Sunday, June 09, 2024

கிறிஸ்தவர்களுக்கு அடையாளம் அந்நியபாஷையல்ல

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,227       💚 ஜூன் 18, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚 


"நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்." ( 1 கொரிந்தியர் 13 : 1 )

அந்நியபாஷை என்பதுதான் பரிசுத்த ஆவியானவரை ஒருவர் பெற்றுக்கொண்டதற்கு அடையாளம் எனவும், அந்நியபாஷைதான் ஆவிக்குரிய வாழ்வின் உச்சம் எனவும் தவறான ஒரு கருத்தும் போதனையும் தங்களை ஆவிக்குரிய சபை எனக் கூவிக்கொள்ளும் பல சபைகளில் நிலவுகின்றது. இன்றைய தியான வசனம் அது தவறு என்பதனை விளக்குகின்றது. 

அதாவது ஆவிக்குரிய உயர்ந்த பண்பான அன்பு இல்லாத ஒருவரும் அந்நியபாஷை பேசலாம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்." என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, தங்களை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்கள் பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவுமே  இருக்கின்றனர். 

ஒருவரில் ஆவியானவர் இருந்து செயற்படுகின்றார் என்பதற்கு அந்நியபாஷை அடையாளம் அல்ல; மாறாக அவரது அன்புச் செயல்பாடுகளே அடையாளம். இதனைத் தெளிவுபடுத்த பவுல் அப்போஸ்தலர் தொடர்ந்து நீண்ட விளக்கமாகக் கூறுவனவற்றை நாம் கவனமுடன் வாசிக்கவேண்டும். 

தொடர்ந்து இது குறித்து எழுதும்போது  அவர், "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்" ( 1 கொரிந்தியர் 13 : 10 ) என்கின்றார் அவர். அதாவது, நிறைவான கிறிஸ்து நம்மில் வரும்போது நம்மிலிருக்கும் குறைகள் ஒழிந்துபோகும். ஆவிக்குரிய வாழ்வில் நாம் நிறைவடையும்போது நாம் அதுவரைப் பேசிய அந்நியபாஷை குழந்தைத்தனமானதாக நமக்குத் தெரியும். மேலும், நாம் குழந்தைகளாக இல்லாமல் அதனைத் தாண்டி வளரவேண்டும். விசுவாசம், நம்பிக்கை, அன்பு இவைகளில் நாம் வளர்ச்சியடையவேண்டும் என்கின்றார். இதனையே அவர் தெளிவாகப்  பின்வருமாறு கூறுகின்றார்:- 

"நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது." ( 1 கொரிந்தியர் 13 : 11 - 13 )

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வின் குழந்தைப்பருவ அனுபவம் அந்நியபாஷை. மேலும், அன்பற்ற அந்நியபாஷை அர்த்தமில்லாதது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்." ( 1 கொரிந்தியர் 14 : 28 ) என ஒரு முக்கிய நிபந்தனையை  விதிக்கின்றார். மேலும், யாராவது அந்நியபாஷை பேசுவதைத் (தனியாகப் பேசுவதை) தடைபண்ணவேண்டாம் ( 1 கொரிந்தியர் 14 : 39 ) என்றும் கூறுகின்றார்.  காரணம், அது ஆவிக்குரிய ஒரு வரம்.

சுருக்கமாகக் கூறுவதானால், கிறிஸ்தவர்களுக்கு அடையாளம் அன்புதானேத் தவிர சிலர் கூறுவதுபோல அந்நியபாஷையல்ல.  அந்நியபாஷை பேசுவதை ஆவிக்குரிய குழந்தைகளாக இருக்கும்போது ஒருவர் மேன்மையாகக் கருதலாமேத் தவிர அத்துடன் நின்றுவிடாமல் ஆவிக்குரிய வாழ்வில் மேலான வளர்ச்சியடைய வேண்டும். அந்த வளர்ச்சியை அந்நியபாஷையல்ல, நமது அன்புச் செயல்களே அடையாளம் காட்டும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

No comments: