Thursday, June 13, 2024

கிறிஸ்துவே பிதாவை வெளிப்படுத்தினார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,230                        💚 ஜூன் 21, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚 

"தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்." ( யோவான் 1 : 18 )

பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் பொதுவாக தேவனை ஆராதித்து வழிபட்டு வந்தாலும் அவரோடு அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததில்லை. யெகோவா அல்லது யாவே கடவுள் என்று கூறி ஆராதித்தனர். மட்டுமல்ல அவரை அறிந்து வாழ்ந்த தீர்க்கத்தரிசிகளும் பரிசுத்தவான்களும் அவரை சர்வ வல்லவராக, ஆபிரகாமின் தேவனாக,  ஈசாக்கின் தேவனாக மட்டுமே   அறிந்து  ஆராதித்து வந்தனர். ஆனால் அவரை யாரும் கண்டதில்லை.

"நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை." ( யோவான் 5 : 37 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார்.

மேலும், பிதாவாகிய தேவனைக் குறித்து, "அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்." ( 1 தீமோத்தேயு 6 : 15,16 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

இந்தப் பிதாவாகிய தேவனை பிதாவினிடமிருந்து வந்த குமாரனான இயேசு கிறிஸ்துதான் முதன் முதலில்  மக்களுக்குத்  தெளிவுபடுத்தினார். அவர் எங்கோ இருந்து வல்லமையுடன் ஆட்சிசெய்யும் அரசர் போன்றவரல்ல; மாறாக அவர் நம்மோடு இருக்கும் நமது தகப்பனைப் போன்றவர்; அன்பானவர்,  என்று தெளிவுபடுத்தினார்.  எனவே நாம் இன்று பழைய ஏற்பாட்டுக்கால மக்களைப்போல தேவனை அறியாமல் ஆராதிப்பவர்களல்ல. 

அன்பானவர்களே, பிதாவாகிய தேவனை நாம் நேரடியாகப் பார்க்கமுடியாதவர்கள் எனினும்  தேவனின் தன்மை பொருந்தியவராக வாழ்ந்த இயேசு கிறிஸ்துவை நாம்  அறிய முடியம். "இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்." ( எபிரெயர் 1 : 3 )
 
எனவேதான், "நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்" ( யோவான் 8 : 19 ) என்றார் இயேசு கிறிஸ்து. ஆம் அன்பானவர்களே, தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை என்றாலும் பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே நாம் பழைய ஏற்பாட்டுக்கால மக்களைப்போல அறியாத பிதாவையல்ல, நாம் அறிந்த பிதாவையே ஆராதிப்பவர்களாக இருக்கின்றோம். ஏனெனில் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நாம் அறிந்துள்ளோம்.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஆசாரியர்கள் மட்டுமே தேவனது மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் சென்று சேரமுடியும். ஆனால் கிறிஸ்து இயேசு மூலம் நாம் பிதாவை அறிந்துள்ளதால் அவரை விசுவாசிக்கும் நாம் அனைவருமே ஆசாரியர்களும் லேவியர்களுமாக இருக்கின்றோம்.  "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்கிறார் அப்போஸ்தலரான பேதுரு.

"ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 16 ) கிறிஸ்து பிதாவாகிய தேவனை நமக்கு வெளிப்படுத்தியுள்ளதால் நாம் பெற்றுள்ள பேறு இதுதான். ஆம், பிதாவாகிய தேவனிடம் நெருங்கிச் சேர்ந்து நமது விண்ணப்பங்களைக் கூற முடியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் நாம் இந்த உரிமைபேறினைப் பெற்றுள்ளோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: