Monday, June 17, 2024

ஆவியானவர் நமக்குள் இருப்பதை நாமே அறிந்துகொள்வோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,231       💚 ஜூன் 22, 2024 💚 சனிக்கிழமை 💚

"உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14 : 17 )

பரிசுத்த ஆவியானவரை நாம் வாழ்வில் பெறவேண்டுமானால் முதலில் அவரைப்பற்றி அறிந்தும் கேட்டும் இருக்கவேண்டும், அவரை வாழ்வில் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஆர்வமும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம். பொதுவாக கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் பலரும் ஆவியானவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் பலருக்கும் அவரை வாழ்வில் பெற்று அனுபவிக்கவேண்டும் எனும் ஆர்வம் இல்லாமலே இருக்கின்றது. 

இதனையே இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார்.  "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது" என்று.  நாம் கிறிஸ்துவை அறிந்து நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது ஆவியானவர் நமக்குள் வருகின்றார்.  சீடர்கள் அப்படி இருந்ததால் அவர்கள் உள்ளே ஆவியானவர் இருந்தார். எனவேதான், "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." என்று இயேசு கூறுகின்றார். 

கிறிஸ்துவை அறிந்த எபேசு நகர சீடர்கள் பரிசுத்த ஆவியானவரை அறியாமலேயே இருந்தனர். அப்போது அங்கு வந்த பவுல் அவர்களிடம் ஆவியானவரைப்பற்றி கேட்டு அவர்கள் பரித்த  ஆவியைப்  பெறுவதற்கு உதவியதை நாம் பார்க்கின்றோம். "அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 19 : 1, 2 )

உலக மக்கள் ஆவியானவரை அறியாமல் இருந்தாலும் ஆவிக்குரிய அனுபவம் பெற்றவர்கள் அவரை அறிந்துகொள்வார்கள். ஆவியானவர் நமக்குள் இருப்பதை நாமே அறிந்துகொள்வோம் என்பதையே  "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே  இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.

ஒருவர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுள்ளார் என்பதற்கு பெரிதான வெளி அடையாளங்கள் தேவையில்லை. ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர் உள்ளத்தில் அவர் இருப்பதை  பெற்றுக்கொண்டவர்கள் அறிவார்கள். 

ஆனால் இன்று ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளில் தங்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார் என்பதனை வெளிக்காட்டிக்கொள்ள பல்வேறு உபாயங்களைக் கையாளுகின்றனர். ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் இந்தச் சபைகளின் ஊழியர்களும் தங்களிடம் ஆவியானவர் இருக்கின்றார் என்பதனை தங்கள் சபை விசுவாசிகள் அறிந்தால்தான் தங்களை மேன்மையாகக் கருதுவார்கள் என எண்ணி பல்வேறு உபாயங்களைக்  கையாள்வதுடன்  தங்களது பெயருக்குப்பின் பல்வேறு அடைமொழிகளையும் சேர்த்துக்கொள்கின்றனர். 

நாம் பரிசுத்த வாழ்வு வாழத் துணைபுரிபவரே பரிசுத்த ஆவியானவர். சத்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம்பண்ணி நமக்குள்ளேயே இருப்பதால், நாம் அவரை அறிவதுடன் பரிசுத்த வாழ்வும் வாழ முடிகின்றது. காரணம், "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) நமக்குள்ளே பாவத்தைக்குறித்தும் நீதியைக்குறித்தும் உணர்வும், பரிசுத்தமாக வாழவேண்டுமெனும் எண்ணமும் இருக்குமானால் நமக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார் என்பது நிச்சயம். 

இந்தப் பரிசுத்த ஆவியானவர்  நமக்குள் வர வாஞ்சையாய் மன்றாடுவோம்.  நிச்சயம் தேவன் நம்மை ஆவியினால் நிரப்பி பரிசுத்தமாய் வாழ உதவிடுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

No comments: