இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,218       💚 ஜூன் 09, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 )

பிதாவாகிய தேவனின் வல்லமையையும் மகிமையையும் நம்மில் பலரும் உணர்ந்திடாமலேயே இருக்கின்றோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உயிர்தெழச் செய்தவர் பிதாவாகிய தேவனே என்று இன்றைய தியான வசனம்  தெளிவாகக் கூறுகின்றது.  

மட்டுமல்ல, அந்த பிதாவாகிய தேவனுடைய ஆவி நம்மில் இருக்கும்படியான வாழ்வு வாழ்வோமானால் கிறிஸ்துவை உயிர்தெழச் செய்ததுபோல நம்மையும் உயிர்ப்பிப்பார்.  இதனையே நாம் "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்று வாசிக்கின்றோம். 

மேலும், கிறிஸ்துவுக்கு மேலான நாமத்தையும் அதிகாரத்தையும் கொடுத்தவர் பிதாவாகிய தேவனே. ஆம், தன்னையே தாழ்த்தி பிதாவுக்கு எல்லாவிதத்திலும் கீழ்ப்படிந்ததால் பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்கு இந்த மேலான நாமத்தையும் அதிகாரத்தையும் கொடுத்துள்ளார். "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 9-11 )

எனவேதான் நாம் பிதாவையும் குமாரனையும் அறியவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இப்படி அறியும்போது நம்மையும் தேவன் உயர்வான இடத்தில கொண்டு சேர்ப்பார். இதனை நாம் அடைந்திட நமக்காக ஏற்கெனவே இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடம் ஜெபித்துள்ளார். யோவான் 17 ஆம் அதிகாரத்திலுள்ள இயேசு கிறிஸ்துவின் ஜெபம் பிதாவுக்கும் அவருக்குமான  நெருக்கத்தை விளக்குவதாக மட்டுமல்ல, நாமும் அப்படி அவர்களோடு நெருக்கமாக வாழவேண்டுமென்று கூறுவதாக உள்ளது. 

"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 23, 24 ) என்று இயேசு கிறிஸ்து நமக்காக ஜெபித்துள்ளார். 

ஆம் அன்பானவர்களே, பிதாவும் கிறிஸ்துவும் இணைந்திருப்பதுபோல அவர்களோடு நாமும் ஒன்றாக இணைந்திருக்க இயேசு விரும்புகின்றார். எனவேதான் கிறிஸ்து பிதாவை அறிந்து அவரோடு உறவுடன் வாழ்ந்ததுபோல நாமும் வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்