Thursday, June 20, 2024

போதகர்கள் தேவனை அறியாமல் துரோகம்பண்ணினார்கள்.

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,235     💚 ஜூன் 26, 2024 💚 புதன்கிழமை 💚

"கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்.." ( எரேமியா 2 : 8 )

இன்றைய தியான வசனம் கூறும் எரேமியா காலத்தில் இருந்த நிலைமைதான் இன்றும் நிலவுகின்றது.  வேதத்தைப் போதித்து மக்களை நேர்வழியில் நடத்தவேண்டிய  ஆசாரியர்கள் தேவனை அறியாமல் இருந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது போலவே இன்றும் தேவனை அறியாதவர்கள்தான் பெரும்பாலும் போதகர்களாக இருக்கின்றனர்.  ஆம் அன்பானவர்களே, தேவனை அறிவது மேலான ஒரு அனுபவம். அது வேதாகமக் கல்லூரிப்படிப்பால் ஒருவருக்கு ஏற்படாது. 

ஒருவர் தேவனை அறியும்போதுதான் அவர் மேலான ஆவிக்குரிய அனுபவங்களையும், வேத வசனங்களுக்கான மெய்யான பொருளையும் அறிந்துகொள்ளமுடியும். அப்படி அறிந்த ஒருவர்தான் மற்றவர்களுக்கு தேவனைப்பற்றித் தெளிவுபடுத்த முடியும். சார்ள்ஸ்  ஸ்பர்ஜன் எனும் தேவ மனிதன் இதுகுறித்து கூறும்போது, "தேவனை அறியாத ஒருவன் மக்களுக்கு தேவனைப்பற்றி அறிவிப்பது, பறக்க முடியாத குள்ளவாத்து கழுகுக்  குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக்கொடுக்க முயல்வதுபோன்றது" என்று கூறுகின்றார். 

இன்று விசுவாசிகள் பலரும் கழுக்குக் குஞ்சுபோன்று துடிப்பாக உள்ளனர். பல விசுவாசிகள் அவர்களை வழிநடத்துபவர்களைவிட தேவ அனுபவமும் தேவனைப்பற்றிய அறிவும் கொண்டுள்ளனர். ஆனால் வழிநடத்தும் குருக்கள், போதகர்கள், பாஸ்டர்கள் எந்த வித ஆன்மீக அனுபவமுமின்றி குள்ள வாத்துக்களைப்போன்று இருக்கின்றனர்.  

இப்படிக்  கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் தேவனை அறியாமலுமிருந்து, தேவனுக்குத் துரோகம்பண்ணினபடியினால் இதற்கு மாற்றாக தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். ஆம், போதகர்களும் குருக்களும் தேவனை அறியாமலிருந்தாலும் ஆவியானவர் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் நடத்த முடியும்.  எனவேதான், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவம் பெறும்போது ஆவியானவர் தனது ஆளுகைக்குள் நம்மை எடுத்துக்கொள்கின்றார். எனவே நம்மை வழிநடத்தும் உலக போதகர்களும் குருக்களும் நம்மைச் சரியான பாதையில் நடத்தத் தவறினாலும் ஆவியானவர் நம்மை நேர்மையான பாதையில் நடத்துவார். 

ஆம் அன்பானவர்களே, இதுவே  உண்மையாகும். எனது முப்பது ஆண்டுகால   ஆவிக்குரிய அனுபவத்தில் ஆலய மறையுரைகளில் போதகர்கள் மூலம் கேட்டு உணர்ந்துகொண்ட சத்தியங்களைவிட ஆவியானவர் தெளிவுபடுத்தியவை அதிகம். பொதுவாக நான் எந்த ஊழியர்களது போதனைகளையும் அதிகம் கேட்பதில்லை; போதகர்களது ஆவிக்குரிய நூல்களையும்  அதிகம் வாசிப்பதில்லை. ஆனால் எனக்கு ஆவியானவர் உணர்த்துவதையே எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எழுதுபவை வேதத்துக்கு முரணாக இருப்பதாக யாரும் கூறியதில்லை. 

ஆம் அன்பானவர்களே, தேவனைத் தனிப்பட்ட முறையில் நாம் அறிந்துகொள்ளும்போது ஆவியானவர் நம்மைக் சகல  சத்தியத்துக்குள்ளும் வழிநடத்துவார். எனவேதான்  நாம் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டியது அவசியம். தேவ ஆவியானவரின் துணையுடன் வேதாகமத்தை வாசிப்போம். சத்திய ஆவியானவர் நம்மைச் சத்திய வழியில் நடத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: