'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,243 💚 ஜூலை 04, 2024 💚 வியாழக்கிழமை 💚
யோசுவாவைத் திடப்படுத்தத் தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். மோசேயுடன் தேவன் செயல்பட்ட விதம், மோசே தேவனோடு கொண்டிருந்த ஐக்கியம் இவற்றை யோசுவா நன்கு அறிந்திருந்தார். மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பணி செய்யும்போது யோசுவா அவரோடே இருந்து வந்தார்.
"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்;..............நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.' ( யாத்திராகமம் 33 : 11 ) என்று வாசிக்கின்றோம். எனவே, மோசேயைப்பற்றி யோசுவா அதிகம் அறிந்திருந்தார்.
மோசேயோடு தேவன் திடீரென்று வந்து விடவில்லை. மோசே பிறந்ததுமுதலே தேவன் மோசேயோடு இருந்தார். அதனால் பிரசவத்தின்போது எகிப்திய மருத்துவச்சிகள் அவன்மேல் இரக்கம் வைத்துக் கொல்லாமல் காப்பாற்றினார்கள். நாணல் பெட்டியில் வைத்து நதிக்கரையில் அனாதையாக விடப்பட்டபோதும் தேவன் அவனோடேகூட இருந்து பார்வோனின் மகள் கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்தார்; மேலும், அந்த இக்கட்டிலும் ஆச்சரியமாகச் சொந்த தாயே பாலூட்டும் வாய்ப்பை ஏற்படுத்தினார்; அரண்மனை வாழ்க்கைமூலம் பல துறைகளில் வித்தகனாகக் கிருபைசெய்தார். ஆம், மோசே பிறந்தது முதல் தேவன் அவனோடு இருந்தார்.
இப்படிப் பலத் திறமைகளில் தகுதிபெறச் செய்து பின்னர் பார்வோனிடம் மோசேயைத் தேவன் அனுப்பினார். இந்த மோசேதான் பல்வேறு அற்புதங்களையும் அதிசயங்களையும் மக்கள் கண்முன் செய்து அவர்களைக் கானானுக்கு நேராக வழிநடத்தினார்.
இப்படி மோசேயை வழிநடத்தியவர் இன்று நம்மைப் பார்த்தும் கூறுகின்றார், "நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." என்று. இதனை வாசிக்கும் அன்புச் சகோதரனே சகோதரியே, தேவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழ்வோமானால் யோசுவாவுடன் தேவன் கூறிய இந்த வார்த்தைகள் நமக்கும் சொந்தம்தான். காரணம், தேவன் ஆள்பார்த்துச் செயல்படுபவரல்ல.
நமது வாழ்வின் குறிப்பிட்டச் சில நாட்களுக்கு மட்டுமல்ல, "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, நமது இறுதி மூச்சு உள்ளவரை தேவன் நம்மைக் கைவிடமாட்டார் என்று பொருள். மரித்தபின்னரும் மோசேயைத் தேவன் கைவிடவில்லை. இதனை, "அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார்." ( உபாகமம் 34 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம்.
ஆம், தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது, நாம் உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவரும், எந்த உலகப் பிரச்சனைகளும் நமக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; தேவன் மோசேயோடே இருந்ததுபோல, நம்மோடும் இருப்பார் ; நம்மைவிட்டு அவர் விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment