Friday, July 05, 2024

இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை அழைத்த தேவன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,250       💚 ஜூலை 12, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்." ( 1 கொரிந்தியர் 1 : 9 )

பிதாவாகிய தேவன் எதற்காக நம்மைத் தேர்ந்துகொண்டாரென்றால் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு நாம் ஐக்கியமாக இருப்பதற்காக என்று இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது. அப்படி கிறிஸ்துவோடு ஐக்கியமாகும்போது நாம் பிதாவாகிய தேவனோடும் ஐக்கியமாகின்றோம். 

இதனையே இயேசு கிறிஸ்துவும்  "அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 ) என்று ஜெபித்தார்.

மனிதர்கள் பரிசுத்தமுள்ள பிதாவாகிய தேவனிடம் தங்களாகச் சேரமுடியாது. காரணம் நமது பாவங்கள். பாவமனிதன் பரிசுத்தமான தேவனிடம் சேரமுடியாது. அந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே நாம் பிதாவாகிய தேவனிடம் பேசமுடியும். இதற்காகவே தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்தார். 

நமது பாவங்களுக்கான பரிகாரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவரே சிலுவையில் நமக்காகப் பாடுகளை ஏற்றுக்கொண்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தினார். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 1 : 18 ) என்று கூறினார்.

ஆம் அன்பானவர்களே, சிலுவையைப்பற்றிய உபதேசமில்லாமல் மக்கள் மீட்படைய முடியாது. அதன்மூலம் மட்டுமே நாம் பிதாவோடும் அவரது குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருக்க முடியும். அப்படி நாம் ஐக்கியமாக இருப்பதற்கு நம்மை அழைத்த பிதாவாகிய தேவன் உண்மையுள்ளவர் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. "நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்." ( 2 தீமோத்தேயு 2 : 13 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். அதாவது அவர் கூறியுள்ள தமது வார்த்தையை மாற்றமாட்டார் என்று பொருள்.

எனவேதான் நாம் சிலுவையைப்பற்றி மேன்மை பாராட்டுகின்றோம். ஆனால் பாவங்கள் மன்னிக்கப்பட விரும்பாமல், பாவங்களோடு தொடர்நது வாழ விரும்புகின்றவர்கள் சிலுவையை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கிறிஸ்துவுக்கு எதிர்த்து நிற்கின்றனர். ஆனால், அப்படி எதிர்த்து நிற்பவர்கள் தேவனால் ஆக்கினைத் தீர்ப்படைவார்கள் என்று வேதம் எச்சரிக்கின்றது. "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." ( யோவான் 3 : 19 )

ஆம் அன்பானவர்களே, தேவனுடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பிதாவாகிய தேவனோடு ஐக்கியமாக இருக்கவே அழைக்கப்பட்டுள்ளோம்.  அப்படி நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். எனவே நமது பாவங்களை கிறிஸ்து இயேசுவிடம் அறிக்கையிட்டு அவை கழுவப்பட மன்றாடுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Thursday, July 04, 2024

சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து உயர்த்துகிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,249     💚 ஜூலை 11, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்...." ( 1 சாமுவேல் 2 : 8 ) மற்றும் (சங்கீதம் 113:7, 8)

அன்பானவர்களே, நமது தேவன் பல்வேறு நிலைகளில் மனிதர்களை வாழவைத்திருந்தாலும் அவர் எப்போதும் எளியவர்களை நோக்கிப்பார்ப்பவராகவும் அவர்களுக்கு உதவுபவராகவும் இருக்கின்றார். எளியவர்கள் என்று கூறுவதால் நாம் பொருளாதார எளிமையை மட்டும் எண்ணிவிடக்கூடாது; மாறாக, ஆவிக்குரிய, மனதின் உள்ளார்ந்த எளிமையையே இன்றைய தியான வசனம்  குறிக்கின்றது. அப்போஸ்தலரான யாக்கோபு இதனை, "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." ( யாக்கோபு 4 : 10 ) என்று கூறுகின்றார்.

அன்னை மரியாள் இதனை உணர்ந்திருந்தால் கூறுகின்றார், "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்...."( லுூக்கா 1 : 48 ) என்று. ஆம் அன்பானவர்களே, எளிய அடிமை மனநிலையுள்ளவர்களை தேவன் நோக்கிப்பார்க்கின்றார். 

இப்படியே நாம் தாவீதையும் பார்க்கின்றோம். அற்பமாக ஆடு மேய்பவராக இருந்த தாவீதைத் தேவன் அவனது எளிய மனதினைக்கண்டு உயர்த்தினார். இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்...." என்று வாசிக்கின்றோம்.

அவர் அப்படி எளியவர்களை நோக்கிப்பார்ப்பது மட்டுமல்ல, அவர்களைத் துன்மார்க்கரின் கைகளுக்குத் தப்புவிக்கிறவராகவும் இருக்கின்றார். தாவீதைப் பல்வேறு முறை பல்வேறு வழிகளில் இப்படித் தேவன் தப்புவித்தார்.  மேலும், எளியவர்களின் சந்ததியையும் தேவன் ஆசீர்வதிக்கின்றார். "எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்." ( சங்கீதம் 107 : 41 )

தேவன் இப்படி ஏன் எளியவர்களை நோக்கிப்பார்க்கின்றார் என்றால் அப்படி எளியவர்களுக்கு அதிகமான தேவ கிருபையை அளிக்கவே. பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்பதால் அவர்கள் தேவ கிருபையினை அனுபவிப்பதில்லை. "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." ( யாக்கோபு 4 : 6 )

இதனை கொலோசெய சபையினருக்கு உணர்த்தவே அப்போஸ்தலரான பவுல் அவர்களுக்கு எழுதும்போது, நீங்கள் தயவையும், மனத்தாழ்மையையும் சாந்தத்தையும், பொறுமையையும்    தரித்துக்கொள்ளுங்கள் என்கின்றார்.  "ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு....." ( கொலோசெயர் 3 : 12 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம், நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக வாழும்போது நிச்சயமாக தேவன் நமது தாழ்நிலையிலிருந்து உயர்த்துவார். மட்டுமல்ல, பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Wednesday, July 03, 2024

தேவன் நம்மைத் தண்டிக்க விரும்பவில்லை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,248       💚 ஜூலை 10, 2024 💚 புதன்கிழமை 💚

 

"தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 9 )

இந்த உலகத்திலுள்ள எந்த ஆத்துமாவும் அழிந்து பாதாளத்துக்குப் போகவேண்டுமென்பது தேவனது சித்தமல்ல; மாறாக, எல்லோரும் நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்கவேண்டுமென்பதே அவரது சித்தம். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." ( யோவான் 3 : 16 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அப்போஸ்தலரான பேதுருவும் இதனை, "...........ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, தேவன் நமது தவறான பாவச் செயல்களைக்கண்டு கோபம்கொண்டு  நம்மைத் தண்டிக்கவேண்டுமென்று விரும்பாமல்  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் இரட்சிப்படைய வேண்டுமென்று விரும்புகின்றார். எனவேதான் கிறிஸ்து இயேசுவை உலகில் அனுப்பினார். 

"உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." ( யோவான் 3 : 17, 18 )

தேவன் நம்மைத்  தமது கோபத்திலிருந்து தப்புவிக்க இயேசு கிறிஸ்து எனும் ஒரே வழியைத்தான்  நியமித்துள்ளார். எனவே, அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான். ஆனால் அவரது பெயரில்  விசுவாசமில்லாதபடி வாழ்பவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. விசுவாசிக்கிறேன் என்று நாம் வாயினால் சொன்னால் போதாது; மாறாக, இருதயத்தில் விசுவாசித்து மனப்பூர்வமாக அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெறவேண்டும். 

"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9, 10 )

இயேசு கிறிஸ்துத் தன்னைத் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து அவரது பூரண சித்தம் நிறைவேற தன்னை ஒப்புக்கொடுத்ததால் மனிதர்களது பாவங்களை மன்னிக்கும் இந்த மேலான மகிமையைப் பெற்றுள்ளார். எனவே அன்பானவர்களே, நாம் இதுவரை பாவத்தில் வாழ்ந்திருந்தால் நமது பாவ வாழ்கையினைக்குறித்துக் கவலைகொள்ளாமல் கிறிஸ்துவிடம் திரும்புவோம். அவரது இரத்தத்தால் கழுவப்படுமாறு மன்னிப்புவேண்டி  நம்மை அவருக்கு  ஒப்புக்கொடுப்போம். தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்றுதான்  நியமித்துள்ளார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Tuesday, July 02, 2024

படுக்கையில் அமர்ந்து தேவனோடு பேசுவோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,247       💚 ஜூலை 09, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

     
"நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்." ( சங்கீதம் 59 : 16 )

இன்றைய தியான சங்கீத வசனம்,  தாவீதைக் கொல்வதற்கு சவுல் ஆட்களை அனுப்பியபோது அதுகுறித்து அறிந்த தாவீது பாடியது என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்." என்று தாவீது இதில் குறிப்பிடுகின்றார். 

மட்டுமல்ல, இந்த நெருக்கடியிலும், "நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்" என்று கூறுகின்றார்.  தேவன் வல்லமையான காரியங்கள் தனக்குச் செய்வார் என்று தாவீது உறுதியாக நம்பினார். எனவே உயிர்போகக்கூடிய சூழ்நிலையான இக்கட்டான நிலையிலும்  காலையிலேயே  தேவனுடைய வல்லமையினைப் புகழ்ந்து பாடுவேன் என்று குறிப்பிடுகின்றார். 

நமக்கு இது மிகவும் கடினமான காரியம். காரணம், நமது வீட்டில் சில இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது நம்மால் துணிந்து விசுவாசமாக ஜெபிக்கவோ மகிழ்ச்சியாக தேவனைப் புகழ்ந்து பாடவோ முடிவதில்லை. ஆனால் தாவீது தனது இருதயத்தை இதற்குப் பக்குவப்படுத்தியிருந்தார். 

புதிய ஏற்பாட்டில் பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டு கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்ட நிலையிலும் தேவனைப் புகழ்ந்து பாடியது இதுபோன்ற அனுபவதால்தான். ஆனால், தேவன் அவர்களை அதிசயமாகத் தப்புவித்தார். 

எனவே அன்பானவர்களே, நாம் நம்மால் முடிந்த மட்டும் இதனை பயிற்சியெடுப்போம். தாவீதைப்போல, பவுலைப்போல  நம்மால் இப்படித் தேவனைப் புகழ முடியவில்லையென்றாலும் நாம் விசுவாசத்துடன் அமைதியாக இருந்தாலே போதும். எந்தச் சூழ்நிலையிலும் நாம் தேவனுக்கு எதிராக கோபம்கொண்டு முறுமுறுக்காமல் இருக்கப் பழகுவோம். தேவனுக்கு எதிராக முறுமுறுத்து பாவம் செய்துவிடக்கூடாது. "நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ் செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்" ( சங்கீதம் 4 : 4 )

படுக்கையில் அமர்ந்து தேவனோடு பேசும் அனுபவம் நம்மைப் பல இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கும். மன அமைதியும், தேவன்மேல் விசுவாசமும் அதிகரிக்கும்.  எனவே அன்பானவர்களே, இக்கட்டு, துன்பங்கள் நம்மை நெருக்கும்போது வாயினால் துதித்துப் பாடமுடியவில்லையானாலும்  நாம் தேவனது வல்லமையைப் இருதயத்தில்  பாடி, காலையிலே அவரது கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவோம்; ஆம் அன்பானவர்களே, நமக்கு நெருக்கமுண்டாகும் நாளிலே அவரே நமக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமாவார்.                                                                                                    
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

வேஷமாகவே மனிதன் அலைகிறான்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,246     💚 ஜூலை 08, 2024 💚 திங்கள்கிழமை 💚


"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ( ரோமர் 12 : 2 )

"இந்த உலகத்துக்கு ஒத்த வேடம் அணியாமல் இருங்கள்" என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. அதாவது உலக மக்கள் எல்லோரும் எப்படி நடக்கின்றார்களோ அதுபோலவே நீங்களும் நடக்காமலிருங்கள் என்று கூறுகின்றது. நடப்பது என்பது காலினால் நடப்பதையல்ல, மாறாக நமது செயல்பாடுகளைக் குறிக்கின்றது. 

உதாரணமாக, ஒரு காரியம் நடைபெற சக  மனிதர்கள் குறுக்குவழிகளான லஞ்சம், ஏமாற்று, பொய், பித்தலாட்டம் போன்ற காரியங்களில் ஈடுபடுவதுபோல ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் ஈடுபடக்கூடாது என்று கூறுகின்றது.  இதனை இந்த வசனம் ஏன் வேஷம் என்று கூறுகின்றது? அதாவது ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு  ஆவிக்குரிய ஆராதனைகளில் பங்கெடுத்து தங்களை மேலான ஆவிக்குரிய அனுபவம் உள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு இப்படிக் குறுக்கு வழியிலும் முயல்வதால் வேஷம் என்று கூறுகின்றது. 

இப்படி வேஷம் போடாமல், "தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு காரியம் நமக்கு விரும்பியும் நடைபெறவில்லையானால், தேவ சித்தம் அது என்று நாம் பகுத்தறியும் அறிவு நமக்கு வேண்டும். மற்றவர்களைப்போல் தேவ சித்தமறியாமல் குறுக்கு வழிகளில் முயலக்கூடாது என்று  பொருள். 

இதற்கு நாம் என்னச் செய்யவேண்டும் என்பதனை இதே அதிகாரத்தில் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார். "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) அதாவது, தேவன்மேலுள்ள நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இருந்து, பொறுமையுடன் ஜெபத்தில் காத்திருக்கவேண்டும் என்கின்றார். 

இந்த உண்மையை தாவீது ராஜாவும் உணர்ந்திருந்தார். இப்படி வேஷம் போடும் மனிதர்களையும் அவர் பார்த்திருந்தார். எனவே அவர் கூறுகின்றார், "வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்." ( சங்கீதம் 39 : 6 ) அதாவது, மனிதன் இந்த வேஷம் போடக்காரணம் சொத்து சுகங்களைச் சேர்ப்பதற்குத்தான். ஆனால், இப்படிச்  சேர்க்கும் சொத்துச்  சுகங்களை பலவேளைகளில் அவனும் அனுபவிப்பதில்லை அவற்றை யார் அனுபவிக்கின்றார்கள் என்பதனையும் அவர்கள் அறிவதில்லை.

எனவே அன்பானவர்களே, நாம் நமது வாழ்வில்  இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நமது மனதைப் புதிதாக்கி மறுரூபமாவோம். மேலும், இப்படி நாம் வேடம் போடுவது கிறிஸ்துவை அவமதிப்பதாகும் என்பதனையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். காரணம், நமது ஆவிக்குரிய பக்தி காரியங்களை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது; நமது வேடமிடுதலையும் பார்க்கின்றது. எனவே இப்படி நாம் வேடமிடுவது கிறிஸ்துவுக்கு நாம் நமது நடக்கையால் செய்யும் அவமானமாகும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Friday, June 28, 2024

தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,245      💚 ஜூலை 07, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்." ( ரோமர் 8 : 39 )

தேவனிடம் அளவற்ற விசுவாசம் உள்ளவர்களாக வாழ்ந்தாலும் சிலர் தங்களது வாழ்வில் உயர்வு வரும்போது அவரைச் சற்று ஒதுக்கிவிடுவதுண்டு. உதாரணமாக,  வறுமை நிலையிலிருக்கும்போது தங்கள் முழு விசுவாசத்தையும் தேவன்மேல் வைத்து வாழும் பலர் தங்கள் வாழ்வில் பொருளாதார உயர்வு ஏற்படும்போது தேவனை மறந்துவிடுகின்றனர். தங்களது உயர்வு தங்கள் உழைப்பால் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கின்றனர். இப்படி எண்ணுவதும் பேசுவதும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல். 

இப்படி வாழ்வில் உயர்வு வரும்போது நாம் தேவனை மறந்துவிடக்கூடாது என்று மோசே இஸ்ரவேல் மக்களுக்கு அறிவுறுத்துவதை நாம் உபாகமத்தில் வாசிக்கலாம். "என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து," ( உபாகமம் 8 : 17 ) என்கின்றார் அவர். வெளியில் யாரிடமும் சொல்லாவிட்டாலும், உன் இருதயத்தில்கூட அப்படி நினையாதே என்று இந்த வசனம் கூறுகின்றது. 

இதுபோலவே சிலர் நோய்வாய்ப்படும்போது தேவனை நோக்கி ஜெபித்துவிட்டு, நோய் குணமானதும், "அந்த மருத்துவமனையில் நல்ல டிரீட்மெண்ட் கொடுத்து கவனித்துக்கொண்டார்கள் அதுவும் குணம்பெற ஒரு காரணம்" என்பார்கள். இதுவும் முழு விசுவாசத்தையும் அவர்கள் தேவன்மேல் வைக்கவில்லை என்பதனையே காட்டுகின்றது. எனவே,  இப்படிப் பேசுவதும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல்தான். 

கிறிஸ்தவர்களில் சிலர்கூட, "நன்றாகப் படித்ததால் நான் மருத்துவர் அல்லது  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரி ஆனேன்"  என்று கூறுவார்கள். ஆனால் ஒன்றினை இவர்கள் மறந்துவிடுகின்றனர்; அதாவது இப்படிக் கூறும் இவர்களைவிட நன்றாகப்  படித்த பலரும் அறிவுள்ளவர்களும்  இந்தத் தகுதியைப் பெறவில்லையே ஏன்? 

இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்," ( ரோமர் 8 : 38 ) கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்கின்றார்.

தாங்கள் அன்புசெய்தவர்களின் மரணம் ஏற்பட்டதாலும், தங்களுக்குத் தேவதூதர்கள் காட்சியளித்ததாலோ அல்லது "நான் காட்சிக்கண்டேன்" என்று பிறர் கூறுவதைக் கேட்டும் சிலர் தேவனைவிட்டு பின்மாறுவார்கள். எனவே, "அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்." ( உபாகமம் 13 : 3 ) என மோசே இஸ்ரவேல் மக்களை எச்சரிப்பதைப் பார்க்கின்றோம். 

எனவே, இப்படி உலக அதிகாரங்கள், பதவிகள் நமக்குக் கிடைக்கும்போதும், வேறு தெய்வங்கள், தூதர்கள் மூலம் தாங்கள் அடைந்த பலன்கள் குறித்துச் சிலர் சாட்சி கூறும்போதும்,  வல்லமை மிக்கச்  செயல்கள் புரியும் ஆற்றல் பெறும்போதும், நமது வாழ்வில் நிகழ்ந்துகொண்டிருக்கும் நல்ல அல்லது கெட்டக்  காரியங்களின்போதும் கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நாம் பிரிந்துவிடக்கூடாது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். எல்லா மகிமையும் கனமும் கிறிஸ்து இயேசு மூலம் தேவனுக்கே உரியது.   

இப்படிக் கிறிஸ்துவின்மேல் உறுதியான விசுவாசம் உள்ளவர்களாக வாழும்போதுதான் நாம் அவரை அன்புசெய்கின்றோம் என்பது உறுதியாகும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Thursday, June 27, 2024

இடறுதற்கான கல்லில் இடறியவர்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,244       💚 ஜூலை 06, 2024 💚 சனிக்கிழமை 💚

 
"என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்." ( ரோமர் 9 : 32 )

இந்த உலகத்தில் நீதியுள்ள வாழ்க்கை வாழும் பலர் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். நியாயப்பிரமாணம் கூறும் பல கட்டளைகளை அவர்களும் நிறைவேற்றுகின்றார்கள். இதுபோலவே அன்றைய யூதர்களும் இருந்தனர். அவர்கள் நியாயப்பிரமாணக்   கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தக் கட்டளைகளைக்  கடைபிடித்தனர். ஆனால் அப்படிக் கடைப்பிடித்தும் அவர்களால் கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இன்றுவரை யூதர்கள் மேசியா இனிதான் வரப்போகின்றார் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதனால்தான் கிறிஸ்துவை விசுவாசியாத பலரும்,  பல மதத்தினரும் மெய்யான தேவனை அறிந்துகொள்ள முடியவில்லை. 

இன்றும் கிறிஸ்தவர்களில் பலரும்  இப்படியே இருக்கின்றனர். அவர்கள் பல தேவ கட்டளைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களால் கிறிஸ்து அனுபவத்தை வாழ்வில் அனுபவிக்க முடியவில்லை. ஆவிக்குரிய மேலான காரியங்களை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. காரணம், அவர்கள் யூதர்களைப்போல தங்களது நீதிச் செயல்களுக்கும்  பக்திக்  காரியங்களுக்கும்தான் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். "எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்." ( ரோமர் 10 : 3 )

ஆலய வழிபாடுகள் நமக்குத் தேவைதான்; ஆனால் தேவனை அறிந்து தேவ அனுபவங்களுடன் வழிபாடுகளில் கலந்து கொள்ளும்போது தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கமுடியும். தேவன்மேல் முழு விசுவாசம் கொள்ளாமல் நமது சுய பக்தி, நமது ஆலய பணிவிடைகள் இவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்போமானால் நாம் யூதர்களைப்போல இடறுதற்கேதுவான கல்லில் இடறியவர்களாகவே இருப்போம். 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று வாசிக்கின்றோம். அதாவது, ஒரு கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார், அவரது இரத்தத்தினால்தான்  பாவ மன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலையும்  நமக்கு உண்டு என்பதை நூறு சதவிகிதம் நம்புபவனாகவும் அந்த நம்பிக்கையின்படி பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் உள்ளவனாகவும் இருக்கவேண்டும். 

மேலும், நாம் இதுவரைக் காணாத வேதம் கூறும் காணப்படாத சத்தியங்களாகிய பரலோகம், நித்திய ஜீவன், நரகம் போன்ற காரியங்களைக் குறித்த நிச்சயம் உள்ளவனாக இருக்கவேண்டும். இந்த நிச்சயங்கள் இல்லாமல் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனைத் தேடினபடியால் யூதர்கள் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

அவர்களுக்கு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நிச்சயம் இல்லாமலிருந்தது. காரணம், அவர்கள் கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பானவர்களே, கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் இல்லாமல் ஒருவருக்கு   பரலோகம், நித்திய ஜீவன், நரகம் போன்ற காரியங்களைக் குறித்த நிச்சயம் ஏற்படாது. வெறும் வாயளவில் மட்டும் இவைகளைக்குறித்துக் கூறிக்கொண்டிருக்கலாம். 

எனவே, இன்றும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு நாம் இப்படியே இருக்கக்கூடாது. வெறும் வெறுமனே  கட்டளைகளைகளையும் வழிபாடுகளையும்  நிறைவேற்றுவதற்கு மட்டும்  முன்னுரிமை கொடுத்து கிறிஸ்து அனுபவத்தை வாழ்வில் அனுபவிக்காதவர்களாக வாழக்கூடாது. கிறிஸ்துவைத் தனிப்பட்ட வாழ்வில் உணர்ந்தவர்களாக -  ஆவிக்குரிய மேலான காரியங்களை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனால்தான், "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே (கட்டளைகளை நிறைவேற்றுவதால் மட்டும்) எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) என்று வேதம் கூறுகின்றது. 

வேதாகமம் கூறும் முறைமையின்படி கிறிஸ்துவின்மேல் கொள்ளும் விசுவாசத்தினாலே மட்டுமே நாம் நீதிப்பிரமாணத்தைக் கண்டுபிடிக்கவும் கடைபிடிக்கவும்  முடியும். அப்போது யூதர்களைப்போல  இடறுதற்கான கல்லில் இடறமாட்டோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட வேண்டாம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,244      💚 ஜூலை 05, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

 
"மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" ( ரோமர் 9 : 21 )

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து அவர்களுக்குள்ள திறமை, அழகு, செல்வம், புகழ் போன்றவை நமக்கில்லையே என்று நாம் எண்ணி வாழ்வில் சோர்ந்துபோய்விடக்கூடாது. ஏனெனில், தேவன் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கியுள்ளார். நம்மை அற்பமாக உருவாக்கியுள்ளார் என்றால் அப்படி அவர் நம்மை உருவாக்க என்ன நோக்கம் என்று உணர்ந்து அவரது சித்தம் நம்மால் நிறைவேற வாழவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது. 

இதனை விளக்கவே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனம் மூலம் ஒரு உவமையைக் கூறுகின்றார். தேவன் ஒரு பரம குயவன். அவரிடமுள்ள களிமண்போன்றவன்தான் மனிதன். ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் உள்ளது. அதுபோல உரிமை அவருக்கு இருப்பதால் அவரது சித்தப்படி நம்மை ஒருவிதமாகவும் இன்னொருவரை வேறுவிதமாகவும் படைத்துள்ளார். 

உலகிலுள்ள அனைவருக்கும் ஒரேவித பதவி, செல்வம், புகழ் இருக்குமானால் யாரும் எவரையும் மதிக்கமாட்டார்கள், கீழ்ப்படியமாட்டார்கள்;   இந்த உலகமும் இயங்காது. எனவே இப்படிச் செய்துள்ளார் தேவன். இதனை நமது உடலைக்கொண்டே அப்போஸ்தலரான பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கூறுகின்றார். உடலில் பல உறுப்புக்கள் இருப்பதுபோலவே இதுவும். "அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே? அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.' ( 1 கொரிந்தியர் 12 : 19, 20 )

இன்று ஒருவேளை நமது ஊரில், சமூகத்தில் நாம் பலவீனர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் தேவன் அப்படி உலக மனிதர்கள் பார்ப்பதுபோல நம்மைப்  பார்ப்பவரல்ல. மதிப்புக் குறைவாகக் காணப்படும் உடல் உறுப்புகளுக்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல தேவனும் கொடுக்கின்றார். அற்பமான நம்மை அவர் உயர்வாக எண்ணுகின்றார்.

ஆம், "சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்" ( 1 கொரிந்தியர் 12 : 22, 23 )

எனவேதான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து அவர்களுக்குள்ள திறமை, அழகு, செல்வம், புகழ் போன்றவை நமக்கில்லையே என்று நாம் எண்ணி வாழ்வில் சோர்ந்துபோய்விடக்கூடாது. தேவனே மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் செய்வதுபோல பல்வேறு வித பாத்திரங்களாய் நம்மை உருவாக்கியுள்ளார். நாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை உணர்ந்துகொள்வோமானால் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடமாட்டோம். அப்போது நாம் நம்மை இப்படி உருவாக்கிய தேவனுக்கு நன்றி கூறுபவர்களாக இருப்போம். 

என்னோடு படித்த மற்றும் ஊரிலுள்ள மற்ற நண்பர்களைப்போல எனக்கு நல்ல உலகவேலை இல்லாமலிருந்தது. அப்போது அது எனக்கு மனவேதனையைக் கொடுத்தாலும் அது தேவ சித்தம் என்று உணர்ந்துகொண்டபின் எனது மனம் புத்துணர்ச்சி பெற்றது. இன்று மற்றவர்களைவிட எந்த நிலையிலும் குறைந்து போகாமல் தேவன் நடத்திக்கொண்டிருக்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, மற்றவர்களோடு நம்மை ஒப்பிடாமல், நம்மைக்குறித்த தேவ சித்தம் அறிந்து செயல்படுவோம். அப்போது வீணான மனக்கவலைகள் நம்மைவிட்டு வெளியேறிவிடும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Wednesday, June 26, 2024

சகோதர / சகோதரிகளுடைய ஐக்கியம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,240     💚 ஜூலை 01, 2024 💚 திங்கள்கிழமை 💚

"உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே," ( ரோமர் 1 : 11 )

கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் இருக்கவேண்டிய ஐக்கியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது. "உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும்" என இதனையே அப்போஸ்தலரான பவுல் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு எழுதுகின்றார்.

அதாவது, என்னிடம் விசுவாசம் இருக்கின்றது; உங்களிடமும் விசுவாசம் இருக்கின்றது. இந்த விசுவாசம் நமக்குள் இருப்பதனால் நாம் இருவரும் சேரும்போது இருவருக்கும் ஆறுதல் கிடைக்கின்றது என்று பொருள். 

சிலவேளைகளில் ஆவிக்குரிய வாழ்வில் சோதனைகள் வரும்போது நாம் சோர்ந்து போகின்றோம். ஆனால் அத்தகைய வேளைகளில் நம்மைப்போன்ற ஆவிக்குரிய நண்பர் ஒருவர் நமக்கு இருப்பாரானால் அவரிடம் நமது துன்பங்களைப்  பகிர்த்துக்கொள்ளும்போது மன ஆறுதல் கிடைக்கும். எனவேதான் ஆவிக்குரிய ஐக்கியம் நமக்குத் தேவையாக இருக்கின்றது. 

நமது சோகங்களையும் துன்பங்களையும் உலக நண்பர்களிடம் கூறும்போது நமக்கு ஏற்ற ஆறுதல் கிடைப்பதில்லை. காரணம் அவர்கள் ஆவிக்குரிய நிலையிலிருந்து பிரச்சனைகளைப்  பார்ப்பதில்லை. வெறும் உலகப்பிரகாரமான ஆறுதல் வார்த்தைகளைக்கூறி நம்மைத் தேற்றுவார்கள். மட்டுமல்ல, சிலவேளைகளில் அவர்களிடம் நாம் கூறிய காரியங்களை மற்றவர்களிடமும் கூறிவிடுவார்கள். 

ஆவிக்குரிய ஐக்கியம் என்று கூறியதும் நாம் செல்லும் சபையினரோடு உள்ள  ஐக்கியத்தை எண்ணிவிடக்கூடாது. மாறாக, தனிப்பட்ட முறையில் நமக்கு இருக்கும் ஆவிக்குரிய நண்பர்களின் ஐக்கியத்தை நான் குறிப்பிடுகின்றேன். அது அதிகமானவர்கள் கொண்டதாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. ஒன்றோ இரண்டோ ஆவிக்குரிய நண்பர்களோடு நாம் நெருங்கிய உறவினை வளர்த்துக்கொண்டாலே  போதும். இதன் காரணமாகவே இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களை ஊழியத்துக்கு அனுப்பும்போது இருவர் இருவராக அனுப்பினார். 

"ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.' ( பிரசங்கி 4 : 9,10 ) என்று வாசிக்கின்றோம். 

மேலும், "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்." ( சங்கீதம் 133 : 1-3 )

ஆம், சகோதரர்கள் ஒருமித்து வாழ்வதே ஒரு ஆசீர்வாதம்தான். ஆவிக்குரிய வாழ்வில் நாம் சிறப்படையவும்  கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடவும் நமக்கென சகோதர / சகோதரிகளுடைய ஐக்கியத்தை உருவாக்கிக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

நீதிக்கு அடிமையாக உங்களை ஒப்புக்கொடுங்கள்

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,241     💚 ஜூலை 02, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


".....அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

"தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது என்று அடிக்கடி கூறுகின்றிர்களே அது எப்படி?"  என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் அவருக்கு, "நீங்கள் உங்கள் அப்பா அல்லது அம்மாவுக்கு எப்படிக் கீழ்ப்படிந்து நடப்பீர்களோ அப்படி தேவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதுதான் ஒப்புக்கொடுத்தல்" என்று கூறினேன். அவர் கூறினார், "நான் எனது அப்பா அம்மாவுக்கு பொதுவாக எந்த விஷயத்திலும் கீழ்ப்படிவதில்லை".  

ஒப்புக்கொடுத்தல் என்பது ஒரு அடிமையைப்போல ஆதலாகும். ஒரு அடிமைக்கு எந்த உரிமையும் கிடையாது. அவனது உரிமையாளன் என்னக்  கூறுகிறானோ அதனைச் செய்து முடிப்பதுதான் அடிமையின் வேலை. அதாவது சுய சித்தமில்லாமல் அனைத்தையும் விட்டுவிடுதல் அல்லது இழத்தல். தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல் என்பது நம்மை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுத்து அவர் நம்மை ஆளும்படி கையளிப்பது. 

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் புதிய உதாரணத்தோடு விளக்குகின்றார். அதாவது, "முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல" என்கின்றார். பொறாமை, காய்மகாரம், வஞ்சனை, பொய், கபடம், ஏமாற்று, மற்றவர்களைக் குறித்து அபாண்டமான பேசுதல், காம எண்ணங்கள், பெருமை, மனமேட்டிமை போன்ற பல குணங்கள் முன்பு நமக்கு இருந்திருக்குமானால் நாம் அவற்றுக்கு முன்பு அடிமைகளாக இருந்துள்ளோம் என்று பொருள். 

அப்படி அவற்றுக்கு அடிமைகளாக இருந்து அவற்றையே செய்துகொண்டிருந்ததுபோல "இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." அதாவது, முன்பு தேவையில்லாத மேற்படிச் செயல்களைச் செய்ததுபோல இனி நீதிக்குரிய செயல்களைச் செய்யுங்கள் என்று கூறுகின்றார். இதுவே தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல். 

மட்டுமல்ல, இப்படிச் செய்வதே அறிவுள்ளவர்கள் செய்யும் ஆராதனையாகும் என்றும் அப்போஸ்தலரான பவுல் ரோமர் 12ஆம் அதிகாரத்தில் கூறுகின்றார்.  "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 )

அதாவது, இப்படி நம்மைத் தேவனுக்கு  ஒப்புக்கொடுக்காமல் செய்யும் ஆராதனைகள் அனைத்தும் புத்திகெட்ட ஆராதனைகள் என்று பொருள். எனவே, அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நாம் நமது அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இனி பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நமது அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுப்போம். தேவனுக்கேற்ற புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,242      💚 ஜூலை 03, 2024 💚 புதன்கிழமை 💚


"ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 )

இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதும் நமக்குச் சில துன்பங்கள் தொடர்கின்றன. ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." அதாவது நமக்கு மகிமையான எதிர்கால வாழ்வு  ஒன்று உள்ளது. அந்த மகிமைக்குமுன் நாம் இப்போது அனுபவிக்கும் பாடுகள் ஒன்றுமில்லாதவையே. 

இதற்கான காரணத்தை இன்றைய வசனத்துக்கு முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ( ரோமர் 8 : 17 )

அதாவது, இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள் எதிர்காலத்தில் நம்மை தேவனது பிள்ளைகளும் அவரது மகிமையின் சுதந்திரவாளிகளுமாக மாற்றுகின்றது. தேவ மகிமை அடையும் உரிமை நமக்கு எதிர்காலத்தில் உள்ளது. எனவே, இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்கின்றார் பவுல். 

உதாரணமாக, இந்த உலகத்தில் மருத்துவ படிப்பை எடுத்துக்கொள்வோம். ஒருவர் மருத்துவராகி சமூகத்தில் அங்கீகாரமும் மகிமையும் அடையவேண்டுமானால் அவர் ஐந்து ஆண்டுகள் கடுமையான படிப்பை மேற்கொள்ளவேண்டும். பல்வேறு பயிற்சிகள், செயல்முறைத் தேர்வுகள் இவைகளை மேற்கொள்ளவேண்டும். இவைகள் படிக்கும் மாணவர்களுக்குத் துன்பம் தருவதாகவே இருக்கும்.  

இந்த மாணவர்கள், வீட்டைவிட்டு, நண்பர்களைவிட்டு, சாதாரண படிப்புப்  படிக்கும் தங்கள் வயது மாணவர்கள் அனுபவிக்கும் சில சுதந்திரங்கள் இல்லாமல் இருக்கவேண்டியிருக்கும். ஆம், இத்தகைய பயிற்சிகள், தேர்வுகள் இவற்றைக் கடக்கும்போது மருத்துவர் எனும் பட்டமும் சமூகத்தில் ஒரு அங்கீகாரமும் கிடைக்கின்றது. அதாவது அந்த மாணவன் இதுவரை அனுபவித்தத் துன்பங்கள்  இந்த மகிமையை அவர்களுக்குக் கொண்டுவந்தது. 

ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தின் மகிமை இப்படி இருக்குமானால் பரலோக மகிமை எப்படிப்பட்டதாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். நாம் தேவனது பிள்ளைகளும் சுதந்தரருமாக, கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாக கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படுவோம். ஆம், அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

எனவே நாம் இந்த உலகத்துப் பாடுகள், துன்பங்களை கிறிஸ்துச் சகித்ததுபோல சகித்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம். தேவனுக்கு ஒப்பான அவர்  "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:7,8) எனும்போது அவர் எத்தனை பெரிய துன்பங்களைச் சகிக்கவேண்டியிருந்திருக்கும்!!! எனவே தேவன் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தி, எல்லோருடைய முழங்கால்களும் அவருக்குமுன் முடங்கும்படியான மகிமையினைக் கொடுத்தார். 

எனவே துன்பங்களை சகித்து வாழ தேவவரம் வேண்டுவோம். நமது இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

தேவன் மோசேயோடே இருந்ததுபோல, நம்மோடும் இருப்பார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,243       💚 ஜூலை 04, 2024 💚 வியாழக்கிழமை 💚

"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 )

யோசுவாவைத் திடப்படுத்தத் தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். மோசேயுடன் தேவன் செயல்பட்ட விதம், மோசே தேவனோடு கொண்டிருந்த ஐக்கியம் இவற்றை யோசுவா நன்கு அறிந்திருந்தார். மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பணி  செய்யும்போது யோசுவா அவரோடே இருந்து வந்தார். 

"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்;..............நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.' ( யாத்திராகமம் 33 : 11 ) என்று வாசிக்கின்றோம். எனவே, மோசேயைப்பற்றி யோசுவா அதிகம் அறிந்திருந்தார். 

மோசேயோடு தேவன் திடீரென்று வந்து விடவில்லை. மோசே பிறந்ததுமுதலே தேவன் மோசேயோடு இருந்தார். அதனால் பிரசவத்தின்போது எகிப்திய மருத்துவச்சிகள் அவன்மேல் இரக்கம் வைத்துக் கொல்லாமல் காப்பாற்றினார்கள். நாணல் பெட்டியில் வைத்து நதிக்கரையில் அனாதையாக விடப்பட்டபோதும்  தேவன் அவனோடேகூட இருந்து பார்வோனின் மகள் கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்தார்; மேலும், அந்த இக்கட்டிலும் ஆச்சரியமாகச்   சொந்த தாயே பாலூட்டும் வாய்ப்பை ஏற்படுத்தினார்; அரண்மனை வாழ்க்கைமூலம் பல துறைகளில் வித்தகனாகக்  கிருபைசெய்தார். ஆம்,  மோசே பிறந்தது முதல் தேவன் அவனோடு இருந்தார்.

இப்படிப் பலத் திறமைகளில் தகுதிபெறச் செய்து பின்னர் பார்வோனிடம் மோசேயைத் தேவன் அனுப்பினார். இந்த மோசேதான் பல்வேறு அற்புதங்களையும்  அதிசயங்களையும் மக்கள் கண்முன் செய்து அவர்களைக் கானானுக்கு நேராக வழிநடத்தினார். 

இப்படி மோசேயை வழிநடத்தியவர் இன்று நம்மைப் பார்த்தும் கூறுகின்றார், "நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." என்று. இதனை வாசிக்கும் அன்புச் சகோதரனே சகோதரியே, தேவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழ்வோமானால் யோசுவாவுடன் தேவன் கூறிய இந்த வார்த்தைகள் நமக்கும் சொந்தம்தான். காரணம், தேவன் ஆள்பார்த்துச் செயல்படுபவரல்ல. 

நமது வாழ்வின் குறிப்பிட்டச் சில நாட்களுக்கு மட்டுமல்ல, "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, நமது இறுதி  மூச்சு உள்ளவரை தேவன் நம்மைக் கைவிடமாட்டார்  என்று பொருள். மரித்தபின்னரும் மோசேயைத் தேவன் கைவிடவில்லை. இதனை, "அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார்." ( உபாகமம் 34 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம், தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது, நாம் உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவரும், எந்த உலகப் பிரச்சனைகளும்  நமக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; தேவன் மோசேயோடே இருந்ததுபோல, நம்மோடும் இருப்பார் ; நம்மைவிட்டு அவர் விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Tuesday, June 25, 2024

வெற்றிபெறுபவன் அனைத்தையும் பெற்றுக்கொள்வான்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,237     💚 ஜூன் 28, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 7 )

ஒரு மகனுக்குத் தகப்பனுடைய அனைத்துச் சொத்து சுகங்களின்மேலும் முழு அதிகாரம் உண்டு. இதுபோலவே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து அவருக்குக் குமாரனாகும்  தகுதிபெறும்போது  அந்தத் தகப்பனுக்குள்ள  அதிகாரங்கள் நமக்குக் கிடைக்கின்றது. அதற்கு நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனையே "ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

வேதாகமத்தில் லேவியராகமம் முதல் பல்வேறு இடங்களில் நாம் "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." ( லேவியராகமம் 26 : 12 ) எனும் வசனத்தைக் காணலாம். 

தேவன் எப்போதும் நம்மோடு தங்கி நம்மோடு இருக்கவே விரும்புகின்றார். அதற்குத் தகுகியுள்ளவர்களாக நாம் வாழ வேண்டியதே முக்கியம். இன்றைய தியான வசனம் கூறும் வார்த்தைகளைப்போன்று  வேதத்தில் பல்வேறு இடங்களிலும்  நாம் வாசிக்கலாம். (உதாரணமாக,  எரேமியா- 7:23, 11:3, 30:22, 31:1, 32:38 இன்னும் பல) 
 
ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இந்த வசனங்கள் அனைத்திலும்,  "நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." என்று கூறப்பட்டுள்ளது.  ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவனை நாம் தகப்பனாக அறிந்து அவரோடு சேர்வதால்,  "நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும் அனைவருமே அவரது குமாரனும் குமாரத்திகளும்தான். 

இப்படி நாம் அவரது குமாரனும் குமாரத்திகளுமாக இருக்கவேண்டுமானால் முதலில் அவரது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. "என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்." ( எரேமியா 7 : 23 )

மேலும் இன்றைய தியான வசனத்தினைத் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 8 ) 

அதாவது, தேவன் காட்டிய வழிகளில் நடவாதவர்கள் மேற்படி வசனம் கூறுவதுபோல பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யருமாக இருக்கின்றனர். அத்தகையவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே அன்பானவர்களே, நாம் ஜெயம்கொள்ளும் ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதற்கான வழிகளை நமக்குத் திறந்து வைத்துள்ளார். அந்த வழியாகிய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியில் வாழும்போது மட்டுமே நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். அப்போது, இன்றைய வசனம் கூறுவதுபோல நாம் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவோம். அவர் நமது தேவனாயிருப்பார்; நாம் அவர்  குமாரனாக குமாரத்திகளாக இருப்போம்.  

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்