Wednesday, June 19, 2024

கர்த்தரின் நியாயத்தீர்ப்பு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,233      💚 ஜூன் 24, 2024 💚 திங்கள்கிழமை 💚


"உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." ( சங்கீதம் 119 : 120 )

இந்த உலகவாழ்க்கைக்குப்பின் தேவனால் அளிக்கப்படும் நியாயத்தீர்ப்பு ஒன்று உள்ளது. அப்போது நாம் செய்யும் நன்மை தீமைக்கேற்ப நாம் பலனடைவோம். இதுவே வேதம் கூறும் உண்மை. ஆனால் இன்று கிறிஸ்தவர்களிலேயேகூடப்  பலர் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. சொர்க்கமும் நரகமும் இந்த உலகிலேயேதான் இருக்கின்றன. இங்கு துன்பம் அனுபவிப்பவர்கள் நரகத்தையும் செலவச் செழிப்பில் வாழ்பவர்கள் சொர்க்கத்தையும் அனுபவிக்கின்றனர் என்கின்றனர் அவர்கள். 

கிறிஸ்தவர்களில் பலர் கூறும் விடுதலை இறையியல் இந்த நம்பிக்கையில் உருவானதுதான். எனவேதான் பல குருக்கள் சமூக பொருளாதார விடுதலை பற்றி அதிகம் பேசுகின்றனர். பல கிறிஸ்தவர்களை இவர்கள் இப்படி வஞ்சித்து வைத்துள்ளனர். அன்பானவர்களே, செல்வச் செழிப்பு ஆத்தும சாமாதானத்தை ஒருபோதும் தராது எனும் உண்மையினை இவர்கள் அறியாதவர்கள். 

இன்றைய தியான வசனம், "உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." என்று கூறுகின்றது. அதாவது கடவுளுக்குப் பாயப்படும் பயம் இருப்பதால் அவரது நியாயத்தீர்ப்புக்கும் பயப்படுகின்றோம் என்று பொருள். எனவே, இந்த பயமில்லாதவன் உண்மையில் கடவுள் நம்பிக்கையற்றவன். இப்படி நியாயத்தீர்ப்புக்குப் பயப்படும் பயம் இருந்தால் மட்டுமே நாம் இந்த உலகினில் தேவனுக்கேற்ற ஒரு வாழ்வு வாழ முடியும். ஆம், "கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்." ( சங்கீதம் 119 : 137 )

வெளிப்படுத்தின விசேஷத்தில் நாம் வாசிக்கின்றோம்,  "இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 1 ) என்று. ஆம், தேவன் சாத்தியத்தின்படியும் நீதியின்படியும் இந்த உலகத்தை நியாயம் தீர்ப்பார். 

"கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். ( ஏசாயா 11 : 3, 4 )

நியாயத்தீர்ப்பைக்குறித்து நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தெளிவாகப் பல முறைக்  கூறியுள்ளார். மட்டுமல்ல இந்த உலகை நியாயம்தீர்க்கும் அதிகாரமும் இயேசு கிறிஸ்துவிடம்தான் உள்ளது. இதனையே அவர், "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 ) என்று கூறினார். 

அன்பானவர்களே, எனவே விடுதலை இறையியல் போதனைகளோ இதர போதனைகளோ, இதர தெய்வ வழிபாட்டு முறைமைகளோ நம்மை நியாயத்தீர்ப்புக்குத் தப்புவிக்கமாட்டாது. "உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அஞ்சி அவருக்கேற்ற ஒரு வாழ்வு வாழும்போது  மட்டுமே நாம் நியாயத்தீர்ப்பில் நிலைநிற்கமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

No comments: