வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,223     💚 ஜூன் 14, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே." ( யோவான் 5 : 39 )

பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி 300 க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் இருப்பதாக சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தத்  தீர்க்கதரிசனங்கள் போதுமான அளவு துல்லியமாக கிறிஸ்துவே மேசியா என்பதனைக் குறிப்பிடுவன.  இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். 

பரிசேயரும் சதுசேயரும் இயேசு கிறிஸ்துதான் வரவேண்டிய மேசியா என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை.  இன்றைக்கும் யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே கிறிஸ்துவைக் குறித்துத் துல்லியமான தீர்க்கத்தரிசனங்கள் கூறப்பட்டுள்ளன என்பது ஆச்சரியமான உண்மையல்லவா?

கிறிஸ்துவைக் குறித்தத் தீர்க்கத்தரிசனங்கள் உண்மையாகவே நிறைவேறியுள்ளது ஆச்சரியமான உண்மையென்றால், அந்தக்  கிறிஸ்துக்  கூறியவையும் நிச்சயம் நிறைவேறும் என்று நாம் நம்பலாம் அல்லவா? ஆம்,  அவற்றை சந்தேகமில்லாமல் விசுவாசிக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. இயேசு கிறிஸ்து அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது நித்தியஜீவன். "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." ( 1 யோவான்  2 : 25 )

இயேசு கிறிஸ்து இதனைத் தெளிவாகக் கூறினார், "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது." ( யோவான் 6 : 40 ) என்றார். எனவே, நித்தியஜீவன் என்பது மெய்யானது. 

ஆம் அன்பானவர்களே, வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளபடி வேத வாக்கியங்களுக்குள் நித்திய ஜீவன் உள்ளது. ஏனெனில் அவை வார்த்தையான தேவனாகவே இருக்கின்றன. அவரது வார்த்தைகளால் நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லாத வாழ்க்கை உண்டு என்பதால் நாம் வேத வசனங்களை ஏற்றுக்கொண்டு தியானித்து வாழவேண்டும். 

நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது கடமைக்காக வாசிக்காமல், குறிப்பிட்ட ஆசீர்வாத வசனங்களைத் தேடி வாசிக்காமல் அந்த வேத வசனங்களுக்குள் இருக்கும் சத்தியத்தை உணர்ந்து வசித்துப் பழகவேண்டும். வேத வசனங்கள் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கூறுபவை மட்டுமல்ல, அவை நாம் நித்தியஜீவனை அடைந்திட உதவுபவை. 

இன்று பல கிறித்தவ ஊழியர்கள் இயேசுவின் காலத்துப் பரிசேயரையும்  சதுசேயரையும் போலவே இருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவை நித்திய ஜீவனின் ஊற்றாகப் பார்க்காமல் அதிசயங்கள் செய்யும் அற்புதராக மட்டுமே பார்த்துப்  பழகி அப்படியே மக்களுக்குப் போதிப்பவர்களாக இருக்கின்றனர்.  ஆம் அன்பானவர்களே, நாம் வேதாகமம் வாசிக்கும் முறைமையை ஆராய்ந்து பார்ப்போம். வேத வசனங்கள் கூறும் மெய்யான சத்தியத்தை  உணர்ந்துகொள்ள வாசிப்பவர்களாக மாறும்போது மட்டுமே நித்தியஜீவனை நாம் அடைந்திட முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                    

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்