இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, June 21, 2024

கவ்வாத்து (Pruning)

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,236     💚 ஜூன் 27, 2024 💚 வியாழக்கிழமை 💚


"என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15 : 2 )

நாம் கனி கொடுக்கின்ற ஓர் வாழ்க்கை வாழவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். அவரை ஆராதிப்பவர்களாக, அவரை ஸ்தோத்தரிப்பவர்களாக மட்டுமல்ல, அப்படி அவரை ஆராதிக்கும் நாம் கனிகொடுக்கின்ற வாழ்க்கை வாழவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். 

ஒரு சிறந்த தோட்டக்காரன் எப்படித் தன் தோட்டத்திலுள்ள மரங்களை பராமரிப்பானோ அதுபோலவே தேவன் தனது மக்களைப் பராமரிக்கின்றார். இதற்காக அவர் இரண்டு காரியங்களைச்  செய்கின்றார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

முதலில், "கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. செடியோடு இணைக்கப்பட்டிருக்கும் கொடிகள் உலர்ந்துபோய்விட்டது என்றால் அதில் கனிகள் உருவாக முடியாது. அத்தகைய கொடிகளை அவர் அறுத்துப்போடுகின்றார். காரணம் அந்தக் கொடிகளால் யாருக்கும் பலனில்லை. மேலும் அவை தேவையற்று இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். தேவையற்ற கொடிகள் என்று தேவன் நம்மை அறுத்துப் போட்டுவிடாதபடி நமது வாழ்க்கையை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாகக்  கூறப்பட்டுள்ளது, "கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." விவசாயிகளுக்குத் தெரியும் மரங்களை கவ்வாத்து (Pruning)  செய்துவிட்டால் அவை அதிகக் கனிகளைக்கொடுக்கும் என்று. கவ்வாத்து செய்வதால் மரங்களின் தேவையற்ற வளர்ச்சிக் கட்டுப்படுத்தப்படும், தளிர்களும்  மொட்டுகளும் பூக்களும் அதிகம் வந்து அதிக கனிகளை உற்பத்திசெய்யும். பழையன கழிந்து புதியன தோன்றும். 

இப்படி மரங்களை வெட்டி கவ்வாத்துச் செய்வது மரங்களுக்கு வேதனைதரும் ஒரு செயல்தான். ஆனால் அது அவைகளின் நன்மைக்கே. இதுபோலவே தேவன் ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்கும் மக்களுக்கும் சில துன்பங்களைக் கொடுக்கின்றார். இந்தத் துன்பங்கள் நம்மில்  தேவையற்ற உலகப்பிரகாரமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றது. மட்டுமல்ல ஆவிக்குரிய வாழ்வில் நம்மில்  புதிய  தளிர்களும்  மொட்டுகளும் பூக்களும் அதிகம் தோன்றி அதிகக்  கனிகளை உற்பத்திசெய்யும் மனிதர்களாக நாம் மாறுகின்றோம்.  

எனவே, ஆவிக்குரிய வாழ்வில் நமக்குத் துன்பங்கள் ஏற்படும்போது நாம் தயங்கவோ கலங்கவோ வேண்டியதில்லை. தேவன் நம்மைப் பண்படுத்துகின்றார் என்று உணர்ந்து அவரது பலத்தக் கரங்களுக்குள் அடங்கி இருக்கவேண்டியது தான் நாம் செய்யவேண்டியது.  

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது துன்பங்கள் நம்மைச் சூழ்ந்தால் நாம் தேவனுக்குமுன் பாக்கியவான்கள் என எண்ணிக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments: