நாள்முழுவதும் தேவனைத் துதி செய்வோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,234    💚 ஜூன் 25, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்." ( சங்கீதம் 35 : 28 )

இன்றைய தியான சங்கீத வசனத்தில் தாவீது மேலான ஒரு ஆவிக்குரிய அனுபவத்தைக் கூறுகின்றார். அதாவது, ஆவிக்குரிய வாழ்வு வாழ்பவர்கள் தங்களை அறியாமல் தங்களது வாழ்வின் அனைத்து நன்மை தீமைகளுக்காகவும் தேவனை ஸ்தோத்தரித்து மகிமைப்படுத்துபவர்களாக இருப்பார்கள். 

"இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்." ( கொலோசெயர் 4 : 2 )

"இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 17 )

என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. இடைவிடாமல் எப்படி ஜெபிக்கமுடியும்? நாக்கு வேறு உலக வேலைகளும் கடமைகளும் இல்லையா என்று நாம் எண்ணலாம். ஆனால் ஜெபம் எப்போதும் நீண்டதாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. தேவனுக்கு நன்றி சொல்வதும் ஸ்தோத்திரம் சொல்வதும் ஜெபம்தான். மேலும் ஜெபம் என்பது வாயினால் நாம் சொல்வது மட்டுமல்ல; மாறாக, அது இருதயம் சம்பந்தப்பட்டது.  

நாம் எந்த உலக வேலை செய்துகொண்டிருந்தாலும்  நமது இருதயம் ஜெபசிந்தனையோடு இருக்க முடியும். நாம் மர வேலைசெய்யும் ஒரு ஆசாரியாக இருக்கலாம், கொத்தனாராக இருக்கலாம், வங்கியில் பணிபுரிபவராக, மருத்துவராக, கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம்.  எந்த வேலையில் நாம் இருந்தாலும் நமது இருதயம் தேவனுக்கு நேராக இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ளமுடியும். அப்படி நாம் இருப்போமானால், நாம் செய்யும் பணியையும் சிறப்பானதாகச் செய்யமுடியும். 

மட்டுமல்ல, வாழ்வில் நெருக்கடியான சூழ்நிலை வரும்போதும் நாம் தேவனைத் துதிக்க முடியும். அப்போஸ்தலரான பவுலும் சீலாவும் தங்கள் கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்ட நிலையிலும் நாடு இரவில் தேவனைத் துதித்துப் பாடவில்லையா? ஆம், அப்படி நாம் தேவனைத் துதிப்பது மிகப்பெரிய விடுதலையை நமது வாழ்வில் கொண்டுவரும். 

"என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்." என்று எழுதிய தாவீது சாதாரண மனிதனல்ல; அவர் ஒரு அரசர். அரசாங்கப் பணிகள் அவருக்கு அதிகம் இருந்திருக்கும். அந்தப் பணிகளினூடே தேவனைத் துதித்தார். அரசர் ஆவதற்குமுன் அவர் மிகவும் நெருக்கப்பட்ட ஒருவாழ்வு வாழ்ந்தார்; அப்போதும் தேவனைத் துதித்தார்.  அதனையே இன்றைய தியான வசனத்தில் அவர் கூறுகின்றார். 

துதிப்பதும் ஜெபிப்பதும் மட்டுமல்ல, என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் சொல்லிக்கொண்டிருக்கும் என்கின்றார். அதாவது நாம் தேவனைப்பற்றியும் அவரது வல்லமையைப்பற்றியும் நமது சொல்லாலும் வாழ்வாலும் அறிக்கையிடவேண்டியது அவசியம். 

அன்பானவர்களே, இதுவரை நாம் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தேவனை ஆராதிப்பவர்களாக வாழ்ந்திருந்தாலும் இனி இந்த வழியைக் கைக்கொள்வோம். இஸ்லாமியர்கள் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தேவனைத் தொழுவார்கள். ஆனால் தேவன் நமக்குள்ளே இருந்து கிரியைசெய்யும்போது அவரது அன்பு நம்மை நெருக்குவதால் நாம் இப்படி குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஜெபிப்பவர்களாக இருக்கமாட்டோம். மாறாக, தாவீது கூறுவதுபோல நமது நாவு அவரது நீதியையும், நாள்முழுவதும் அவரது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்