைப்போல அறிக்கையிடும் நிலைமைக்கு வரவேண்டும். கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் இருந்தால் மட்டுமே நாமும் பேதுருவைப்போல இயேசுவை "ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து." என்று உறுதியாக உண்மையாக அறிக்கையிடமுடியும். இல்லாவிட்டால் நாம் சாதாரண ஒரு மதவாதியாக நமக்குச் சொல்லிக்கொடுத்ததை மட்டும் கிளிப்பிள்ளைபோலத் தான் கூறிக்கொண்டிருப்போம்.
கிறிஸ்துவை வாழ்வில் அறிந்து, அவர் தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட வேண்டிய கிருபைக்காக வேண்டுவோம்.
ஆதவன் 🖋️ 620 ⛪ அக்டோபர் 09, 2022 ஞாயிற்றுக்கிழமை
"விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்." ( எபிரெயர் 11 : 9 )
ஆபிரகாமுக்குத் தேவன் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை வாக்களித்திருந்தார். ஆபிரகாம் அதனை முழு விசுவாசத்தோடு ஏற்று வாழ்ந்தார். தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் என்ன? "நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்." ( ஆதியாகமம் 17 : 8 ) என்பதே அது.
ஆராமில் குடியிருந்தபோது "கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ( ஆதியாகமம் 12 : 1, 2 ) என்று வாக்களித்தார். அந்த தேவ வாக்குறுதியை நம்பி தனது வீடு வாசல், சொத்துக்களை விட்டுவிட்டு ஆபிரகாம் பயணமானார். தான் போகுமிடம் எது என்பது தெரியாமலே ஆபிரகாம் புறப்பட்டுப் போனார். (எபிரெயர் 11:8)
ஆனால் தேவன் வாக்களித்த வாக்குறுதி உடனேயே நிறைவேறிடவில்லை. தேவன் அளித்த வாக்குத்தத்தை ஆபிரகாம் விசுவாசித்து ஒரு பரதேசியைப்போல அங்கு வாழ்ந்திருந்தார். அவரோடு வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கும் யாக்கோபும் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்.
பரதேசி என்பதற்கு வீடு வாசல் அற்றவன் என்று பொருள். ஒரு உதாரணத்துக்கு இப்படி எண்ணிப்பாருங்கள்... பேருந்து நிலையங்களின் அருகில் கூடாரம் அடித்துத் தங்கியிருக்கும் பரதேசியாகிய நரிக்குறவர் ஒருவரிடம், "இந்த நகரத்தை உனக்குச் சொந்தமாகத் தருவேன்". என்று கூறுவதுபோல உள்ளது தேவன் கூறுவது. இப்படிக் கூறுவதை எளிதில் நம்பிவிடமுடியாது. ஆனால், தேவனிடம் அசைக்க முடியாத விசுவாசமுள்ளவனாகிய ஆபிரகாம் அதனை நம்பினார்.
அப்படி நம்பியதால், "தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்." ( எபிரெயர் 11 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது.
தனது தேசத்தை விட்டுவிட்டு வந்த ஆபிரகாம் இங்குள்ளச் சூழ்நிலைகளைப் பார்த்து தேவனது வாக்குறுதியைச் சந்தேகித்து மீண்டும் தனது சுய தேசத்துக்குத் திருப்பிச்செல்ல எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் அவரால் திரும்பிச் சென்றிருக்கமுடியும். இதனையே, "தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்." ( எபிரெயர் 11 : 15,16 ) என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆபிரகாமுக்குத் தேவன் அளித்த வாக்குத்தத்தம் நிறைவேற ஏறக்குறைய 450 ஆண்டுகள் ஆயின. அதனைப் பார்ப்பதற்கு ஆபிரகாம் உயிரோடு இல்லை. மரணமட்டும் ஆபிரகாம் தேவனது வாக்குறுதியை விசுவாசித்து பின்மாறாமல் இருந்து தனது சந்ததிகள் ஆசீர்வாதமான தேசத்தை சுதந்தரிக்கக் காரணமானார். அன்பானவர்களே, கர்த்தரது வாக்குறுதிகளை நம்பி பொறுமையோடு காத்திருப்போம். பொய் சொல்ல தேவன் மனிதனல்ல.
"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )
ஆதவன் 🖋️ 621 ⛪ அக்டோபர் 10, 2022 திங்கள்கிழமை
"நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது." ( எபேசியர் 4 : 26 )
இன்று நாம் தினசரி செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் பல்வேறு கொலைகள், கொலை முயற்சிகள், கற்பழிப்புகள், ஏமாற்று போன்ற செய்திகளை அதிகமாகப் படிக்கின்றோம்; பார்க்கின்றோம். இதுவரை நாம் கேள்விப்படாத புதிய புதிய முறைகளில் கொலைகள் நடக்கின்றன. பெரும்பாலான மூர்க்கமான காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணம் கோபம்தான்.
கோபம் வராத மனிதர்கள் உலகினில் இல்லை. ஆவிக்குரிய மனிதர்களும் கோபமடைவது தவிர்க்கமுடியாதது. இயேசு கிறிஸ்துவும் சில வேளைகளில் கோபமடைந்தார். அனால் மற்றவர்களைவிட நாம் இந்தக் கோப விஷயத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும். அதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, "கோபம் கொண்டாலும் பாவ காரியங்களில் ஈடுபடாதிருங்கள்" என்கின்றார். மேலும் அந்தக் கோபத்தை இருதயத்தில் வைத்துக்கொண்டு இருக்காதிருங்கள். நீங்கள் கோபமடைந்தாலும் சூரியன் மறைவதற்குள் அது தணியக்கடவது என்கின்றார்.
ஏனெனில், இரவு நேரங்களில்தான் மனமானது பல தேவையில்லாத விஷயங்களைச் சிந்திக்கும். அது பல்வேறு பாவக் காரியங்களில் ஈடுபடச் செய்யும். சூரியன் மறைவதற்குள் கோபம் தணியாவிட்டால் எப்படிப் பழிவாங்கலாம் என்று மனம் சிந்திக்கும். எனவேதான் பகல் பொழுதைவிட இரவு நேரங்களில் கொலைகளும் இதர சட்டத்துக்குப் புறம்பானச் செயல்களும் அதிகமாக நடக்கின்றன.
நீதிமொழிகள் புத்தகத்தில், "உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது" ( நீதிமொழிகள் 27 : 4 ) என்று வாசிக்கின்றோம். ஆம், கோபம் நிஷ்டூரமானச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டிவிடும்.
"உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்." ( பிரசங்கி 7 : 9 ) என்கின்றது பிரசங்கி. அதாவது இந்த வசனம் கோபம் கொள்பவன் மூடன் என்று கூடுகின்றது. "மூடனுக்குக் கோபம் மூக்கின்மேலே" என்று ஒரு தமிழ் பழமொழியே உண்டு. பொதுவாக இந்த உலகத்தில் கிறிஸ்துவை அறியாத ஞானிகள்கூட அதிக பொறுமையுடன் இருக்கின்றனர். ஆம், ஞானம் பொறுமையை உண்டாக்கும்.
சரி, ஆவிக்குரிய நாம் இந்தக் கோபத்தை அடக்குவது எப்படி? அது அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் செய்யும்போது மட்டுமே அடங்கும். ஏனெனில் அப்படிச் செய்யும்போது கோபம் தணிந்து தேவ சமாதானம் நமக்குள் வரும். அப்போது இன்றைய வசனம் கூறுவதுபோல சூரியன் மறைவதற்குள் நமது கோபம் நம்மைவிட்டு மறையும். ஆம், "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 )
மேலும், கோபத்தை அடக்காமல் இருந்தோமானால் நாம் தேவ நீதி செயல்பட விடாமல் தடுப்பவர்களாக இருப்போம். தேவன் ஒவ்வொரு காரியத்தையும் நீதியாய் நடப்பிக்கின்றார். நாம் கோபம் கொண்டு விரைந்து செயல்படும்போது தேவன் செயல்படமுடியாமல் போகின்றது. "மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே."( யாக்கோபு 1 : 20 )
அன்பானவர்களே, கூடுமான மட்டும் கோபத்தைத் தவிர்ப்போம். அப்படி கோபம் கொண்டாலும் பவுல் அடிகள் கூறுவதுபோல அதனை வைராக்யமாகக் கொள்ளாமல் இரவு விடிவதற்குள் மறந்துவிடுவோம். அப்படி மறப்பதற்கு பவுல் அடிகள் கூறுவதுபோல அனைத்துக்காகவும் ஸ்தோத்திரம் செய்வோம்.
ஆதவன் 🖋️ 622 ⛪ அக்டோபர் 11, 2022 செவ்வாய்க்கிழமை
"பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்". ( நீதிமொழிகள் 15 : 27 )
பரிதானம் என்பது லஞ்சம் வாங்குவதைக் குறிக்கின்றது. லஞ்சம் வாங்குவதன் காரணம் பொருளாசையாகும். சிலர் குறைந்த வருமானத்திலும் நேர்மையாக வாழுகின்றனர். ஆனால் பலர் நல்ல வேலை, நல்ல உயர்ந்த பதவி, நல்ல சம்பளம் இருந்தும் லஞ்சம் வாங்கி வாழுகின்றனர். இன்றைய வசனம் கூறுகின்றது, பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான். அதாவது பொருளாசைப்பிடித்து குறுக்கு வழியில் செல்கிறவனது வீடு சமாதானமின்றி கலைந்துபோகும். லஞ்சத்தை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்துவந்தபோது பலரும் அவரிடம் வந்தனர். அப்போது, "போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்." (லூக்கா 3:14) இந்தக்காலத்தில் போலீசார் செய்யும் பணியை அந்தக்காலத்தில் போர் சேவகர்கள் செய்து வந்தனர். அவர்களிடம்தான் யோவான் "பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்" என்று கூறுகின்றார். லஞ்சம் வாங்குவதற்காக காவல்துறையில் உள்ள சிலர் இப்படிப் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர்.
பழைய ஏற்பாட்டிலும்கூட பல வசனங்கள் பரிதானம் எனும் லஞ்சம் வாங்குவதைக் கண்டிக்கின்றன.. "பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்." (யாத்திராகமம் 23:8)
"நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்". (உபாகமம் 16:19)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல." ( லுூக்கா 12 : 15 ) பொருளாசை பிடித்து அதிகமான பணத்தைக் குறுக்கு வழியில் சேர்பவனுக்கு அது எந்த விதத்திலும் உதவாது. அது அவனுக்கு வாழ்வு அல்ல. அது நமது ஆத்துமாவை நரகத்துக்கு நேராக இழுத்துச் சென்றுவிடும்.
அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை."( 1 கொரிந்தியர் 6 : 10 ) என்று கூறுகின்றார்.
இதனை வாசிக்கும் அன்புச் சகோதரனே சகோதரியே, தெரிந்தோ தெரியாமலோ இதுவரை நீங்கள் இந்தக்காரியத்தில் ஈடுபட்டிருந்தால் தேவனிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புங்கள். தொடர்ந்து இதே காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டு எவ்வளவு ஜெபித்தாலும் தேவன் அதனைக் கேட்பதில்லை; குடும்ப சமாதானமும் வருவதில்லை. இன்றைய வசனம் கூறுவதுபோல பரிதானம் வாங்கி கலைந்துபோன குடும்பங்கள் ஒன்று இரண்டல்ல, பல்வேறு சாட்சிகளை நான் கேட்டுளேன்; பார்த்துள்ளேன். கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்" (எபிரெயர் 13:5)
ஆதவன் 🖋️ 623 ⛪ அக்டோபர் 12, 2022 புதன்கிழமை
"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்." ( மத்தேயு 24 : 42 )
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. இயேசு கிறிஸ்து தனது வருகையினைக் குறித்தும் தனது வருகைக்கு முன் என்னென்ன அடையாளங்கள் நடக்கும் என்பதனையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் பல அடையாளங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. இவை இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாய் இருக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் எப்போது அவர் வருவார் என்பது ஒரு மறைபொருளாகவே இருக்கின்றது.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முக்கியமான ஒரு முன்னடையாளம் கள்ளத் தீர்க்கதரிசிகளின் பெருக்கம். அது இன்று மிக அளவில் இருப்பது அவரது வருகை சமீபம் என்பதை உணர்த்துகின்றது.
வருகைக்குமுன், "கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்." ( மத்தேயு 24 : 24 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறினார். கிறிஸ்துவோடு நெருங்கிய உறவோடு நாம் வாழாமல் இருப்போமானால் இந்தக் கள்ளத் தீர்க்கதரிசிகளை அடையாளம் காண முடியாது.
இயேசு கிறிஸ்து தனது வருகைக்கு முன்னதான சில அடையாளங்களைக் கூறினாரேத் தவிர தான் எப்போது வருவேன் என்பதைக் கணக்குப்பார்க்கச் சொல்லவில்லை. இன்று பல ஊழியர்கள் இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது இருக்கும் என்பதைத் தங்களது மூளை அறிவினால் கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். விசுவாசிகளை அறிவுறுத்துவதாக எண்ணிக்கொண்டு பல்வேறு பட விளக்கங்களையும் கொடுக்கின்றனர்.
அன்பானவர்களே, அந்தநாள் நமக்கு முன்னமேயே அறியக்கூடிய நாள் அல்ல. அதனை தேவன் மறைவாகவே வைத்துள்ளார். "அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்." ( மத்தேயு 24 : 36 ) என்று இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறிவிட்டார். இதற்குமேல் அவரது வருகையை ஆராய்ச்சி பண்ணுவது அறிவுடைமையல்ல.
இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்." ( மத்தேயு 24 : 44 ) ஆயத்தமாய் இருப்பது என்பது கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைபிடித்து, பரிசுத்தமான ஒரு வாழ்வு வாழ்வதைக் குறிக்கின்றது.
அப்போஸ்தலரான பேதுருவும், "கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறவிதமாய் வரும் " (2 பேதுரு 3:10) என்று எச்சரித்துக் கூறுகின்றார்.
இயேசு கிறிஸ்து கூறினார், "திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்." ( மத்தேயு 24 : 43 ). தனது வருகையினைக்குறித்து கிறிஸ்துவே அறியார் என்றும் கூறப்பட்டுள்ளது.
".......................... பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 )
பிதாவிடம் கேள்விப்பட்ட அனைத்தையும் சீடர்களுக்கு அறிவித்த இயேசு கிறிஸ்து நமக்கு இது தேவையென்றால் சொல்லாமல் இருந்திருப்பாரா? எனவே குருவுக்கு மிஞ்சிய சீடனாக நாம் விரும்பவேண்டாம். கிறிஸ்துவின் வருகைக்குறித்து நாள் கணக்கிடுபவனும் கள்ளதீர்கதரிசிகளில் ஒருவனே. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ மக்களை வழிநடத்தவேண்டியது அவசியமேத்தவிர வருகையைக் குறித்த ஆராய்ச்சி தேவையில்லாதது. ஆனால், இன்று ஆவிக்குரிய சபை என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சில சபைகளில் இதுவே முக்கிய ஆராய்ச்சியும் போதனையுமாய் இருக்கின்றது.
ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ அவரது துணையை நாடுவோம். ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்து அவரை அண்டிக்கொள்வோம்; கிறிஸ்து எப்போது வந்தாலும் அவரைச் சந்திக்க ஆயத்தமாய் இருப்போம்.
ஆதவன் 🖋️ 624 ⛪ அக்டோபர் 13, 2022 வியாழக்கிழமை
"இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" ( ஓசியா 8 : 14 )
இன்று ஆலயங்களை பகட்டாகக் கட்டுவதற்கு கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்படுகின்றது. ஆலயக் கோபுரங்கள் அருகிலுள்ள பிற ஊர்களிலுள்ள கோபுரங்களைவிட உயரமாக இருக்கவேண்டுமென்று போட்டிபோட்டு உயர்த்தப்படுகின்றன. ஆலய கட்டுமானத்துக்கு நன்கொடை சேகரிப்பதில் ஆலயக் கமிட்டியினர் கடினமாக உழைக்கின்றனர். சேர்க்கப்படும் நன்கொடையில் ஒரு பகுதி, அதை சேகரிக்கும் குழுவினரின் உணவுக்காகச் செலவிடப்படுகின்றது. ஆம், கடினமான உழைப்புத்தான்!.
ஆனால், இப்படி நன்கொடை சேகரிப்பதில் நாட்டம்கொண்டு அலைபவர்களும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்களும் தங்களது தனிப்பட்ட வாழ்வில் கிறிஸ்துவை அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. நன்கொடை சேகரிப்பதிலும் ஆலயப் பணிகளிலும் காட்டும் ஆர்வத்தைத் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டும் என்று எத்தனைபேர் முயலுகின்றனர்?
இப்படி தனிப்பட்ட முறையில் தேவனை அறியாமல் இருந்துகொண்டு ஆலயப்பணிகளுக்காக உழைப்பதையே இன்றைய வசனம் வேதனையோடு குறிப்பிடுகின்றது, "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" என்று.
அன்பானவர்களே, புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் கர்த்தருடைய விசுவாசிகளான நாம் தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நமது உடல்தான் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது. "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள்.
ஆம், நாம் நம்முடையவர்களல்ல; தேவனுக்கானவர்கள். தேவனுக்கு உரியதான நமது உடல் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம்.
"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"( 1 கொரிந்தியர் 3 : 16 )
நாம் முதலில் கட்டவேண்டியது நமது உடலான ஆலயத்தை. உடலால் பாவிகளாக இருந்துகொண்டு வானுயர ஆலயம் கட்ட முயலுவதிலோ, கட்ட உதவுவதிலோ அர்த்தமில்லை. அதனை தேவன் விரும்புவதுமில்லை. தன்னை உண்டாக்கினவரை மறந்து ஆலயத்தைக் கட்டுவோர் தங்களது சுய பெருமைக்காகவே சில, பல செயல்களைச் செய்கின்றனர். நாம் மண்ணினாலல்ல கிறிஸ்து இயேசுவின்மேல் நமது சரீரமாகிய ஆலயத்தைக் கட்டவேண்டும். அதாவது, போடப்பட்ட அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின்மேல் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வைக் கட்டவேண்டும். (1 கொரிந்தியர் 3:11,12) என்கிறார் பவுல் அடிகள்.
நாம் நமது உடலான ஆலயதைக் காட்டாமல் பெருமைக்காகவும் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறவேண்டியும் மண்ணாலான ஆலயத்தைக் கட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டு நமது உடலான ஆலயத்தை கட்டாமல் இருந்து அதனைக் கெடுத்துவிட்டோமானால் அது நமது ஆத்துமாவுக்குப் பெரிய அழிவையே கொண்டுவரும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் பின்வருமாறு எச்சரிப்பு கலந்த அறிவுரைகூறுகின்றார்:- "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 )
ஆதவன் 🖋️ 625 ⛪ அக்டோபர் 14, 2022 வெள்ளிக்கிழமை
"நான் குழந்தையாயிருந்தபோது
குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல
யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்."
(13:11)
இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் மீட்பு அனுபவத்தைப் பெறும்போது நாம் மறுபடி
பிறந்தவர்களாகின்றோம். இந்த மறுபடி பிறக்கும் அனுபவமே தேவனுடைய ராஜ்யத்தில் நாம்
நுழைவதற்கு முதல்படி. எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "ஒருவன் மறுபடியும்
பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே
உனக்குச் சொல்லுகிறேன்" ( யோவான் 3 : 3 ) இந்த
வார்த்தைகளை இயேசு கிறிஸ்து நிக்கோதேமு எனும் யூத போதகரிடம் கூறினார். தேவனுடைய
வார்த்தைகளைக் கற்று போதிக்கும் போதகர்களுக்கும்கூட மறுபடி பிறக்கவேண்டியது
அவசியமாயிருக்கிறது.
இப்படி நாம் மறுபடி பிறக்கும்போது குழந்தைகளாய் மாறுகின்றோம். இந்த அனுபவத்துக்குப்பின்
வேத வசனங்கள் நாம் இதுவரை வாசித்துப் புரிந்துகொண்டதைவிட வித்தியாசமான முறையில் நமக்குப் புரியத்
துவங்கும்.
இன்றைய வசனம் இப்படி ஆவிக்குரிய மறுபிறப்பு அனுபவம் பெற்றவர்களுக்கு
அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதாகும்.
மறுபிறப்படைந்து நாம் புதிதாய்ப்பிறந்த
குழந்தையாகும்போது முதலில் முற்றிலும் ஆவிக்குரியச் சத்தியங்களை அறிந்து அதன்படி
வாழ முடியாமல் குழந்தைகள்போலத்தான் இருப்போம். எனவே நாம் இப்படிக் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப்
பேசி, குழந்தையைப்போலச் சிந்தித்து, குழந்தையைப்போல யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் நாம் இதே குழந்தைகள்போல எப்போதும்
இருக்கக்கூடாது. நமக்கு ஆவிக்குரிய வளர்ச்சி வேண்டும். அப்போது மட்டுமே நாம்
முழுமையான புருஷர்களைப்போலாகி
ஆவிக்குரிய வளர்ச்சியடைந்து குழந்தைக்கேற்றவைகளை ஒழிக்கமுடியும்.
இதனையே எபிரெயர் நிருபத்திலும் நாம் வாசிக்கின்றோம். "பாலுண்கிறவன்
குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில்
பழக்கமில்லாதவனாயிருக்கிறான்." ( எபிரெயர் 5 : 13 )
ஆவிக்குரிய வளர்ச்சி நாம் எடுக்கும் முயற்சியில்தான் இருகின்றது. வெறுமனே ஆராதையில் கலந்துகொண்டு ஒருசில பக்தி காரியங்களில் ஈடுபடுவது போதாது. நாம் தேவன் அருளும் ஞானப் பாலின்மேல் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மில் ஆவிக்குரிய வளர்ச்சி இருக்கும். எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய
களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." ( 1 பேதுரு 2 : 3 ) என்று அறிவுறுத்துகின்றார்.
"சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்;
துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்." ( 1 கொரிந்தியர் 14 : 20 ) என்கின்றார்
பவுல் அடிகள்.
குழந்தைகளாய் இருக்கும் நாம் அப்படியே இருந்துவிடாமல் பூரணமாகவேண்டும். மனம்திரும்புதல், விசுவாசம்,
ஞானஸ்நானம், ஆவியின் வரங்கள், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு போன்ற
அடிப்படை சத்தியங்களுக்கும் மேலாக நாம் வளரவேண்டும். இந்த சத்தியங்கள்
கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரமானவை. ஆனால் நாம் இதற்குமேல் கட்டப்படவேண்டும்.
இதற்குமேல் நாம் வளரும்போது மட்டுமே பாவத்தை மேற்கொண்டு வெற்றிச்சிறக்க முடியும்.
நமது பரிசுத்த பிரதான ஆசாரியனான இயேசு கிறிஸ்துவோடு மகா பரிசுத்த ஸ்தலத்தினுள்
நுழைய முடியும்.
இதனையே எபிரெய நிருப ஆசிரியர் கூறுகின்றார், "கிறிஸ்துவைப்பற்றிச்
சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும்
மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை
வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய
அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக." ( எபிரெயர் 6 : 1,2 )
ஆம் அன்பானவர்களே, மறுபடி பிறந்த அனுபவத்தைப் பெற்றிடத் தேவனிடம் நமது
பாவங்களை அறிக்கையிட்டு வேண்டுவோம். அப்படி மறுபடி பிறந்து குழந்தைகளாக
மாறியபின் தேவ வசனமாகிய பாலை உண்டு ஆவிக்குரிய வளர்ச்சி பெறுவோம். கிறிஸ்தவத்தின் அஸ்திபார உபதேசக்
கட்டளைகளை நிறைவேற்றி அடுத்தகட்டமாக பூரண மனிதர்களாக மாறி கிறிஸ்துவோடு மகா பரிசுத்த
ஸ்தலத்தினலுள் நுழைந்திடத் தகுதி பெறுவோம்.
ஆதவன் 🖋️ 626 ⛪ அக்டோபர் 15, 2022 சனிக்கிழமை
"எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும்
அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது." ( சங்கீதம் 130 : 6 )
நமக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சிலவேளைகளில் தூக்கம்
வருவதில்லை. எப்போது விடியும் என்று எதிர்பார்ப்போடு காத்திருப்பிப்போம். ஆம்,
விடியலை எல்லோரது மனமும் ஆவலாய் எதிர்பார்க்கின்றது; துன்மார்க்கரைத் தவிர.
துன்மார்க்கர்கள் தங்களது அவலட்சண காரியங்களுக்கு இருளையே விரும்புகின்றனர்.
இறுதியில் இருளான இடத்துக்கே செல்கின்றனர்.
இன்றைய தியான வசனத்தில் ஆண்டவருக்குக் காத்திருப்பதை ஜாமக்காரர்கள் எப்போது
விடியும் என விடியலை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு ஒப்பிட்டுக்
கூறப்பட்டுள்ளது. ஜாமக்காரர்கள் என்பது இரவு காவலர்களைக் குறிக்கின்றது. பெரிய
பெரிய கடைகளுக்கு முன்பும் ஏ.டி.எம் மையங்களிலும் காவல் செய்யும் காவலர்களை
எண்ணிப்பாருங்கள். மழையோ குளிரோ அவர்கள் அங்குப் பணியாற்றுவார்கள். நிம்மதியாகத்
தூங்க முடியாது. அவர்களது இருதயம் எப்போது விடியும் என்றுதானே ஏங்கும்? அதைவிட அதிகமான ஏக்கத்துடன்
கர்த்தருக்காக காத்திருக்கிறேன் என்கின்றார் இந்தச் சங்கீத ஆசிரியர்.
விடியலுக்காகக் காத்திருப்பது என்பது, கர்த்தர் நம் வாழ்வில் வந்து ஒரு
மாற்றத்தைக் கொண்டுவருவார் என எதிர்பார்த்திருப்பதைக் குறிக்கின்றது.
இந்தச் சங்கீதம் ஒரு ஆரோகண சங்கீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, யாத்திரை செல்லுகிறவர்கள் பாடிய
பாட்டு. வருடாந்த பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக மலைகளில் ஏறி ஏறி எருசலேமை நோக்கி
யாத்திரை செய்யும்போது மக்கள் இப் பாடல்களைப் பாடுவார்கள். யாத்திரீகர்கள்
தனிமையான, மக்கள் இல்லாத பல இடங்களைக் கடந்துசெல்ல வேண்டியது நேரிடும். அத்தகைய
வேளைகளில் பாடப்படுவதால் இவை ஆரோகண சங்கீதம் என்று கூறப்படுகின்றது.
இன்று பலரும் கர்த்தரைத் தேடுவதைவிட, கர்த்தாரிடமிருந்துவரும்
ஆசீர்வாதங்களையே அதிகமாய்த் தேடுகின்றனர். ஆனால் உண்மையான அன்பு இப்படிப்
பொருள்களைத் தேடி ஓடாது.
நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தை பெரும்பாலான நாட்களில் பணி நிமித்தமாக வெளி ஊரில்தான் இருப்பார். நானும் எனது சகோதரிகளும் எனது அம்மாவின்
பராமரிப்பில் நாகர்கோவிலில் இருந்தோம். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அப்பா
ஊருக்கு வருவார். அவர் வரும் நாளை கடிதம் மூலம் அறிவிப்பார். நாங்கள் அந்த
நாளுக்காக ஆவலுடன் காத்திருப்போம். அவர் வருவதற்கு முந்தின நாள் சரியாக தூக்கம்
வராது. எப்போது விடியும் என்று காத்திருக்கும் மனது. இது அப்பாவைப்
பார்க்கவேண்டும் எனும் எண்ணத்திலேயே தவிர அவர் கொண்டுவரும் பொருட்களுக்காக அல்ல.
இன்று பல சபைகளில் நள்ளிரவு உபவாச ஜெபங்கள் என்று நடத்துகின்றார்கள்.
ஒருமுறை ஒரு போதகர் அழைத்தார் என்று ஒரு இரவு ஜெபக் கூட்டத்துக்கு நான்
சென்றிருந்தேன். ஆனால் அங்கு ஏன் சென்றேன் என்று எண்ணுமளவுக்கு கேலிக்கூத்தான
காரியங்கள் நடந்தன. ஆராதனையின் இடையில் துள்ளுவதும் ஆடுவதும் உடற்பயிற்சிபோல
பயிற்சியும் நடந்தன. நான் அந்தப் போதகரிடம் தனிமையில், "ஏன் இப்படிச்
செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர் கூறினார்:- "இல்லாவிட்டால் மக்கள்
உறங்கிவிடுவார்கள்"
தேவ அன்புடன் தேவனுக்காக காத்திருப்பவனுக்கு ஏன் உறக்கம் வருகிறது? உறக்கம்
வருபவர்கள் வீட்டிற்குச் சென்று உறங்கவேண்டியதுதானே? தேவ அன்பற்று துள்ளிக்
குதித்து உறக்கத்தைக் கலைப்பதில் என்ன பக்தி அல்லது தேவ அன்பு இருக்கிறது?
அன்பானவர்களே, நள்ளிரவு உறங்காமல் இருப்பதை தேவனுக்குக் காத்திருத்தல்
என்று முற்றிலும் கூறிட முடியாது. பகல்பொழுதிலும்கூட நமது இருதயம் தேவ
நாட்டம்கொண்டு அவருக்காகக் காத்திருக்க முடியும். அதாவது, தேவன் நமக்குள் வந்து நம்மை
ஆளுகைசெய்ய காலம், நேரம், இடம் இவை தடையல்ல. எனவே, தேவ அன்புடன் நாம் தேவனுக்காகக் காத்திருக்கின்றோமா? உண்மையான தேவ அன்புடன் தனக்காகக்
காத்திருப்பவர்களையே தேவன் விரும்புகின்றார். அந்த அன்புடன் அவரைத் தேடுவோம்;
அவருக்காகக் காத்திருப்போம்.
ஆதவன் 🖋️ 627 ⛪ அக்டோபர் 16, 2022 ஞாயிற்றுக்கிழமை
"என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக்
குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை
விசுவாசிக்கிறதில்லை." ( யோவான் 8 : 46 )
இயேசு கிறிஸ்துத் தன்னைக் குற்றப்படுத்திய யூதர்களைப்பார்த்து இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக்
கூறுகின்றார். இயேசு கிறிஸ்து கூறியதுபோல கூறக்கூடிய வாழ்வு வாழ நம்மால் முடியுமானால்
நாம் அவரது அடிச்சுவட்டில் நடக்கிறோம் என்பதை அதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
"எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,
பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." (எபிரெயர் 4:15)
என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து எழுதுகின்றார் எபிரெய நிருப ஆசிரியர்.
"அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை" ( 1 பேதுரு 2 : 22 ) என்கின்றார்
அப்போஸ்தலரான பேதுரு.
இயேசு கிறிஸ்துவை அவரது காலத்தில் வாழ்ந்த மக்களில் சிலர் பல்வேறு
விதங்களில் குற்றப்படுத்தினார்கள். போஜனப்பிரியன், பிசாசு பிடித்தவன், பாவிகளின்
நண்பன், புத்தி பேதலித்தவன் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அவரை எவரும் பாவி
என்று கூறமுடியவில்லை. "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக்
குற்றப்படுத்தக்கூடும்? " என்று துணிந்து கேட்டார் அவர்.
ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நம்மால் உலகத்தாரோடு பல வேளைகளில்
ஒத்துபோகமுடிவதில்லை. எனவே அப்படி நாம் அவர்களைவிட்டு வேறுபடும்போது இயேசுவைக்
குறைகூறியதைப்போல நம்மையும் பல்வேறு
அடைமொழிகளைக் கொடுத்துச் சிலர் பேசக்கூடும். ஆனால் அது பற்றி நாம் கவலைப்படாமல்
பாவத்துக்கு மட்டும் விலகி வாழவேண்டியது அவசியம்.
இயேசுவின் கிருபையினால் மீட்பு அனுபவம்பெறும்போது நாம் ஆவியின்
பிணமானத்துக்கு உட்பட்டவர்களாகின்றோம். எனவே பாவம் நம்மை மேற்கொள்ள முடியாது.
தேவனுடைய ஆவியானவர் நமக்குள்ளிருந்து நம்மை எச்சரித்து வழிநடத்துவார். என்வேதான்
அப்போஸ்தலரான பவுல் அடிகள், "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக்
கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை
மேற்கொள்ளமாட்டாது." ( ரோமர் 6 : 14 )
என்று எழுதுகின்றார்.
ஆவியின் பிரமாணத்துக்குள் நாம் வரும்போது பாவத்துக்குவிடுதலை ஆகின்றோம்.
எனவேதான் பவுல் அடிகள், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்
என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்கின்றார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிதாவாகிய தேவன் தனது ஆவியை அளவில்லாமல்
பொழிந்திருந்தார். எனவே அவர் பாவம் செய்யமுடியாதவராக, பாவத்தை அருவெறுப்பவராக
இருந்தார். எனவே, "என்னிடம் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக்
குற்றப்படுத்தக்கூடும்?" என்று அவரால் கேட்க
முடிந்தது.
நாமும் இதுபோல பாவமற்ற வாழ்வு வாழ உதவிட அவர் வல்லவராயிருக்கிறார். இன்றைய
வசனத்தின் இறுதியில் இயேசு கேட்கிறார், "நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க,
நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை?" அன்பானவர்களே, இயேசுவின் வார்த்தைகளை நாம்
விசுவாசிக்கவேண்டும். நம்மை பாவத்திலிருந்து முற்றுமுழுதும் இரட்சிக்க அவர்
வல்லவராயிருக்கிறார். பாவம் செய்யும்போது நாம் பாவத்துக்கு அடிமைகளாயிருக்கிறோம்.
குமாரனான இயேசுவே நம்மை பாவ பழக்கத்திலிருந்து விடுவிக்கமுடியும்.
"குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 ) என்று அவர்
கூறவில்லையா?
இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும்
ஒப்புவித்து வாழும்போது அவர் நம்மைத் தம்மைப்போல மாற்றுவார். அப்போது நாமும் அவர்
கேட்டதுபோல "என்னிடத்தில்
பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? என்று கேட்க முடியும்.
கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்; அவரைப்போல உருமாறிட வேண்டுவோம்.
ஆதவன் 🖋️ 628 ⛪ அக்டோபர் 17, 2022 திங்கள்கிழமை
"இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர்
இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால்
நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே." ( 1 கொரிந்தியர் 5 :
10 )
கொரிந்து சபையில் விபச்சார பாவத்தில் ஈடுபட்ட ஒருவன் உறுப்பினராக இருந்ததை
அப்போஸ்தலரான பவுல் கடிந்து கொண்டு அவனைக்குறித்துப் பல விஷயங்களைக் கூறிவிட்டுத்
தொடர்ந்து எழுதும்போது இன்றைய
தியானத்துக்குரிய வசனத்தைக் கூறுகின்றார்.
இந்த உலகத்தில் விபச்சாரக்காரர்,
பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் எல்லோருமே நிறைந்திருக்கிறார்கள்.
ஆவிக்குரிய அனுபவத்தோடு வாழ்பவர்கள் குறைவானவர்களே. எனவே நாம் மற்ற எல்லோரையுமே
பாவிகள் என்று கருதி ஒதுக்கினால் இந்த உலகத்திலே நாம் வாழமுடியாது; நாம்
உலகத்தைவிட்டு ஒதுங்கிப்போகவேண்டியிருக்கும். அப்படி ஒதுக்கினால் நாம் யாருக்கும்
சுவிசேஷம் அறிவிக்கவும் முடியாது. எனவே அவர்களை ஒதுக்கவேண்டாம்.
இயேசு கிறிஸ்து பாவிகளோடும் ஆயக்காரரோடும்தான் அதிகநேரம் இருந்தார்.
"அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும்
கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்
பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்." ( மாற்கு 2 : 16 மற்றும் மத்தேயு 9:11, லூக்கா 5:30)
"நோயாளிகளுக்கே மருத்துவர் தேவை" என்றார் இயேசு கிறிஸ்து.
அதாவது பவுல் அப்போஸ்தலர் கூற விரும்பும் கருத்து என்னவென்றால், நம்
கருத்தை ஏற்காதவர்கள், பாவ வாழ்க்கை வாழ்பவர்கள் இவர்களோடுதான் இந்த உலகத்தில்
நாம்வாழவேண்டும். எனவே, அவர்களை ஒட்டுமொத்தமாக ஒத்துக்கிடவேண்டாம். அப்படி
ஒதுக்கினால் நாம் இந்த உலகத்தில் வாழமுடியாது.
ஆனால் தொடர்ந்து பவுல் அடிகள் எழுதுகின்றார், "நான் உங்களுக்கு
எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது,
பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது,
கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது;
அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது." ( 1 கொரிந்தியர் 5 : 11 )
அன்பானவர்களே, பவுல் அடிகள் கூறவருவது இரண்டு கருத்துக்கள்.
1. இந்த உலகத்தில் விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர்
எல்லோருமே நிறைந்திருக்கிறார்கள். அவர்களை ஒதுக்க வேண்டாம். அவர்கள் ஒருவேளை நம்மூலம் கிறிஸ்துவை
அறிந்து மீட்பு பெறலாம்.
2. சகோதரன் என்று கூறப்படும்
ஒருவன் - அதாவது நான் இரட்சிக்கப்பட்டேன் மீட்பு பெற்றுள்ளேன் எனக் கூறும் ஒருவன்
நமது சபையில் இருந்துகொண்டு அவன் விபச்சாரம், பொருளாசை,
கொள்ளை, விக்கிரகாராதனை செய்பவனாக இருந்தால் அவனோடு சேர்ந்திருக்கக்கூடாது ,
அவனோடு சாப்பிடக்கூடாது. சுருக்கமாகக்
கூறுவதென்றால், கிறிஸ்துவை அறிந்தஒருவன் இத்தகைய பாவங்கள் செய்பனாக இருந்தால் அவனை
முற்றிலும் நம்மைவிட்டு ஒதுக்கவேண்டும்.
இப்படிப் பவுல் அடிகள் அவர்களை விலக்கச் சொல்லும் காரணம், புளிப்பு மாவு
போன்ற அவர்கள் நம்மோடு இருப்பார்களானால் நம்மையும் அவர்களைப்போல பாவத்தினால்
புளிக்க வைத்துவிடுவார்கள்.
"ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப்
பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே
கழித்துப்போடுங்கள்." ( 1 கொரிந்தியர் 5 : 7
)
பவுல் அடிகள் கூறும் கருத்துக்களை நாம் கடைபிடித்தால், துன்மார்க்கருக்கு
சுவிசேஷம் அறிவிக்க முடியும்; அத்துடன் அழுக்காகிப்போன நமது சபையைச் சுத்தமாக்க முடியும்.
ஆதவன் 🖋️ 629 ⛪ அக்டோபர் 18, 2022 செவ்வாய்க்கிழமை
"மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம்
உன்னுடையதாயிருக்கிறது." ( லுூக்கா 15 : 31 )
இயேசு கிறிஸ்து கூறிய ஊதாரிமைந்தன் உவமையில் வரும் தகப்பன் தனது மூத்த
மகனிடம் கூறும் வார்த்தைகளே இவை. இளைய மகன் தகப்பனைவிட்டுப் பிரிந்து சென்று
சொத்துக்களையும் அழித்துவிட்டான். மூத்த மகனோ தகப்பனோடேயே இருக்கிறான். ஆனால்
தகப்பனை விட்டுப் பிரிந்துசென்ற இளைய மகன் மனம் திரும்பி வரும்போது அந்த
மகிழ்ச்சியைக் கொண்டாட தகப்பன் விருந்து
ஏற்பாடுசெய்கிறான். இது மூத்த மகனுக்கு மன
வருத்தத்தைக் கொடுக்கின்றது.
அவன் தகப்பனிடம், "இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து,
ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான்
சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது
கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில்
உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த
கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்." ( லுூக்கா 15 : 29, 30 ) அவனுக்குப்
பதிலாகத்தான் இன்றைய வசனத்தைத் தகப்பன் கூறுகின்றான்.
அன்பானவர்களே, இதுதான் ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேவனோடு இருக்கும்போது
கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். ஆனால் நாமும் இந்த மூத்த மகனைப்போல அதனைக்
கவனிக்கத் தவறிவிடுகின்றோம். மற்ற உலக மனிதர்களைப்போல நமக்குச் செல்வமோ உலக
ஆசீர்வாதமோ இல்லாததால் தவறுதலாக எண்ணி தேவனை நொந்துகொள்கின்றோம்.
எனக்குள்ளதெல்லாம்உன்னுடையதாயிருக்கிறது என்று உலகப் பணக்காரர் ஒருவர்
நம்மிடம் சொல்வதைப்போல உள்ளது இந்தத் தகப்பன் மூத்த மகனிடம் கூறுவது. ஆனால்,
பெரும்பாலான நேரங்களில் நாம் இதனை உணர்வதில்லை. இந்த உலகத்தில் நாம் பரதேசிகள்
என்று வேதம் கூறுகின்றது. நமது நிரந்தரக் குடியிருப்பு பரலோகம்தான். உண்மையாய்
தகப்பனுக்குக் கீழ்படிந்தது வாழ்ந்த மூத்தமகனுக்குக் கூறியதுபோல இயேசு கிறிஸ்து
நமக்கும் வாக்களித்துள்ளனர்.
ஆம், அவரது மகிமையில் அவரோடுகூடநாம் இருக்க அவர் விரும்புகின்றார். இந்த உலகத்தின் பாடுகள் இனி வரும்
மகிமைக்கு ஈடானவையல்ல. அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதனால்தான், "இக்காலத்துப்
பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று
எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 )
என்று கூறுகின்றார்.
அந்த மகிமைப் பேரின்பத்தை நாம் அடைந்திட இயேசு கிறிஸ்துவும் நமக்காக
வேண்டுதல் செய்கின்றார். ஆம், "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில்
அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத்
தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட
இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 )
என்று நமக்காக ஜெபித்துள்ளார் இயேசு கிறிஸ்து.
மட்டுமல்ல, "நீர்
என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில்
ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 ) என்று
வேண்டுகின்றார். இவை எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!!!
"என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு
ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. "என வருத்தப்பட்ட மூத்தமகனைப்போல
நாம் உலக ஆசைகள் நிறைவேறவில்லை என
வருந்திக்கொண்டிருக்கிறோம். அன்பானவர்களே, நாம் எப்போதும் அவரோடு இருக்கும்போது
நமக்கு நிறைவான ஆசீர்வாதமுண்டு. காரணம், நாம் அவரது மகனாக, மகளாக இருக்கின்றோம்.
அவருக்குள்ளவைகளெல்லாம் நமக்குரியவைகளே. எனவே, நம்மைப்பார்த்தும் அவர்
கூறுகின்றார், மகனே, மகளே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம்
உன்னுடையதாயிருக்கிறது.
ஆம், தேவனுக்குரிய உன்னத ஆசீர்வாதங்கள் அவரோடு இருக்கும்போது நமக்கு
நிச்சயமாக உண்டு.
ஆதவன் 🖋️ 630 ⛪ அக்டோபர் 19, 2022 புதன்கிழமை
"நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும்
அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்." ( 2 பேதுரு 3 : 18 )
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு இரண்டு காரியங்களில் நாம்
வளரவேண்டும் என்று கூறுகின்றார்.
1. கிறிஸ்துவின் கிருபையில் வளரவேண்டும்
2. கிறிஸ்துவை அறியும் அறிவில் வளரவேண்டும்.
இங்கு நாம் கவனிக்கவேண்டியது, பேதுரு நம்மிடம் கிறிஸ்துவைப் பற்றி அறியும் அறிவில்
என்று கூறாமல், கிறிஸ்துவை அறியும் அறிவில் என்று கூறுகின்றார். ஒருவரை
அறிவதற்கும் ஒருவரைப்பற்றி அறிவதற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.
உதாரணமாக நமது முதலமைச்சரை எடுத்துகொள்வோம். நாம் எல்லோரும் அவரைப்பற்றி
அறிந்துள்ளோம். பத்திரிகை செய்திகள் மூலமும், தொலைக்காட்சி செய்திகள் மூலமும்
அவரைப்பற்றி அறிந்துள்ளோம். அவர் யாருடைய மகன், அவரது பழைய அனுபவம் என்ன, அவரது
திறமைகள் என்ன போன்ற செய்திகள் நமக்குத் தெரியும். எப்படி? அவரைப்பற்றி நாம்
பல்வேறு முறைகளில் அறிந்துகொண்ட தகவல்கள்.
இதுபோலவே இன்று நம்மில் பலரும் தேவனைப்பற்றி அறிந்துள்ளோம். வேதாகமத்தை
வாசிப்பதன்மூலம், பல்வேறு பிரசங்கங்களைக் கேட்பதன்மூலம், ஞாயிறு மறைக்கல்வி
வகுப்புகளில் நமக்குக் கற்றுக்கொடுத்ததன்மூலம் நாம் தேவனைப்பற்றி அறிந்துள்ளோம்.
ஒருவரை அறிவது என்பது இதிலிருந்து வித்தியாசமானது. அதாவது நாம் முன்பு
பார்த்த நமது முதலமைச்சர் உதாரணத்தில், நம்மைவிட அவரது மனைவி, மகன் இவர்கள் அவரை
தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பார்கள் அல்லவா?. அவரது தனிப்பட்ட குணங்கள்,
தனிப்பட்ட அன்பு, இவற்றை அனுபவித்து அறிந்திருப்பார்கள். அதாவது நாம் அவரைப்பற்றி
அறிந்துள்ளோம்; அவர்கள் அவரை அறிந்துள்ளனர்.
இதுபோல நாம் கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அறியவேண்டும் என்கின்றார்
பேதுரு. அதுவே தேவனை அறிதல். தேவனது தனிப்பட்ட அன்பு நமது வாழ்வில் செயல்படுவது,
அவரது விருப்பம் என்ன என்பதை அறிந்து வாழ்வது, அவரோடு ஒன்றித்து இருப்பது....இவையே
தேவனை அறிவது.
இன்று கிறிஸ்தவர்களில் பலரும் நாம் முன்பு பார்த்த உதாரணத்தில்
முதலமைச்சரைப் பற்றி நாம் அறிந்துள்ளதுபோல
தேவனைப்பற்றி அறிந்து வைத்துள்ளனரேத் தவிர தேவனை அறியவில்லை. அதாவது தேவனைப்பற்றி
தங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட சத்தியங்களையும், வாசித்து புரிந்துகொண்ட சத்தியங்களையும்
தெரிந்துவைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தேவனோடு தனிப்பட்ட தொடர்புல்லை. தேவனை அறியும்போது மட்டுமே நாம் அவரது
அன்பை பூரணமாக உணர்ந்துகொள்ள முடியும்.
இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு இந்த அறிவில் வளருங்கள் என்று
கூறுகின்றார். தனது நிருபத்தின் இறுதி வசனமாக இப்படி எழுதியுள்ள பேதுரு, இந்த நிருபத்தின் துவக்க வசனமாக
கூறுகின்றார், "தேவனையும்
நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும்
சமாதானமும் பெருகக்கடவது." ( 2 பேதுரு 1 : 2 ).
அதாவது பேதுரு கூறவருவது, இப்படி தேவனையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் நாம்
அறியும்போது தான் கிருபையும் சமாதானமும் நமது வாழ்வில் பெருகும்.
அன்பானவர்களே, வெறுமனே பெயரளவில் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதல்ல, கிறிஸ்துவை
அறிந்து அவரது அன்பில் நாம் வளரவேண்டும். அதற்கு முதல்படிதான் அவரோடு ஒப்புரவாகி
மீட்பு அனுபவம் பெறுவது. நமது பாவங்கள், மீறுதல்கள் இவற்றை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு கிறிஸ்துவுக்கு நம்மை
முற்றிலும் ஒப்படைத்துவிடும்போது அவர் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். அப்போதுதான் நாம் அவரை அறியமுடியும்.
இந்த அனுபவத்தைப்பெற ஒப்புக்கொடுத்து வேண்டுவோம். மேலான ஆவிக்குரிய வாழ்வில் அவர்
நம்மை நடத்துவார்.
கிறிஸ்து அனுபவத்துடன் "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின்
கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்." என வாழ்த்துகின்றேன்.
ஆதவன் 🖋️ 631 ⛪ அக்டோபர் 20, 2022 வியாழக்கிழமை
"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )
இந்த உலகத்தில் நடக்கும் அநியாயச் செயல்கள் அனைத்துக்கும் பின்னணியில் இருப்பவை இரண்டே இரன்டு காரணங்களாகத்தான் இருக்க முடியம். அவை பண ஆசை, இன்னொன்று விபச்சார பாவம். பண ஆசை ஏற்படக் காரணம், உலகத்திலுள்ளவைகள் அனைத்தையும் அனுபவித்துவிடவேண்டும் எனும் எண்ணமும் தங்களை எல்லோரும் மதிக்கவேண்டும் எனும் எண்ணமுமே. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தனது சீடனான தீமோத்தேவுக்கு இது குறித்து எச்சரித்து இதனை எழுதுகின்றார்.
இன்றைய வசனத்தின் முந்தின வசனத்தில் பவுல் எழுதுகின்றார்:- "ஐசுவரியாவன்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்."( 1 தீமோத்தேயு 6 : 9 )
இன்றைய செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகளைப் பாருங்கள் - கொலைகள், கற்பழிப்புகள், திருட்டு, வன்முறைகள், பெற்ற குழந்தைகளைத் தாயே கொன்றுவிட்டு அல்லது தவிக்கவிட்டு இன்னொருவனுடன் ஓடிவிடுதல், பெற்ற தாயை மகனே கொலைசெய்தல், எல்லாவற்றுக்கும் சிகரமாக இந்த விஞ்ஞான காலத்திலும் நரபலி கொடுத்தல், மனித மாமிசத்தைச் சாப்பிடுதல் ..போன்ற அநியாய காரியங்கள் நடப்பதை செய்திகளில் வாசிக்கலாம்.
இவற்றில் பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் பண ஆசை. உடனடி செல்வந்தனாகவே நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான் கைதுசெய்யபட்டக் குற்றவாளி. ஆம் அன்பானவர்களே, எனவேதான் பண ஆசை பாவம் என்று வேதம் எச்சரித்துக் கூறுகின்றது.
வேத அடிப்படையில் இவற்றுக்கான காரணத்தை அப்போஸ்தலரான பவுல் "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 ) என்று கூறுகின்றார். அதாவது மெய்த்தேவனை அறியவேண்டும் எனும் எண்ணமில்லாமல் இருப்பதே இவற்றுக்குக் காரணமாகும்.
இப்படித் தேவனை அறியும் அறிவைப் பெறாததால், "அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்," ( ரோமர் 1 : 29 ) இருக்கிறார்கள்.
பணம் சம்பாதிப்பதும் அதற்காக உழைப்பதும் தவறு என்று வேதம் கூறவில்லை. உழைக்காமல் இருப்பதுதான் தவறு. உழைக்காதவன் சாப்பிடவும் கூடாது என்கிறார் பவுல் அடிகள். "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே."( 2 தெசலோனிக்கேயர் 3 : 10 ) என்கின்றார் அவர். பண ஆசை என்பது மேலும் மேலும் பணம் சேர்க்க வெறிகொண்டு அலைவதும் அவற்றுக்காக பாவ காரியங்களில் ஈடுபடுவதுமே.
"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே." ( எபிரெயர் 13 : 5 ) ஆம், தேவன் நம்மைவிட்டு விலகாமல் இருந்து நம்மை எந்தச் சூழ்நிலையிலும் பாதுகாப்பார் எனும் எண்ணமுள்ளவன் பண ஆசையை வெறுத்து நீதியுள்ள வாழ்க்கை வாழ்வான்.
எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிற பண ஆசை நம்மைப் பற்றிக்கொள்ளாமல் இருப்போம். அப்போதுதான் நாம் நமது விசுவாசத்தை விட்டு வழுவிடாமல் அதனைக் காத்துக்கொள்ள முடியும்; அநேக வேதனைகளாலே நம்மை நாமே உருவக் குத்திக்கொளாமல் இருப்போம்.
ஆதவன் 🖋️ 632 ⛪ அக்டோபர் 21, 2022 வெள்ளிக்கிழமை
"ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 : 6 )
ஏரோது ராஜா அப்போஸ்தலராகிய யாக்கோபை வாளினால் வெட்டிக் கொலைசெய்தான். அது யூதர்களுக்கு மகிழ்ச்சியளித்ததால் அடுத்து அப்போஸ்தலரான பேதுருவையும் அதுபோல கொலைசெய்ய எண்ணினான். எனவே பேதுருவைக் கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்து பஸ்கா பண்டிகைக்குப்பின் அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருந்தான். அப்படி அடைத்து வைக்கப்பட்டிருந்த பேதுருவைக் குறித்துதான் இன்றைய வசனம் கூறுகின்றது.
இங்கு நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் பேதுருவின் மனநிலை. நாளைக்குக் காலையில் நமது தலை துண்டித்து கொலைச் செய்யப்படப்போகிறோம் என்றால் முந்தினநாள் இரவு நாம் எப்படி இருப்போம் என்று கற்பனைச் செய்து பாருங்கள். எப்படி நிம்மதியாகத் தூங்கமுடியும்?
மரண தண்டனைக் கைதிகளைக் குறித்துச் சிறைக்காவலர்கள் கூறும் காரியங்கள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவற்றின்மூலம் நாம் தெரிந்துகொள்வது, தண்டனை நிறைவேற்றப்படும் நாட்களுக்கு முன் ஏறக்குறைய ஒரு வாரமாக அவர்கள் சரியாகத் தூங்க மாட்டார்களாம். அவர்களுக்குத் தூக்கம் வராது. பித்துப் பிடித்ததுபோல உணவைச் சரியாக உண்ண முடியாமலும், தூங்க முடியாமலும் அவஸ்தைப்படுவார்களாம். சிலர் பைத்தியம் பிடித்ததுபோல அமைதியற்று இருப்பார்களாம்.
ஆனால் இங்கு நாம் பேதுருவைகுறித்து வாசிப்பது வித்தியாசமான காரியமாக இருக்கின்றது. மறுநாள் காலையில் ஏரோது தன்னை வெளியில் கொண்டுவந்து யாக்கோபைபோல கொலை செய்யப் போகின்றான் என்பது தெரிந்திருந்தும் எந்தப் பதட்டமும் இல்லாமல் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டு இரண்டு காவலர்கள் நடுவே நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கின்றார் பேதுரு.
மரணத்தைக்கண்டும் சஞ்சலப்படாத அமைதி பேதுருவை நிறைத்திருந்தது. தன்னை விசுவாசிக்கும் அனைவருக்கும் இத்தகைய அமைதியைத் தருவதாக இயேசு கிறிஸ்து வாக்களித்தார். "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." ( யோவான் 14 : 27 ). ஆம், சாவுக்கும் பயப்படாத இத்தகைய அமைதியை உலகம் கொடுக்கமுடியாது; கிறிஸ்து மட்டுமே கொடுக்க முடியும்.
இன்று மன அமைதிக்காக மனிதர்கள் நாடுவது மதுவைத்தான். மது குடித்து அமைதி பெற எண்ணுவது சற்றுநேர மன அமைதியைக் கொடுத்தாலும் அதன் விளைவுகள் ஏற்கெனவே உள்ள பிரச்சனையை அதிகரிக்குமேத் தவிர குறைத்திடாது.
அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது உலக பிரச்சனைகள் நமக்குப் பெரிதாகத் தெரியாது. உயிர் போகும் நிலையில்கூட பல இரத்தச் சாட்சிகள் இதனால்தான் அமைதியாகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். காரணம், கர்த்தர் நமக்காக யுத்தம் பண்ணுவார் எனும் விசுவாசம்.
கொலைக்கு நியமிக்கப்பட்ட அப்போஸ்தலரான பேதுருவை அமைதிப்படுத்தி நிம்மதியாகத் தூங்கப் செய்த தேவன், நம்மையும் இதுபோல பிரச்னைகளைக்கண்டு அஞ்சிடாமல் அமைதியாக வாழச் செய்வார். பேதுருவுக்கு வந்ததுபோல உயிர்போகும் சோதனை நமக்கு வரப்போவதில்லை. எனவே தைரியமாக இருப்போம். ஏனெனில் கர்த்தருடைய பிள்ளைகளுக்காக யுத்தம் செய்ய தேவனது கரம் எப்போதும் தயாராக இருக்கிறது.
தேவனுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து நிம்மதியாக வாழ்வோம். அவரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். யாத்திராகமம் நூலில் மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியது நமக்கும் சேர்த்துதான். எனவே பிரச்னைகளைக்கண்டு கலங்கவேண்டாம். "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்". ( யாத்திராகமம் 14 : 14 )
ஆதவன் 🖋️ 633 ⛪ அக்டோபர் 22, 2022 சனிக்கிழமை
"நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." ( யோவேல் 2 : 13 )
பழைய ஏற்பாட்டுக்கால முறைமைகளில் மனம் திரும்புவதற்கு தங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்வதும், சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்து அல்லது உடலில் சாம்பலைப் பூசிக்கொள்வதும் முறைமைகளாக இருந்தன. துக்கம் அனுசரிப்பதற்கும் இப்படியே செய்தனர்.
பழைய ஏற்பாடு முழுவதும் இப்படி மக்களும் ராஜாக்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இரட்டுடுத்தி சாம்பலில் அமர்வதை நாம் வாசிக்கலாம். யோனா தீர்க்கத்தரிசியின் பிரசாங்கத்தைக்கேட்டு நினிவே மக்களில் சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் இரட்டு உடுத்திக்கொண்டார்கள் ( யோனா 3 : 5 ). இதனை நாம், "இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்." ( யோனா 3 : 6 ) என்று வாசிக்கின்றோம்.
இயேசு கிறிஸ்துவும் மனம்திரும்பாத கோரசீன், பெத்சாயிதா நகரங்களைப்
பார்த்துக் கூறும்போது, "கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே,
உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும்
செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்"
(லூக்கா 10:13) என்று கூறினார். ஆம், இதுவே பழைய ஏற்பாட்டுக்கால முறைமை.
தற்போதும் பாவத்திலிருந்து விடுபட மனிதர்கள் பல்வேறு முறைமைகளைக் கையாளுகின்றனர். ஒவ்வொரு மதத்தினரும் பல்வேறு முறைகளில் பாவ மன்னிப்பை நாடுகின்றனர்.
ஆனால் யோவேல் தீர்க்கத்தரிசி, நீங்கள் இப்படி உடைகளைக் கிழிப்பதையல்ல உங்கள் இருதயத்தைக் கிழித்து தேவனிடம் மன்னிப்பு வேண்டுங்கள். "தேவனாகிய கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவருமாயிருக்கிறார்" எனவே அப்போது அவர் உங்களை மன்னிப்பார் என்று கூறுகின்றார்.
காரணம், எல்லாப் பாவங்களுக்கும் இருதயமே மூல காரணமாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து கூறினார், "எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்." ( மத்தேயு 15 : 19 )
இன்றைய வசனம் கூறும் தெளிவு என்னவென்றால், நமது இருதயமே பாவங்களுக்குக் காரணமாயிருக்கின்றது. எனவே, நாம் நமது இருதயம் நொறுங்க மன்றாடி தேவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமேத் தவிர வெளியரங்கமான சில செயல்பாடுகளைச் செய்வதால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட மாட்டாது.
"பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்." ( லுூக்கா 5 : 24 ) என்றார் இயேசு கிறிஸ்து. பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் பாவங்களுக்காக இரத்தம் சிந்தின கிறிஸ்து ஒருவருக்கே உண்டு.
எனவே நாம் வெளியரங்கமானச் சில செயல்பாடுகளைச் செய்து பாவ மன்னிப்பு பெற முடியாது. மன்னிக்க அதிகாரம் பெற்ற இயேசு கிறிஸ்துவிடம் மெய்யான மனஸ்தாபத்துடன் பாவங்களை அறிக்கையிடவேண்டும்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா
அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும்
உள்ளவராயிருக்கிறார்". (1 யோவான் 1:9)
ஆதவன் 🖋️ 634 ⛪ அக்டோபர் 23, 2022 ஞாயிற்றுக்கிழமை
"தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி.." ( பிலிப்பியர் 1 : 10 )
துதித்தலினால் வரும் ஆசீர்வாதங்களைக்குறித்து வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். தேவனைத் துதித்தலைக் குறித்து, "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்று வாசிக்கின்றோம். ஆனால் நாம் பெரும்பாலும் வாயினால் கர்த்தரைத் துதிப்பதையே துதி என்று எண்ணுகின்றோம். வாயினால் துதிப்பது முக்கியமான தேவையே. நாம் கர்த்தரைத் துதிக்காமல் வாய்மூடி மௌனமாக இருக்க முடியாது.
ஆனால், இன்றைய வசனம் வாயினால் துதிப்பதைவிட மேலான துதியை; தேவன் விரும்புகின்ற துதியைக் குறித்துப் பேசுகின்றது. அது என்ன துதி? இயேசு கிறிஸ்துவினால் வருகின்ற நீதியின் கனிகளால் நிறைந்திருப்பது. அப்படி நீதியின் கனிகளால் நிறைந்திருப்பது பிதாவாகிய தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாக்கும் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அப்போஸ்தலரான பவுல், நீங்கள் அப்படி நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாக இருங்கள் என்று பிலிப்பியர்களுக்கு எழுதுகின்றார்
நீதியின் கனிகளாகிய ஆவிக்குரிய கனிகளைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிரூபத்தில் குறிப்பிட்டுள்ளார். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 )
மேலும், "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 ) என எழுதியுள்ளார்.
இன்றைய வசனம் கூறப்படுவதன் நோக்கம் ஏனென்றால், வாயினால் துதிப்பவர்கள் மேற்படி ஆவிக்குரிய கனிகள் இல்லாமலும் துதிக்க முடியும். அப்படித் துதிப்பது பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தாது. வெறுமனே ஸ்தோத்திரம் சொல்வது தேவனை மகிமைப்படுத்தாது என்று கூறுகின்றார்.
மேலும் இன்றைய வசனத்தில், இயேசு கிறிஸ்துவினால் வருகின்ற நீதியின் கனிகள் என்று குறிப்பிடுகின்றார். அதாவது பவுல் அடிகள் கூறியுள்ள நீதியின் கனிகள் ஒருவருக்கு இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே உண்டாக முடியும். கிறிஸ்துவைவிட்டு விலகி இருப்பவர்களும், கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழாதவர்களும் கனியற்றவர்களே.
"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று கூறினார் இயேசு கிறிஸ்து.
அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவோடு நாம் ஒட்டவைக்கப்படுவதன் மூலமே கனி கொடுப்பவர்களாக மாற முடியும். வாயினால் ஸ்தோத்திரம் செய்வது மட்டும் போதாது. நமது வாழ்க்கையே தேவனுக்கேற்ற கனியுள்ள வாழ்க்கையாக மாறவேண்டும். இப்படி நாம் கனிகளால் நிறையும்போது அது பிதாவாகிய தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்.
கிறிஸ்து இயேசுவோடு இணைந்த ஒரு வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுப்போம். அப்படி வாழும்போது மட்டுமே நம்மில் கனிகளைக் காண முடியும். நாம் கனியுள்ளவர்களாக மாறும்போதுதான் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் கிறிஸ்துவை அறியமுடியும்.
ஆதவன் 🖋️ 635 ⛪ அக்டோபர் 24, 2022 திங்கள்கிழமை
"எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று."( சங்கீதம் 18 : 6 )
இன்றைய சங்கீத வார்த்தைகள் தாவீது ராஜாவை கர்த்தர் அனைத்து எதிரிகளிடமுமிருந்தும் சவுலிடமிருந்தும் விடுவித்தபோது அவர் பாடியவை.
தாவீது கர்த்தரையே நம்பி அவரையே தனது பலமாக எண்ணி வாழ்ந்தார். சவுலினாலும், எதிரி ராஜாக்களினாலும் அவரது சொந்த மகனாலும் தாவீதுக்கு உயிர் போகக்கூடிய அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அவர் நிலைதடுமாறாமல் கர்த்தரையே பற்றிக்கொண்டார்.
அப்படிக் கர்த்தர் அவரை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவித்தபோது அவர் தனது நம்பிக்கையை அறிக்கையிட்டார். இன்றையத் தியான வசனம் இடம்பெற்றுள்ள 18 ஆம் சங்கீதத்தின் இரண்டாவது வசனம்கூறுகின்றது, "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்."( சங்கீதம் 18 : 2 ) என்று.
இங்கு கர்த்தருக்குத் தாவீது கன்மலை, கோட்டை, இரட்சகர், தேவன், துருக்கம், கேடகம், இரட்சணியக் கொம்பு, உயர்ந்த அடைக்கலம் என எட்டு அடைமொழிகளைக் கொடுத்து பரவசப்படுகின்றார்.
அன்பானவர்களே, இன்று கிறிஸ்தவர்கள் பலரும் பெரும்பாலும் கர்த்தரை எப்படிப் பார்க்கின்றார்கள்? தங்களது நோய்களை நீக்கும் மருத்துவராக, கடன் பிரச்னைகள் தீர்ந்திட உதவுபவராக, தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்திக்கொடுத்திட துணைசெய்பவராக, வேலை கிடைத்திட உதவுபவராக, வெறும் உலக ஆசீர்வாதங்களைக் கொடுப்பவராக மட்டுமே தேவனைப் பார்க்கின்றனர்.
கன்மலை, கோட்டை, இரட்சகர், தேவன், துருக்கம், கேடகம், இரட்சணியக் கொம்பு, உயர்ந்த அடைக்கலம் எனும் வார்த்தைகள் எவ்வளவு மேலானவை. இப்படித் தாவீது கர்த்தரை உயர்வாகப் பார்த்ததால் கர்த்தர் அவரது எல்லாத் துன்பங்களுக்கும் தாவீதை நீங்கலாக்கி விட்டார்.
அதாவது, தாவீது கர்த்தரையே முதலானவராக எண்ணித் தேடி விண்ணப்பம்பண்ணினார். ஆனால், இன்றைய பெரும்பாலான மக்களும் கர்த்தாரிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களுக்கு முன்னுரிமைகொடுத்து வேண்டுகின்றோம்.
இப்படித் தேவனையே தாவீது முழுமனதோடு தேடியதால், "தேவன் தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று." என்று கூறுகின்றார்.
இன்று தாவீது கூறுவதுபோல நாமும் தேவனைத் தேடவேண்டியது அவசியமாயிருக்கின்றது. நமக்கு ஆயிரம் பிரச்சனைகளும் தேவைகளும் இருக்கலாம். ஆனால் அவற்றையே சொல்லிச் சொல்லி தேவ சமூகத்தில் அழுவது அவசியமில்லாதது. நமது அனைத்துத் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய தேவன் நமக்கு இருக்கிறார் எனும் உறுதிநமக்கு வேண்டும்.
அந்த உறுதி நமக்கு இருக்குமானால் நாமும் தாவீதைப்போல தேவனை நமது இரட்சகராக, கேடையமாக, கன்மலையாக எண்ணுவோம். இல்லாவிட்டால் நமது ஒவ்வொரு பிரச்சனைகளையும் பட்டியலிட்டு அவரிடம் சொல்லிச் சொல்லி அழுதுகொண்டிருப்போம்.
அன்பானவர்களே, கர்த்தரிடம் விசுவாசமாய் இருப்போம், கர்த்தரிடம் வருவானவற்றுக்காக அல்ல. "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று அவர் வாக்களித்துள்ளாரே?
"கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்." ( சங்கீதம் 105 : 4 )
ஆதவன் 🖋️ 636 ⛪ அக்டோபர் 25, 2022 செவ்வாய்க்கிழமை
"எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்." ( ரோமர் 10 : 3 )
இன்றைய தியான வசனம் இரண்டுவித நீதிகளைக்குறித்து பேசுகின்றது. அவை:-
1. தேவ நீதி
2. சுய நீதி
தேவ நீதி என்பது நியாயப்பிரமாணம் சொல்வது என்றும் அவற்றுக்குக் கீழ்படிவது என்றும் பலரும் எண்ணுகின்றனர். ஆனால் அப்படியல்ல, தேவ நீதி என்பது அதற்கும் மேலானது. அதாவது கட்டளைகளுக்கு வெறுமனே கீழ்ப்படிவதல்ல. உதாரணமாக, ஓய்வு நாளை பரிசுத்தமாய் அனுசரிக்கவேண்டும் என்பது நியாயப்பிரமாண கட்டளை. ஆனால் வெறுமனே ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்வதாலும் சிலபக்தி காரியங்களைச் செய்வதாலும் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியாது. ஏனெனில் தேவநீதி இவற்றுக்கு அப்பாற்பட்டது. கோவிலுக்குச் செல்வதுடன் சகோதர அன்பில் நிலைத்திருப்பது அது.
இதுபோலவே விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்பது கட்டளை. இதன்படி விபச்சார பாவத்தில் நேரடியாக ஈடுபடாமல் வாழ்வது சுயநீதியும் நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றுதலுமாக இருக்கின்றது. ஆனால், நேரடியாக நியாயப்பிரமாண கட்டளைக் கூறுவதன்படி விபச்சாரம் செய்யாதவனும் விபச்சார எண்ணத்தை மனதில் கொண்டிருந்தால் அவன் விபச்சாரம் செய்த பாவியாகின்றான். இதுவே தேவ நீதி. இதனால்தான் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்த்தாலே அவன்விபச்சாரம் செய்துவிட்டான் என்று இயேசு கிறிஸ்து கூறினார். ஆம். எண்ணத்தில், இருதயத்தில் சுத்தமாக இருப்பதே தேவ நீதி.
சுய நீதி என்பது உலகம் போதிக்கும் நல்லொழுக்கத்தின்படி வாழ்வது. தமிழில் பல்வேறு நீதி நூல்கள் உள்ளன. எல்லா மதங்களும் நீதி போதனைகளைத்தான் கற்பிக்கின்றன. இப்படி நீதி நூல்கள் சொல்வதன்படியும் மதங்கள் போதிக்கும் நீதி நெறிகளின்படி வாழ்வதும் சுய நீதி. சுருக்கமாகக் கூறுவதென்றால் மனச்சாட்சியின்படி வாழ்வது. உலகில் உள்ள அனைவருக்குமே மனச்சாட்சி எச்சரிப்புவிடுத்து நேர்வழியில் வாழ வழிகாட்டுகின்றது.
நியாயப்பிரமாண கட்டளைகளுக்கு மேலாக, சுய நீதி போதனைகளுக்கு மேலாக வாழ்வதுதான் கிறிஸ்து இயேசுவின் மேல் நாம் கொள்ளும் விசுவாசத்தால் வரும் நீதி. இதனைத்தான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தின் அடுத்த வசனத்தில் கூறுகின்றார். "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." ( ரோமர் 10 : 4 ).
நியாயப்பிரமாணம் நம்மைத் தேவ நீதியின் பாதையில் நடத்த முடியாததால் கிருபையின் பிரமாணத்தை இயேசு கிறிஸ்து ஏற்படுத்தினார். "எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின." ( யோவான் 1 : 17 )
ஆம் நியாயப்பிரமாண கட்டளைகள் மனிதனை நீதிமானாக்க முடியாமல் போனதால் இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்து தனது மீட்புமூலம் மேலான பிரமாணத்தை நமக்கு ஏற்படுத்தினார். நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின்மூலம் புறம்பே தள்ளப்பட்டது. நியாயப்பிரமாணமே போதுமென்றால் கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டிருக்கவேண்டாம். மோசேயின் கட்டளைகளே மனிதனைத் தூய்மையாக்க போதுமானவையாக இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை. இதனால்தான், "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள்.
"மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 )
அன்பானவர்களே, நாம் இதுவரை நமது மனச்சாட்சிக்கு எதிராக வாழாதவர்களாகவும், உலகம் கற்பித்துள்ள நீதிகளின்படி வாழ்பவர்களாகவும், சுய நீதியுள்ளவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவைபோதாது. கிறிஸ்துவின் கிருபைக்குட்பட்ட ஆவியின் பிரமாணத்தினால் ஆவிக்குரிய வாழ்வு வாழவேண்டும். கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது அவரே நம்மை அவரது கிருபையின் பிரமாணத்தின்படி நடத்துவார்.
ஆதவன் 🖋️ 637 ⛪ அக்டோபர் 26, 2022 புதன்கிழமை
"காற்றானது தனக்கு இஷ்டமான
இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன
இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத்
தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்." (யோவான்
3:8)
ஒன்றைப்பற்றி நாம் முழுவதுமாக அறியவேண்டுமானால் அதுவாக நாம் மாறினால் மட்டுமே முடியும். ரோட்டோரம் படுத்திருக்கும் மாடு, அல்லது நம்மைநோக்கி வரும் நாய் அல்லது எந்த மிருகமாக இருந்தாலும் மிருகங்களின் எண்ணம் நமக்குத் தெரியாது. அவை உண்ணும் உணவுகள், அவற்றின் சுவை எதுவுமே நமக்குத் தெரியாது. மிருகங்களின் எண்ணங்களும் சுவைகளும் மனிதர்களிலிருந்து வித்தியாசமானவை. நாமும் அவைகளைப்போல ஒரு மிருகமாக மாறினால்தான் அதனை நம்மால் முற்றிலும் அறிய முடியும்.
இதுபோலவே பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்தவனும் இருக்கின்றான். சாதாரண மனிதர்களைப்போல மனிதர்களோடு இருந்தாலும் ஆவிக்குரிய மனிதனது எண்ணங்களும் செயல்பாடுகளும் வித்தியாசமானவையாக இருக்கும். இதனைத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.
அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 11 ) என்று கூறுகின்றார்.
மேலும், பவுல் அடிகள், "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என்று கூறுகின்றார்.
அன்பானவர்களே, ஆவிக்குரிய வழிதான் தேவனுக்கு ஏற்புடைய வழி. தேவனுடைய வழியில் நடக்கவேண்டுமானால் தேவனுடைய ஆவியின் வழிகாட்டுதலும் உடனிருப்பும் நமக்கு அவசியம்.
ஆனாலும் ஆவிக்குரிய மனிதர்களாக நாம் வாழ்ந்தாலும் தேவனது அனைத்துச் செயல்களையும் நாம் அறிய முடியாது. காரணம், மனிதர்கள் நாம் எப்படி முயன்றாலும் பிதாவுக்குரிய அதிகாரத்திலுள்ளவைகள் அனைத்தையும் நாம் அறிய முடியாது.
"ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின்
வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே,
எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்." (பிரசங்கி 11:5)
என்று கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த உலகத்தில் தேவன் மனிதர்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தால்
ஆவிக்குரிய சில காரியங்களை ஆவிக்குரிய மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார். இந்த
அனுபவத்தோடு உலக வாழ்வை நாம் வாழும்போது அவருக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றோம்.
ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமது செயல்பாடுகளைப் பிறர் குறைகூறலாம். ஆனால்
நாம் கவலைப்படத் தேவையில்லை. இயேசு
கிறிஸ்து கூறுவதுபோல ஆவிக்குரிய நாம் காற்றினைப்போல இருக்கின்றோம். நமது வழிகளை
உலகமனிதர்கள் அறிய முடியாது. தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் என்று கூறியுள்ளபடி தேவனுடைய ஆவிக்குரிய சித்தப்படி வாழ்பவனையும் உலக மனிதர்கள் அறிய முடியாது.
ஆவிக்குரிய வழிகளை அறியவும் தேவ வழியில் நடக்கவும் உண்மையான மனதுடன் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது தேவன் நம்மை அந்த வழியில் நடத்திடுவார். காற்று இன்ன இடத்திலிருந்து
வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் தெரியாததுபோல நமது நடவடிக்கைகள்
தேவனுக்கு மட்டுமே தெரிவதாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே தேவன் மனிதர்களை
நியாயம் தீர்ப்பார்.
ஆதவன் 🖋️ 638 ⛪ அக்டோபர் 27, 2022 வியாழக்கிழமை
"கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்." ( எஸ்றா 7 : 10 )
வேதபாரகனான எஸ்ரா என்பவரைக் குறித்து அருமையான விளக்கத்தை இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது எஸ்ரா வெறும் போதகனாக மட்டும் இருக்கவில்லை. அவர் தேவனுடைய வேதத்தை ஆராய்ச்சி செய்பவராக இருந்தார். மட்டுமல்ல, மிக முக்கியமாக வேதம் கூறுவதன்படி நடக்க அவர் தன்னை ஒப்புவித்திருந்தார். இப்படி வேதத்தை ஆராய்ச்சிப்பண்ணி, அதன்படி நடந்து அதன்பின்னரே அவர் உபதேசித்தார். அப்படிச் செய்யும்படி தனது இருதயத்தை அவர் பக்குவப்படுத்தியிருந்தார் என்று இந்த வசனம் கூறுகின்றது.
அதாவது எஸ்ரா வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கவில்லை. ஒரு செயல் வீரராக இருந்தார். இன்றைய வசனத்தின் முன்னால் ஆறாவது வசனத்தில் எஸ்ராவைப்பற்றிய இன்னொரு குறிப்பு உள்ளது.
"இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." ( எஸ்றா 7 : 6 )
அன்பானவர்களே, நாம் அறியவேண்டிய சத்தியம் என்னவென்றால், எஸ்ரா இப்படி தேவனுக்கு உகந்தவராக இருந்ததால் கர்த்தருடைய கரம் அவர்மேல் இருந்தது; அவர் கேட்டவற்றையெல்லாம் ராஜா அவருக்குக் கொடுத்தான்.
அதாவது, தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது உலக காரியங்கள் நமக்கு அனுகூலமாகும். உலக காரியங்கள் எனும்போது நமது சுய ஆசைகளை நிறைவேற்றும் ஆசைகளல்ல. மாறாக, தேவ சித்தத்துக்கு உட்பட்டு நாம் விரும்பும் ஆசைகள்.
எஸ்றா தனது சுய ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ராஜாவிடம் கேட்கவில்லை. மாறாக, தேவனுக்கு ஆலயம் கட்டுவதற்கு முற்பட்டார். அதற்காக ராஜாவிடம் வேண்டினார். அவரது அந்த ஆசையை தேவன் ராஜாவின் மூலம் நிறைவேற்றினார். நாமும் இதுபோல தேவனது வேதத்தின்மேல் ஆர்வம்கொண்டு வேத சத்தியங்களை ஆராயவும் வேத சத்தியங்களின்படி வாழவும் நம்மைப் பக்குவப்படுத்தினோமானால், தேவன் நமது நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவார்.
இதனால்தான் முதலாவது சங்கீதம் கூறுகின்றது, "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 1 : 2 )
வேதாகமத்தை நேசிப்போம், வேத வசனங்களைத் தியானிப்போம், எஸ்றாவைப்போல வேத ஒளியில் ஆராய்வோம். அப்படி செய்வதுமட்டுமல்லாமல் வேத வசனங்களின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அதன்பின்னர் மற்றவர்களுக்கும் அதனை எடுத்துச்சொல்வோம். இன்றைய வசனம் எஸ்றா அப்படிச் செய்ய தனது இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான் என்று கூறுகின்றது. நமது இருதயத்தையும் நாம் அதுபோல பக்குவப்படுத்துவோம். அப்போது தேவனது கரம் நம்மோடு இருக்கும். உலக காரியங்கள் நமக்கு அனுகூலமாகும்.
ஆதவன் 🖋️ 639 ⛪ அக்டோபர் 28, 2022 வெள்ளிக்கிழமை
"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." ( சங்கீதம் 20 : 7 )
பெருமை பாராட்டுவது பலருக்கு அல்வா சாப்பிடுவதுபோல அவ்வளவு இன்பமாய் இருக்கின்றது. தங்களது சொத்து, பதவி, அழகு அந்தஸ்து இவைகளைக்குறித்து பெருமைகளைப் பேசுவதும் இவை எதுவும் தற்போது இல்லாதவர்கள் தங்களது பூர்வீக பெருமைகளைப் பேசி "எங்க தாத்தா நூறு ஏக்கர் நிலம் வைத்திருந்தார், மோட்டார் கிணறு, கார், ஆடு, மாடு, வேலைக்காரர்கள் இவைகளுடன் குட்டி ராஜா போல வாழ்ந்தார்" என்று கூறுவதிலும் அற்ப பெருமை காண்கின்றனர். இவர்கள் பேசுவதில் பாதியும் பொய்யாக இருந்தாலும் அப்படிப் பேசுவதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.
வேதாகமம் எழுதப்பட்டக் காலங்களில் இப்போதுள்ளதுபோல வாகனங்கள் கிடையாது. போக்குவரத்துக்கு மிருகங்களையே அவர்கள் நம்பி இருந்தனர். ஏழைகள் வசதி குறைந்தவர்கள் கழுதைகளைப் பயன்படுத்தினர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் ஒட்டகங்களையும், குதிரைகளையும் பயன்படுத்தினர். பிரபுக்களும் அரச குடும்பத்தினரும் ரதங்களைப் பயன்படுத்தினர். இப்போது சொந்தக் கார் வைத்திருப்பவர்களைப் போல குதிரைகளையும் ரதங்களையும் வைத்திருப்பவர்கள் இருந்தனர். வசதி படைத்தவர்கள் சிலரிடம் ஒன்றுக்கு மேற்பட்டக் குதிரைகளும் ரதங்களும் இருந்தன. அது அவர்களுக்குப் பெருமைக்குரிய காரியமாக இருந்தது.
ஆதவன் 🖋️ 640 ⛪ அக்டோபர் 29, 2022 சனிக்கிழமை
"உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக." ( சங்கீதம் 43 : 3 )
பழைய ஏற்பாட்டுக்காலத்திலும் மக்கள் தேவனை வெளிச்சமாகவும் சத்தியமாகவும் (உண்மை) எண்ணி வேண்டுதல் செய்தனர். அதனையே, "உமது வெளிச்சத்தையும்
உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்'
என்று இன்றைய
வசனத்தில் நாம்
பார்க்கின்றோம். பரிசுத்த
பர்வதமாகிய பரலோகத்தில் மனிதனைக்
கொண்டு சேர்க்க
இவைதான் தேவையாக
இருக்கின்றன.
பழைய ஏற்பாட்டுக்கால மக்கள்
கர்த்தரை வேண்டினாலும், புதிய
ஏற்பாட்டுக்கால மக்களாகிய
நம்மைப்போல அவர்களுக்கு கர்த்தரைப்
பற்றி ஒரு
தெளிவு இல்லை.
கர்த்தர் என்பவர்
நன்மை செய்பவர்களை அரவணைக்கவும்
தீமை செய்பவர்களைத் தண்டிக்கவும்கூடிய ஒரு வல்லமையான
சக்தி என்று
எண்ணிக்கொண்டனர். ஒருவித
அச்சத்துடனேயே கர்த்தரைப் பார்த்தனர்.
அதாவது தேவனைப்பற்றிய தெளிவான
புரிதல் அவர்களுக்கு இல்லை.
ஆனால் அவர்கள்
தேவனை அன்பு
செய்தனர், வேண்டுதல்
செய்தனர்.
இயேசு கிறிஸ்துதான் கர்த்தரை
அப்பா என்று
அழைக்கக் கற்றுக்கொடுத்தார். அதாவது, கர்த்தர்
என்பவர் எங்கோ இருக்கும்
அந்நியர் அல்ல;
அவர் நமது
தகப்பன் எனும்
புரிதலைக் கொடுத்தவர் இயேசு
கிறிஸ்துதான்.
அதனால்தான் இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் கூறினார், "நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்;
நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்." ( யோவான்
4 : 22 ) என்று கூறினார். இன்றும் இதுபோல
அறியாமல்
ஒளியை வணங்கக்கூடிய மக்கள்
இருக்கின்றனர். விளக்குகளையும், சூரியனையும்
அவர்கள் வணங்குகின்றனர். காரணம்
கடவுள் ஒளியாக
இருப்பதாக எண்ணுவதால் ஒளியை
வணங்குகின்றனர். ஆனால்,
தேவன் ஒளியாய்
இருந்தாலும் எல்லா
ஒளியும் தேவனல்ல
என்பதே உண்மை.
ஆம், அன்று பழைய ஏற்பாட்டுக்கால யூதர்கள் அறியாமலேயே வேண்டுதல்செய்த ஒளி, வழி, சத்தியம் எல்லாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். இதனை அவர் உலகத்தில் இருக்கையில் அவர்களுக்குத் திட்டமும் தெளிவுமாகக் கூறினார்.
"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." ( யோவான்
8 : 12 )
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான்
14 : 6 ) என்றார்.
உமது ஒளியையும்
சத்தியத்தையும் அனுப்பியருளும் அவைகள்
என்னை நடத்தி,
உமது பரிசுத்த
பர்வதத்திற்கும் உமது
வாசஸ்தலங்களுக்கும் என்னைக்
கொண்டுபோவதாக. என்று
பழைய ஏற்பாட்டுக்கால பக்தன்
வேண்டியதற்கு பதிலளிப்பதுபோல கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய
தேவன் அனுப்பியுள்ளார். அவரே
நம்மை பரிசுத்த
பர்வதத்துக்கு நேராக
வழிநடத்திட முடியும்.
இக்கால மக்களாகிய
நம்மை வழிநடத்திட கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து
பரிசுத்த ஆவியானவரை
வாக்களித்து நமக்கு
அருளியுள்ளார். இருளான
நமது இருந்ததில் ஒளியேற்றவும்,
சத்தியமான வசனத்தின்மூலம் நம்மை
வழிநடத்திடவும் ஆவியானவரால் மட்டுமே
முடியும். ஆவியானவரின் ஆளுகைக்கு
நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோம்.
அவர் நம்மை
பரிசுத்த பர்வதத்துக்கு நேராக
வழி நடத்துவார்.
ஆதவன் 🖋️ 641 ⛪ அக்டோபர் 30, 2022 ஞாயிற்றுக்கிழமை
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 14 )
ஆவிக்குரிய வாழ்க்கையை அப்போஸ்தலரான
பவுல் அடிகள்
தனது நிரூபங்களில் ஓட்டப்பந்தயம்,
மல்யுத்தம் இவற்றுக்கு ஒப்பிட்டுக்
கூறியுள்ளார். எந்தவித
பந்தயமாயிருந்தாலும் அதற்குப் பரிசுப்பொருள்
உண்டு. இன்று
உலக வாழ்க்கையில் விளையாட்டுப்போட்டிகளில் மிக உயர்ந்த பரிசாகக்
கருதப்படுவது ஒலிம்பிக்தான். ஒலிம்பிக்கில்
வெற்றிவாகை சூடவேண்டுமென்பது விளையாட்டு
வீரர்களின் கனவு.
அதற்காக அவர்கள்
பல தியாகங்களைச் செய்கின்றனர்.
உணவு கட்டுப்பாடு, உறக்கக்
கட்டுப்பாடு, இவைதவிர
கடுமையான பயிற்சிகள் என உடலை வருத்துகின்றனர்.
அழிவுள்ள கிரீடத்தைப் பெறுவதற்கு அவர்கள் அப்படிச் செய்வார்களென்றால் அழிவில்லாத ஆவிக்குரிய வெற்றி கிரீடத்தைப் பெறவேண்டுமானால் நாம் எவ்வளவு அதிகமாக முயற்சிக்கவேண்டும்? இதனையே, "பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்." ( 1 கொரிந்தியர் 9 : 25 ) என்கின்றார் பவுல்
அடிகள்.
"ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." (
பிலிப்பியர் 3 : 15 ) அதாவது நாம்
ஆவிக்குரிய வாழ்வில்
தேறினவர்கள் என்று
கூறப்படவேண்டுமானால் நாம் இந்த
எண்ணமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
உலக ஓட்டப்பந்தயத்தில் ஒருவருக்கே
பரிசு கிடைக்கும். ஆனால்
நமது தேவனுக்குரிய ஆவிக்குரிய
ஓட்டப்பந்தயத்தில் சரியாக
ஓடி முடிக்கும் அனைவருக்குமே
தேவன் பரிசளிப்பார். "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 ) ஆம்,
ஆவிக்குரிய ஓட்டத்தை
நாம் பரிசுபெற்றுக்கொள்ளும் விதமாக
ஓடவேண்டும்.
மேலும், இன்றைய வசனத்தில் பவுல் அடிகள் "இலக்கை நோக்கித் தொடருகிறேன்" என்று ஒரு வார்த்தையினைக் கூறுகின்றார். அதாவது நாம் போட்டியில் பங்குபெறும்போது நாம் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மனதில்கொண்டு செயல்படவேண்டும். நமது இலக்கு கிறிஸ்துவே; கிறிஸ்துவைப் பிரியப்படுத்துவதே.
நாம் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது பந்தயத்தின் இறுதி இலக்கை நோக்கி மட்டுமே ஓடவேண்டும். அப்படியில்லாமல் ஓடும்போது நமக்கு வலதுபுறமும் இடதுபுறமும் ஓடுபவர்களைப் பார்த்துக்கொண்டு ஓடினால் வெற்றிபெறமுடியாது. இன்று ஆவிக்குரிய வாழ்வில் பலரும் செய்யும் தவறு இதுதான். மற்றவர்களது செயல்பாடுகளைப் பார்த்து அவர்களைக் குறைகூறிப் பலரும் தவறுகின்றனர்.
மட்டுமல்ல, ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறைகளை மீறாமல் செயல்படுபவர்களுக்கு மட்டுமே பரிசு கிடைக்கும். இதனையே, "மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்." ( 2 தீமோத்தேயு 2 : 5 ) என்கின்றார் பவுல்
அடிகள்.
அன்பானவர்களே, நமது
ஆவிக்குரிய ஓட்டத்தை
இறுதி இலக்கான
கிறிஸ்துவை நோக்கி,
பொறுமையாக, கிறிஸ்துவின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு ஓடி வெற்றிபெறவேண்டும். இந்த
எண்ணத்துடன் நமது
ஆவிக்குரிய ஓட்டத்தைத் தொடர்வோம். அத்தகைய
ஓட்டத்தை ஓடி
வெற்றிபெற பரிசுத்த
ஆவியானவருக்கு நம்மை
முற்றிலும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்;
வாழ்வோம்.
ஆதவன் 🖋️ 642 ⛪ அக்டோபர் 31, 2022 திங்கள்கிழமை
"தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 7, 8 )
கிறிஸ்துவை அறிந்து அவருக்கு ஏற்புடையவர்களாக வாழும் ஆவிக்குரிய நாம் பகலுக்குரியவர்கள். மட்டுமல்ல, நீதியின் சூரியனான நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளி நம்மில் இருப்பதால் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கிறோம். "நானே உலகின் ஒளி" என்று வாக்களித்த இயேசு கிறிஸ்துவினால் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கின்றோம்.
கிறிஸ்துவை அறியாதவர்கள் இருளில் இருந்து இருளின் செயல்பாடுகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய தூக்க மயக்கத்தில் இருந்துகொண்டிருப்பார்கள். அல்லது பாவத்தில்மூழ்கி பாவ வெறிகொண்டிருப்பார்கள்; பாவத்திலேயே இன்பம் அனுபவித்துக்கொண்டிருப்பார்கள்.
கிறிஸ்துவை அறியாதபோது நாம் எல்லோரும் இப்படித்தான் இருந்தோம். இப்படித் தூக்கத்திலும் பாவ வெற்றியிலும் இருந்த நம்மேல் கிறிஸ்துவாகிய ஒளி பிரகாசித்தது. கிறிஸ்துவாகிய இந்த ஒளியை ஏசாயா தீர்க்கத்தரிசி ஆவியில் கண்டுணர்ந்து, "இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." ( ஏசாயா
9 : 2 ) என்று எழுதுகின்றார்.
இயேசு கிறிஸ்துவும் தன்னைக்குறித்துக் கூறும்போது, "இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்." ( யோவான்
12 : 35 ) என்றார்.
இன்றைய வசனத்தில்
ஆவிக்குரிய நம்மைப்
பகலுக்குரியவர்கள் என்று
குறிப்பிடுகின்றார் பவுல்
அடிகள். "பகலுக்குரியவர்களாகிய நாமோ
தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு
என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின்
நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்." என்கின்றார்.
ஆனால் தூங்குகின்றவர்களுக்கும் வெறிகொண்டவர்களுக்கும்
ஒளியைப் பிடிக்காது. இருளில்
இருப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான்
3 : 20 )
ஆனால் அவர்கள்
ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாவார்கள். "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது."( யோவான்
3 : 19 ) என்றார் இயேசு
கிறிஸ்து.
அன்பானவர்களே, மெய்
ஒளியான கிறிஸ்துவை அறிந்துகொண்ட
நாம் தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம்
அன்பு என்னும்
மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும்
தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். ஆம், கிறிஸ்துவின்மேல் வைக்கும்
விசுவாசமும் அன்பும்
தான் மார்புக்கவசம். இரட்சிப்பு
அனுபவம்தான் தலைக்கவசம். எக்காலத்திலும்
இவைகளை இழந்திடாமல் பாதுகாத்துக்கொள்வோம்.
ஆவிக்குரிய தூக்கத்தையும் பாவ வெறிகளையும் விட்டு
பகலுக்குரியவர்களாக வாழ்வோம்.