உணவைவிட மேலாக தேவ வார்த்தைகளைக் காத்துக்கொள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,238      💚 ஜூன் 29, 2024 💚 சனிக்கிழமை 💚

 
"அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." ( யோபு 23 : 12 )

நாம் நமது வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய நல்ல ஒரு பாடத்தை யோபு இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். யோபுவைப் போல துன்பத்தை அனுபவித்தவர்கள்  நம்மில் யாரும் இருக்கமுடியாது. ஆனால் அத்தகைய துன்பத்தை வாழ்வில் அனுபவித்த யோபு கூறுகின்றார், "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை" என்று. அதாவது தேவனது கற்பனைகளை நான் கைக்கொள்ளாமல் போனதில்லை, இனியும் போவதில்லை  என்கின்றார். 

நல்ல ஒரு வாழ்க்கைத்  தனக்கு அமைந்ததால் தேவனது கற்பனைகளைவிட்டு நான் பின்வாங்கமாட்டேன் என்று அவர் கூறவில்லை. மாறாக, வாழ்வில் அனைத்தும் எதிர்மறையாக நடைபெற்றபோதுதான் இப்படிக் கூறுகின்றார். மட்டுமல்ல, "அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்" என்கின்றார். நாம் இப்போது ஆகாரத்தைப் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவது போல யோபு தனது இருதயத்தை ஒரு குளிர்சாதன பெட்டிபோல தேவ வார்த்தைகளை பாதுகாக்க பயன்படுத்துவதாகக் கூறுகின்றார். 

இன்று நமக்கு தேவ வார்த்தைகளை நினைக்கும்போதெல்லாம் படித்து அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதுபோல அந்தக்காலத்தில் இல்லை. அந்தக்காலத்தில் வேதாகம தோல் சுருள்கள் எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் அவர் அவற்றை விரும்பி உள்ளத்தில் பாதுகாத்தார்.  அன்பானவர்களே, நாம் நம்மையே சீர்தூக்கிப்பார்ப்போம். தேவ வார்தைகளை விட்டுப் பின்வாங்காமல் அந்த வார்த்தைகளை நமக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொள்கின்றோமா?  

பல கிறிஸ்தவ வீடுகளில் வேதாகமம் மறக்கப்பட்ட ஒரு புத்தகமாக இருக்கின்றது. ஒருமுறை ஒரு வீட்டில் சென்றிருந்தபோது அங்கிருந்த வேதாகமத்தை எடுத்துப்பார்த்தேன். அது சாதாரண வேதாகமத்தைவிடப் பலமடங்கு தடிமனாக இருந்தது. திறந்து பார்த்தபோது, அதில் அவர்களுக்கு வந்திருந்த  பல திருமண அழைப்பிதழ்கள், நீத்தார் நினைவு அட்டைகள்,  வீட்டுவரி, தொலைபேசி ரெசீதுகள்,  மளிகை சாமான்கள்  வாங்கிய துண்டுச் சீட்டுகள் போன்றவைகளால் நிறைந்திருந்தது. ஆம், அவர்கள் தேவ வசனத்தால் இருதயங்களை நிறைப்பதற்குப் பதிலாக வேதாகமத்தை உலக காரியங்களால் நிறைத்துவிட்டனர்.  

இது அவர்கள் வேதாகமத்தை எந்த அளவுக்கு மதிக்கின்றார்கள், அதனை எப்படிப் பயன்படுத்துகின்றார்கள் என்பதனை நமக்கு வெளிக்காட்டுகின்றது. இத்தகைய மனிதர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது தேவ ஆலோசனை பெறவும், தேவனது பதிலை அறியவும் குருட்டுத்தனமாக கண்களை மூடி வேதாகமத்தைத் திறந்து பார்த்து அங்கு எழுதப்பட்டுள்ள வசனங்களை தேவன் தங்களுக்குத் தந்த வார்த்தையாக எண்ணிக்கொள்கின்றனர்.  

அன்பானவர்களே, நாம் அன்பு செய்பவர்கள் நமைக்குறித்துக் கூறுவதனை அறிய நாம் விரும்புவதில்லையா? அதுபோல  நாம் உண்மையாகவே தேவனிடம் அன்புள்ளவர்களாக இருப்போமானால் அவரது வார்த்தைகளைப் பெறுவதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருப்போம்.  இல்லாவிட்டால் ஏனோதானோ மனநிலையில்தான் நாம் வாழ்வோம். 

"அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்"  என்று யோபுவைபோல தேவ வார்த்தைகளைக் காத்துக்கொள்ளும் ஆர்வமும் அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டுப் பின்வாங்காத நிலைமையும் நமக்கு இருக்குமானால் யோபுவைபோல நாமும் துன்பங்களைச் சகித்து வாழ முடியும்.  

மட்டுமல்ல, நியாயத்தீர்ப்பு நாளில் தேவன் தனது வசனத்தின்படியே நம்மை நியாயம்தீர்ப்பேன் என்கின்றார். எனவே அவரது வசனங்களை நாம் படிப்பதும், தியானிப்பதும் அவற்றை இருதயத்திலே உணவைப்போல பாதுகாத்து  வைக்கவேண்டியதும் அவசியம். "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்