Saturday, June 08, 2024

நமது சாயலை மறந்தவர்களாக வாழக்கூடாது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,226    💚 ஜூன் 17, 2024 💚 திங்கள்கிழமை 💚

"அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதன்படி செய்கிறவர்களாயும் இருங்கள்." ( யாக்கோபு 1 : 22 )

வஞ்சித்தல் எனும் வார்த்தை ஏமாற்றுதல் எனும் பொருளில் இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் வேத வசனங்களை கேட்பவர்களாக இருந்தும் அவற்றை நாம் கைக்கொள்ளாவிட்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது. 

பொதுவாக வேத வசனங்களைக் கேட்பதில் பலருக்கும் ஆர்வம் இருக்கின்றது. எனவேதான் பல்வேறு நற்செய்திக் கூட்டங்களில் கலந்துகொள்கிறவர்களாக இருக்கின்றோம். ஆனால் நாம் கேட்கும் வசனத்தை நாம் கைக்கொள்கின்றோமா? என்று நாம் நம்மைத்தானே ஆராய்ந்துபார்க்க அழைக்கப்படுகின்றோம். 

இதற்கு ஒரு உதாரணமாக ஆவியின் கனிகள் என்பதனை விளக்கலாம் என்று எண்ணுகின்றேன். ஆவியின் கனிகள் என்று கூறும்போது பல கிறிஸ்தவர்களுக்கும் போதகர்களுக்கும் கலாத்தியர் 5: 22, 23 வசனங்கள் நினைவுக்கு வரும். அதனை அழகாக மனப்பாடமாகச் சொல்லவும் செய்வார்கள். 

ஆனால் அதில் கூறப்பட்டுள்ள அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்றவை நமக்கு இருக்கின்றதா என்று பலரும் எண்ணிப்பார்ப்பதில்லை. கணிதம் அல்லது வேதியல் பார்மலாவைச் சொல்வதுபோல இந்த வசனத்தைச்  சொல்லிக் கொண்டிருக்கின்றோம். பலரும் ஜெபிக்கும்போது, "எனக்கு ஆவியின் கனிகளைத் தாரும் ஆண்டவரே" என்று ஆவியின் கனிகளை ஏதோ வரம் என்று எண்ணிக்கொண்டு ஜெபிக்கின்றனர்.  

அன்பானவர்களே, ஆவியின் கனிகள் கேட்டுப் பெறவேண்டிய  வரமல்ல, அவை  நாம் கிறிஸ்துவுக்குள் வாழும்போது உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றத்தால் நம்மிடம் வெளிப்படவேண்டிய குணங்கள். பல கிறிஸ்தவர்களிடையே ஆவியின் கனிகள் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் உள்ளான மனதில் இந்த குணங்கள் தங்களுக்கு வேண்டும் என்று விரும்பி ஜெபிப்பதில்லை. வரங்களைக் கேட்பதுபோல ஆவியின் கனிகள் வேண்டுமென்று ஜெபிக்கின்றனர். ஆனால் அந்தக் கனியுள்ள வாழ்க்கை வாழ முயலுவதில்லை. 

இது ஒரு உதாரணமே. கிறிஸ்தவர்கள் பலரும் பல வேத வசனங்களை இப்படியே கூறிக்கொண்டிருக்கின்றோமேத் தவிர அவற்றை அனுபவமாக்க முயலுவதில்லை. 

எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார், "என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.( யாக்கோபு 1 : 23, 24 )

ஆம் அன்பானவர்களே, நமது சாயலை மறந்தவர்களாக நாம் வாழக்கூடாது; நாம் தேவச் சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்பதனை மறந்துவிடக்கூடாது.  அந்தச் சாயல் நம்மில் வெளிப்படவேண்டும். எனவே, வேத வசனங்களைக் கேட்பவர்களாகவும் வாசிப்பவர்களாகவும் மட்டுமல்ல, அவற்றைச் செயல்படுத்துகின்றவர்களாகவும்  வாழவேண்டியது அவசியம். நாம் வேதாகமத்தில் வாசிக்கும் பரிசுத்தவான்களின் குணங்கள் நம்மிடம் இருக்கின்றதா  என்று சீர்தூக்கிப் பார்பவர்களாகவும் அத்தகைய குணங்கள் நமக்கு வேண்டும் எனும் ஆர்வம் உள்ளவர்களாகவும் வாழவேண்டும். 

நாம் பலவீனமானவர்கள் என்பதைத் தேவன் அறிவார். ஆனால், நாம் இத்தகைய நல்ல குணங்களோடு வாழ மெய்யாகவே உள்ளத்தில் விரும்புவோமானால் தேவன் அதற்கான பலத்தை நமக்குத் தந்து உதவுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

No comments: