வல்லமையும் பயங்கரமுமான கர்த்தர் நமக்குள்ளே இருக்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,225    💚 ஜூன் 16, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்." ( உபாகமம் 7 : 21 )

தேவனாகிய கர்த்தரைக் குறித்து இன்றைய தியான வசனம் "அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்" என்று கூறுகின்றது. நமது தேவன் ஒரு தாய்க்குரிய பரிவு கொண்டவராக இருந்தாலும் ஒரு தந்தைக்குரிய வல்லமையுள்ளவர். தேவன் அன்பாகவே இருந்தாலும் தனது மக்களை அநியாயமாக பிறர் தொடும்போது அவர் அதனைச் சிலவேளைகளில்  பொறுத்துக் கொள்வதில்லை.  இதனையே, "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்." ( சகரியா 2 : 8 ) என்று நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். 

வேதாகமம் முழுவதும் நாம் வாசிக்கும்போது, தேவனுடைய வல்லமையும் பராக்கிரமமும் விளக்கப்பட்டுள்ளதை கண்டுகொள்ளலாம்.  இந்த வல்லமையுள்ள தேவன் குமாரனாக பூமியில் வாழ்ந்தபோதும் வல்லமையானச் செயல்களைச் செய்தார். அவர் புயற்காற்றையும் கொந்தளித்தக் கடலையும் அடக்கியபோது சீடர்கள் பயந்தனர். "அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்." ( மாற்கு 4 : 41 ) என்று   வாசிக்கின்றோம்.

எதிரிகளுக்கு மட்டுமல்ல, அவரிடம் அன்புகூர்ந்து அவருக்கு அஞ்சி வாழ்வோருக்கு கிருபை செய்கின்ற பயங்கரமான தேவன் அவர். நெகேமியா தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தபோது கூறுகின்றார். "பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே," ( நெகேமியா 1 : 5 ) என்று. அதாவது அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது தனது வல்லமையான பயங்கரச் செயல்கள்மூலம் அவர்களுக்குப் பதில்தருவார். 

இந்த வல்லமையின்படியே அவர் பிள்ளைகளாகிய நமக்குச் செவிகொடுக்கின்றார். இந்த வல்லமையுள்ள தேவன் நமக்குள்ளே இருப்பதால் "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராக" இருக்கின்றார். ( எபேசியர் 3 : 20 )

ஆம் அன்பானவர்களே, இந்த மகத்துவமான தேவன் நமக்குள்ளே இருக்கின்றார் எனும் உறுதி நமக்கு இருக்குமானால் நாம் எதற்கும் அஞ்சிடாமல் துணித்து நிற்போம். தேவனுடைய இந்த வல்லமை நம்மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படும். 

சில அரசியல் தலைவர்களுக்கு கறுப்புப் பூனைப்படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். அவர்கள் பயணம் செய்ய குண்டு துளைக்காத வாகனங்கள் உண்டு. அணிந்துகொள்ள குண்டு  துளைக்காத ஆடைகள், அவர்கள் நின்று உரையாற்ற குண்டு துளைக்காத மேடை என அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் உண்டு. அந்தத் தைரியத்தில் அவர்கள் வலம்வருவார்கள்.  ஆனால், இவை அனைத்தையும்விட தேவனுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் உள்ளேயே இருந்து செயல்படும் வல்லமையும் பயங்கரமுமான தேவன் உண்டு. 

மனிதர்கள் தரும் பாதுகாப்பு போன்றதல்ல தேவன் அளிக்கும் வல்லமைமிக்க பாதுகாப்பு. உயிருக்கும் உடைமைக்கும்  உத்தரவாதம் மட்டும் தருவதல்ல அது; மாறாக நாம் மறுவுலக வாழ்வைத் சுதந்தரித்துக்கொள்ள ஏற்றவர்களாக வாழ தேவனது இந்த வல்லமையுள்ள பாதுகாப்பு நம்மைப் பாவத்துக்கு விலக்கிக் காக்கின்றது. ஆம், நமது தேவனாகிய கர்த்தர் வெளியே எங்கோ இருபவரல்ல; குறிப்பிட்டப்  புனித ஸ்தலங்களுக்குள் இருபவரல்ல; மாறாக,  நமக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்