Sunday, June 09, 2024

பாவ அறிக்கை செய்வோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,228       💚 ஜூன் 19, 2024 💚 புதன்கிழமை 💚 


"வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்."  ( லுூக்கா 13 : 25 )

தேவனுக்கு ஏற்பில்லாத வாழ்க்கை வாழும் மனிதர்களது பரிதாபகரமான நிலையினை இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் விளக்குகின்றார். உலகத்தின் இறுதிநாட்களில் நியாயத்தீர்ப்பு முடிந்து பரலோகக் கதவுகள் அடைக்கப்படும்போது மனிதர்கள் எப்படிப் புலம்புவார்கள் என்பதனை அவர் இங்கு விளக்குகின்றார். 

இப்படிக் கதவைத் தட்டுகின்றவர்கள் ஆலயங்களுக்குச் செல்லாதவர்களோ பக்திக் காரியங்களில் ஈடுபடாதவர்களோ அல்ல. மாறாக, ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டு கிறிஸ்துவின் உடலை உண்டு இரத்தத்தைப் பானம்பண்ணியவர்கள்தான். மட்டுமல்ல இவர்கள் தேவ ஊழியர்களின் பிரசங்கங்களைக் கேட்க ஆர்வமாய் ஓடியவர்கள்தான். இதனையே இயேசு கிறிஸ்து தொடர்ந்து கூறுகின்றார்:-

"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம் பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார்." ( லுூக்கா 13 : 26, 27 )

தேவ சமூகத்தில் அப்பம் புசித்து வீதிகளில் நடக்கும் போதகங்களைக் கேட்பது மட்டும் ஒருவரை தேவனுக்கு ஏற்புடையவர் ஆக்கிடாது எனும் உண்மையினை இயேசு இங்குக்  கூறுகின்றார். நமது தனிப்பட்ட வாழ்க்கை தேவனுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டியது அவசியம். "நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று அவர் நம்மைப்பார்த்துக் கூறும் நிலை நமக்கு ஏற்படுமானால் எப்படியிருக்குமென்று  எண்ணிப்பாருங்கள்.!!!

நமக்குப் பல்வேறு திறமைகள் இருக்கலாம், அதிக அளவு செல்வம் இருக்கலாம், இவற்றைப் பயன்படுத்தி நம்மைப் புகழ்ந்து பேசும் மக்களை நாம் நமக்கென ஆதாயமாக்கிக் கொள்ளலாம், ஆனால் இறுதிநாளில் இவை எதுவுமே நமக்குக் கைக்கொடுக்காது. ஆம் அன்பானவர்களே,  "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 )

எனவே நாம் நமது ஆத்துமாவை நஷ்டப்படுத்தாமல் வாழவேண்டியது அவசியம். தேவனோடு தனிப்பட்ட ஐக்கியத்தை நாம் வளர்த்துக்கொள்ளாமல் நம்மால் ஆவிக்குரிய வாழ்க்கையை வெற்றிகரமாக வாழமுடியாது.  ஆலய வழிபாடுகளும் இதர ஆவிக்குரிய செயல்பாடுகளும் நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக மாற்றிடாது. தேவனை அறியும் அறிவும் தேவ ஐக்கியமும் மிகவும் முக்கியமாக நமக்குத் தேவை.

எனவே அன்பானவர்களே, தேவனோடு நமதுத் தனிப்பட்ட உறவினை வளர்த்துக்கொள்ள முயல்வோம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மெய்யான மனஸ்தாபத்தோடு அவரது பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட மன்றாடுவோம். ஆம், கிறிஸ்தவம் வெற்று வார்த்தைகளில் அடங்கியுள்ள மார்க்கமல்ல; வேதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் அனுபவங்கள் அனைத்துமே நாம் அனுபவிக்க வேண்டியவை. எனவே நமது ஒட்டுமொத்த வாழ்வையும் அவருக்குச் சமர்ப்பித்து பாவ அறிக்கைசெய்வோம்.

"நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன்" என்று அவர் சொல்லாமல், "என் அருமை மகனே / மகளே வா என்னோடு" என்று அவர் நம்மை அணைத்துக்கொள்ளும் மேலான நிலையினை நாம் பெற்றிட முயல்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments: