'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,219 💚 ஜூன் 10, 2024 💚 திங்கள்கிழமை 💚
"அப்பொழுது யாக்கோபு: "உன் சேஷ்டபுத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு" என்றான். அதற்கு ஏசா: "இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்." ( ஆதியாகமம் 25 : 31, 32 )
இஸ்ரவேலரின் வழக்கத்தின்படி சேஷ்டபுத்திரபாகம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் முதல் மகனும் தங்கள் தந்தையிடமிருந்து ஒரு சிறப்பு வாரிசு உரிமையைப் பெறுவதைக் குறிக்கும். முதற்பேறான மகன் குடும்பத்தின் ஆசாரியனாக இருப்பான் (கடவுளால் அந்தப் பணி லேவியர்களுக்கு மாற்றப்படும் வரை), அந்த மகன் தந்தையின் சுதந்தரத்திலும் தந்தையின் அதிகாரத்திலும் இருமடங்கைப் பங்காகப் பெறுவான்.
இன்றைய தியான வசனம் இரண்டு சகோதரர்களின் உரையாடல். மட்டுமல்ல, இந்த உரையாடல் மூலம் இருவரின் குணங்களை நாம் காண முடிகின்றது. யாக்கோபு எப்படியாவது தனது அண்ணனை ஏமாற்றி சேஷ்ட புத்திரபாகத்தை அடைந்துவிட எண்ணுகின்றான். அவன் அண்ணன் ஏசாவோ வயிற்றுக்கே முன்னுரிமை கொடுத்து சேஷ்டபுத்திரபாகத்தை விட்டுக்கொடுக்கின்றான். ஒருவேளை உணவை உண்ணாதிருப்பதால் யாரும் உடனே செத்துவிட மாட்டார்கள். ஆனால் ஏசா கூறுகின்றான், "இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்."
ஏசாவின் பலவீனத்தை யாக்கோபு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். "அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்." ( ஆதியாகமம் 25 : 34 ) என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் அன்பானவர்களே, "வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்." ( நீதிமொழிகள் 20 : 17 )
நமது ஊர்களில் சில குடிகாரர்கள் இருப்பார்கள். அவர்களுக்குக் குடிப்பதற்கு சிறு தொகையினைக் கொடுத்தால்கூட விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்துவிடுவார்கள். சில கிராமங்களிலுள்ள பண்ணையார்கள் இப்படி ஊரிலுள்ள குடிகாரர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்வதுண்டு.
இன்றைய தியான வசனமும் செய்தியும் நமக்கு கூறுவது இதுவே; அதாவது நாம் இந்த இரண்டு சகோதரர்களைப்போலவும் இருக்கக் கூடாது. அடுத்தவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி அதன்மூலம் லாபம் சம்பாதிப்பவர்களாகவும், அற்ப உடல் தேவைக்காக மேலான ஆசீர்வாதங்களை உதறித் தள்ளுபவர்களாகவும் நாம் இருக்கக்கூடாது.
இன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலானவர்கள் யாக்கோபைப் போலவும் ஏசாவைப்போலவே இருக்கின்றனர். யாரையாவது ஏமாற்றி பொருள் சேர்த்து விடவேண்டுமென்று ஒரு கூட்டமும், தேவ ஆசீர்வாதத்தை இழந்தாலும் உலக ஆசீர்வாதத்தால் தாங்கள் நிரம்பிடவேண்டுமென்று எண்ணும் ஒருகூட்டமும் கிறிஸ்தவர்களிடையே உண்டு.
அன்பானவர்களே, நாம் நம்மைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஏற்றவேளையில் அவர் நம்மை உயர்த்திட அவருக்கு அடங்கி வாழ்வோம். அப்போதுதான் மெய்யான ஆசீர்வாதம் நமக்கு உண்டு. "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 )
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment