தேவனை அறியும் அறிவை வேண்டுவோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,217      💚 ஜூன் 08, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதி யுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்." ( கொலோசெயர் 1 : 12, 13 )

பிதாவாகிய தேவனைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் முக்கியமான ஒரு சத்தியத்தை இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார்.  அதாவது நாம் குமாரனாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்குள்ளவர்களாக வேண்டுமானால் பிதாவாகிய தேவனின் சித்தம் நமக்குத் தேவையாக இருக்கின்றது. அவரே நம்மை ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு  நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குகின்றார். எனவே பிதாவாகிய தேவனை நாம் ஸ்தோத்தரிக்கவேண்டும். 

அவரே நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்துகின்றார். இதனையே இயேசு கிறிஸ்துவும், "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்." ( யோவான் 6 : 44 ) என்று குறிப்பிட்டார். ஆம், பிதாவின் சித்தத்தால் நாம் குமாரனை அறிகின்றோம்; அவரோடு சேருகின்றோம்.

பிதா என்னை இழுத்துக்கொள்ளவில்லை, எனவே நான் கிறிஸ்துவை அறியவில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை   என்று கூறி நாம் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொள்ளாமல் விலகி நின்றுவிடக்கூடாது. காரணம் இயேசு கிறிஸ்து தொடர்ந்து கூறினார், "எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்." ( யோவான் 6 : 45 )

அதாவது, நாம் நமது ஜெபங்களில் கேட்கவேண்டியது உலக ஆசீர்வாதங்களையல்ல, மாறாக சத்தியத்தை அறியும் ஆவலில் பிதாவிடம் மன்றாடவேண்டும். இப்படி சத்தியத்தை அறிந்திடும் ஆவல் உள்ளவர்களாய் வாழ்பவர்களுக்கு பிதாவாகிய தேவன் தனது குமாரனை வெளிப்படுத்துவார். ஒருவருக்கு ஆர்வமிருக்கும் ஒன்றை நாம் அவருக்குக் கொடுக்கும்போதுதான் அவருக்கு அதன் மதிப்பு அதிகமாகத் தெரியும். "ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்." என்றார் இயேசு கிறிஸ்து. 

இப்படி பிதாவாகிய தேவன் நம்மை "ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்குத் தகுதியுள்ளவர்களாக்கி, இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்துகின்றார். 

அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை. ஆலய வழிபாடுகளிலும் ஜெபக்கூட்டங்களிலும் கலந்து கொள்வது மட்டும் போதாது. தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவை நாம் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். இப்படி நாம் பிதாவையும் குமாரனாகிய கிறிஸ்துவையும் அறிந்தவர்களாக வாழ்வதே மெய்யான கிறிஸ்தவ வாழ்வு. அப்படி அறிவதே நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு. 

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? ஆம் அன்பானவர்களே, நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாக வேண்டுமானால் பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் வெறுமனே ஆராதிப்பவர்களாக அல்ல.  தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாக  இருக்கவேண்டும். அத்தகைய தேவனை அறியும் அறிவை வேண்டுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்