Thursday, June 06, 2024

பிதாவின் ஆவியானவர்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,224                          💚 ஜூன் 15, 2024 💚 சனிக்கிழமை 💚

"நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்." ( யோவான் 14 : 16 )

பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய ஒரு உண்மையினை இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது பரிசுத்த ஆவியானவர் பிதாவின் ஆவியானவர். ஒருவருக்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் வேண்டுமானால் முதலில் அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவராக இருக்கவேண்டும். அப்படி விசுவாசமுள்ளவராக இருக்கும்போதுதான் அவரது பரிந்துரையின்பேரில் பிதாவானவர் பரிசுத்த ஆவியானவரை ஒருவருக்குக் கொடுக்கின்றார். 

பாரம்பரிய சபைகளில் திடப்படுத்துதல் ஆராதனை என்று ஆராதனை செய்து சிலச் சடங்குகள் செய்து ஆவியானவரை ஒருவர் பெற்றுக்கொண்டதாகக் கூறிக்கொள்கின்றனர். பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது வெறும் சடங்குமுறைகள் சம்பந்தப்பட்டதல்ல. அது மேலான ஒரு ஆவிக்குரிய அனுபவம். பரிசுத்த ஆவியானவரை ஒருவர் பெற்றுக்கொள்ளும்போது அவரது ஆவிக்குரிய வாழ்வில் பெரிய மாறுதல் உண்டாகும். காரணம், அவர் பெற்றுக்கொண்டது பிதாவின் ஆவியானவர். அந்த ஆவியானவர் ஒருவரில் வரும்போதுதான் அவர் கிறிஸ்துவைக் குறித்தச்  சாட்சியை உறுதியாகக் கூறமுடியும்.

இதனையே இயேசு கிறிஸ்து, "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்." ( யோவான் 15 : 26 ) என்று கூறினார்.

ஆவியானவர் ஒருவரில் வரும்போதுதான் ஒருவர் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடியும். இன்று இந்தச் சத்தியம் மறைக்கப்பட்டு வெறும் சடங்குகள் மூலம் பரிசுத்த  ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதாகப்  பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் பல சபைகளிலோ வெறும் கூப்பாடுபோட்டு அலறுவதுதான் பரிசுத்த ஆவியின் அனுபவம் என்று நம்பப்படுகின்றது.  எனவே, இப்படிக் கூப்பாடுபோட்டுத் துள்ளும் பலரிடம் ஆவிக்குரிய கனிகளை நாம் காணமுடிவதில்லை. 

அன்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடம் கூறினார், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) என்று. நாம் கிறிஸ்துவுக்குச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவிபுரிபவரே பரிசுத்த ஆவியானவர். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவம் வெறும் சடங்குகளோடு சம்பந்தப்பட்ட மார்க்கமல்ல, அது அனுபவபூர்வமானது. ஒவ்வொரு வசனமும் சத்தியமானது. அவற்றை வெறுமனே கூறிக்கொள்வதாலோ ஒரு சில வெளிச் செயல்பாடுகளாலோ ஒருவர் அவற்றை அனுபவிக்கமுடியாது. ஆவியானவரின் அபிஷேகம் பெற்ற ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் தன்னோடு இருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படி இருந்தால் மட்டுமே நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்கள்.  

இதுவரை பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெறவில்லையானால் நாம் அதற்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடவேண்டியது அவசியம். அவர் வரும்போது  "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து. எனவே, அவர் நம்மில் வரும்போதுதான் நம்மால் பாவத்தை மேற்கொள்ள முடியும். இந்தச் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் நம்மை நிறைக்கும்படி மன்றாடுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: