Wednesday, June 05, 2024

மனதிருந்தால் என்னிடத்தில் திரும்பு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,220      💚 ஜூன் 11, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை." ( எரேமியா 4 : 1 )

நமது தேவன் யாரையும் வலுக்கட்டாயம் பண்ணுபவரல்ல. எந்தநிலையிலும் முடிவெடுக்கும் உரிமையினை மனிதர்களிடமே  கொடுத்துவிடுகின்றார்.   ஆதியில் ஏதேனிலும் தேவன், "நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் கனிகளையும் உண்ணலாம் ஆனால், நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை மட்டும் உண்ணவேண்டாம் என்று கூறினார்". உண்ணவேண்டாம் என்று தேவன் கூறியது ஒரு கட்டளையே தவிர அவர் மனிதனைக் கட்டாயம்பண்ணவில்லை. அந்த மரத்தின் கனியை உண்பதா வேண்டாமா  என்று முடிவெடுக்கும் உரிமையினை மனிதனிடமே விட்டுவிட்டார்.

அதுபோலவே, தேவன் பல்வேறு நியாயாதிபதிகள், தீர்க்கத்தரிசிகள் மூலம் மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகளை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த மக்கள் தேவனது வார்த்தைகளுக்கு முற்றிலும் செவிகொடுக்கவில்லை. அவர்களைப் பார்த்துதான் தேவன் கூறுகின்றார், "இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று. மட்டுமல்ல, அப்படித் தேவனிடம் திரும்பினால் நீ இனி அலைந்து திரியமாட்டாய்.

மனம் திரும்பு என்று கட்டளையாகக் கூறாமல், "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு" என்று கூறுகின்றார்.  சில வேளைகளில் நாம் நமது நண்பர்களை குறிப்பிட்ட நாளில் நமது வீட்டிற்கு அழைக்கும்போது அவர்கள், "முடிந்தால் வருகின்றேன்" என்பார்கள். நாம் அவர்களுக்கு, "முடிந்தால் அல்ல, உனக்கு மனமிருந்தால் வா....மனமிருந்தால் முடியும்" என்று கூறுவோம். 

அதுபோலவே தேவன் மனம் திரும்புவது குறித்துக் கூறுகின்றார்.  அவர் பல்வேறு விதங்களில் மனம்திரும்புதலுக்கேற்ற செய்திகளை பலர் மூலம்  கொடுத்தும் மனம் திரும்பாத மக்களைப்பார்த்துக் கூறுகின்றார், "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று" அப்படி நீ மனம்திரும்பி உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை என்கின்றார்.

பலருடைய வாழ்க்கை அலைந்து திரிகின்ற வாழ்கையாக இருக்கின்றது. பிழைப்புக்காக, வருமானத்துக்காக, ஆசீர்வாதங்களைப்  பெறுவதற்காக என அலைந்து திரிகின்றார்கள். பலர் பல்வேறு திருத்தலங்களை நாடி அலைகின்றனர். ஆம் அன்பானவர்களே, இந்த அலைச்சல் நமக்குத் தேவை இல்லாத ஒன்று. நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பினால்  போதும், அப்போது நாம் அலைந்து திரியமாட்டோம். இதனையே, "நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

நமது பிரச்னைகளுக்குத் தீர்வு நம்மிடம்தான் உள்ளது. நமது மனதை தேவனுக்கு நேராகத் திருப்பும்போது நாம் பல்வேறு ஆலயங்களைத் தேடியும் ஊழியர்களைத் தேடியும் அலைந்து திரியாமல் தேவன் நமக்குள்ளே இருப்பதால் மனச் சமாதானத்தோடு வாழ்வோம். "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு" என்று மனதுருக்கத்தோடு தேவன் நம்மிடம் கூறுகின்றார்.  அவரது சத்தத்துக்குச் செவிகொடுத்து அலைச்சலில்லாமல் வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

No comments: