Monday, June 10, 2024

உலகம் உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்தது

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,229      💚 ஜூன் 20, 2024 💚 வியாழக்கிழமை 💚 


"நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது." ( யோவான் 17 : 14 )

இந்த உலகம் ஜாதிவெறி, மதவெறி, இனவெறி நிறைந்தது. எல்லோருக்குமே பொதுவாக தங்கள் ஜாதி, மத இனத்தவரிடம் தனி அன்பு உள்ளது. பொதுவாக புதிய நபர் ஒருவரை சந்திக்கும்போது பலருக்கும் அவர் எந்த ஜாதி என்பதை அறிவதில் ஒரு ஆர்வம் இருக்கின்றது. அப்படி அவர்கள் தங்கள் ஜாதியினர் என்றால் அவர்களிடம் அதிகமாக நெருக்கம் வைத்துக்கொள்வார்கள். இது பொதுவான மனித குணம். 

இந்த மனித குணமே பொதுவாக எல்லா இடங்களிலும் மேலோங்கி இருகின்றது. சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஜாதியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கின்றன. இதுபோன்ற மனநிலையே ஆவிக்குரிய மக்களைப் பிறர் புறக்கணிக்கவும் மற்றவர்கள் அவர்களிடம்  வித்தியாசமாகச் செயல்படுவதற்கும் காரணம். ஆவிக்குரிய மக்கள் இந்த உலகத்தோடு பல விஷயங்களில் ஒத்துப் போகமுடியாதவர்கள். எனவே உலக மனிதர்கள் இவர்களைப்  பகைக்கின்றனர். எனவேதான் இயேசு கிறிஸ்து, "நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது." என்று கூறுகின்றார். 

சொந்த வீட்டில்கூட ஆவிக்குரிய வாழ்வு வாழப் பலவேளைகளில் நெருக்கடியும் துன்பங்களும் ஏற்படுவதுண்டு. ஏனெனில் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப்  பெற்று வாழ்பவர்கள் அந்த அனுபவத்தைப் பெறாத தங்கள் சொந்தங்களுடன்கூடச் சில வேளைகளில் ஒத்துப்போகமுடிவதில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்துக்  கூறினார், "எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே." ( மத்தேயு 10 : 35, 36 )

தன்னைப் பின்பற்றிவர விரும்புபவர்கள் அனுதினமும் தங்கள் சிலுவையைச் சுமந்துகொண்டு தன்னைப் பின்தொடரவேண்டும் என்று இயேசு கிறிஸ்துக் கூறினார். இதுவே இயேசு கிறிஸ்து கூறிய அனுதினமும் சிலுவை சுமக்கும் அனுபவம். கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாகவும் அவரது சீடர்களாகவும் நாம் வாழவேண்டுமென்றால் இந்தப் புறக்கணித்தல் எனும் சிலுவையை ஒருவர் சுமந்துதான் ஆகவேண்டும்; குடும்பத்தால், உலகத்தால் பகைக்கப்படும் சூழ்நிலையைத் தாங்கித்தான் ஆகவேண்டும். இதனையே,  "தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல." ( மத்தேயு 10 : 38 ) என்றும்,  "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." ( லுூக்கா 14 : 27 ) என்றும் கூறுகின்றார் இயேசு கிறிஸ்து.

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து ஏன் இப்படி உலகம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்பவர்களைப்  பகைக்கின்றது என்றும் பின்வருமாறு கூறுகின்றார். "நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்.....ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது." அதாவது இயேசு கிறிஸ்து கொடுத்த பிதாவின் வார்த்தைகள் ஆவிக்குரிய மனிதர்களுக்குள் இருப்பதால் பிதாவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் ஆவிக்குரியவர்களைப் பகைக்கின்றனர். 

எனவே, ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு வரும் புறக்கணித்தலையும் உலகத்தால் பகைக்கப்படுதலையும் நாம் பொறுமையுடன் சகிக்கப் பழகவேண்டும். காரணம், உலகம் நம்மைப் பகைப்பதற்கு முன்னமே இயேசு கிறிஸ்துவையும் பகைத்தது. "உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்." ( யோவான் 15:18 ) என்று அவர் கூறவில்லையா? புறக்கணித்தலையும், பகைமையையும் தாங்கி ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறிச்செல்ல பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிட ஜெபிப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments: