Wednesday, June 05, 2024

உபத்திரவப்படுவது நல்லது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,221      💚 ஜூன் 12, 2024 💚 புதன்கிழமை 💚

"நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்." ( சங்கீதம் 119 : 67 )

உபத்திரவங்கள் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் நடப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றன. காரணம் எந்த உபத்திரவமும் நமக்கு ஏற்படவில்லையானால் நாம் தேவனைவிட்டு விலகிச் சென்றுவிடுவோம். உபத்திரவம் என்பது தேவன் அளிக்கும் தண்டனையாகவும் அவரை நோக்கி நம்மை இழுக்கும் கயிறாகவும் இருக்கின்றது என்றும் நாம் கூறலாம். வேதாகமத்தில் "சிட்சை" என்று இது கூறப்பட்டுள்ளது. 

நாம் நமது குழந்தைகள் தவறு செய்யும்போது சிறு தண்டனைகள் கொடுப்பதுபோல தேவன் நமக்குச் சில தண்டனைகளைக் கொடுத்து நல்வழிப் படுத்துகின்றார். இதனையே இன்றைய தியான வசனம்,  "நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்." என்று கூறுகின்றது. அதாவது வாழ்வில் உபத்திரவம் வருவதற்குமுன் வழிதப்பி நடக்கின்றோம். உபத்திரவம் வந்தபின் புத்தி தெளிந்து அவரது வார்த்தைகளைக் காத்து நடக்கின்றோம்.  

எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். 

நாம் வழி தப்பி நடக்கும்போது நம்மை நல்வழிப் படுத்துவதற்காக சிலவேளைகளில் தேவன் பிறர் மூலம் நமக்கு உபத்திரவங்களைக் கொடுக்கின்றார்.  ஆனால் நாம் தேவனுக்கு நேராக நமது வழிகளைத் திருப்பும்போது நம்மை உபத்திரவப்படுத்துகின்றவர்களுக்கு தேவன் உபத்திரவத்தைக் கொடுத்து  நமக்கு இளைப்பாறுதலைத் தருவார். "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 6 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே, இப்படி வேதம் கூறுவதால் நாம் நமக்கு உபத்திரவம் வரும்வரை தேவனைத் தேடாமல் வாழவேண்டுமென்று பொருளல்ல; மாறாக, நமக்கு பிரச்சனைகளும் துன்பங்களும் வாழ்வில் ஏற்படும்போது நாம் நம்மையே நிதானித்து நமது வழிகளைத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று பொருள். 

"உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. ( 1 பேதுரு 1 : 15, 16 ) எனவே, நம்மை பரிசுத்தராக்குவதற்கே துன்பங்கள்நமக்கு வருகின்றன என்பதை உணர்ந்து தேவனது வார்த்தையைக் காத்து நடக்க முயலுவோம். 

மேலும், இந்த உபத்திரவம் நமக்கு தேவன்மேல் நம்பிக்கையையும் வளரச்செய்கின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். ( ரோமர் 5 : 3, 4 ) என்று கூறுகின்றார். 

ஆம், உபத்திரவப்படுவதற்கு முன் நாம் வழிதப்பி நடக்கின்றோம்  அதன் பின்போ அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கின்றோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

No comments: