Sunday, June 23, 2024

கனவுகளை அற்பமாக எண்ணவேண்டாம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,239    💚 ஜூன் 30, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"அவன் (பிலாத்து) நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்." ( மத்தேயு 27 : 19 )  

நல்லவர்கள், தீயோர்,  தேவனை அறிந்தவர்கள், அறியாதவர்கள் அனைவர்க்கும் தேவன் சிலவேளைகளில் கனவுகள் மூலம் வழிகாட்டுகின்றார். அதுதேவனது அளப்பரிய அன்பினால்தான். தவறான முடிவெடுத்து தங்கள் வாழ்க்கையையும் ஆன்மாவையும் மனிதர்கள் அழித்துவிடக்கூடாது என்பதற்காக தேவன் இப்படிச் செய்கின்றார். 

ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்பவர்கள் கனவுகளின் பொருளை அறிந்துகொண்டு தங்களைத் திருத்திக்கொள்கின்றனர். மற்றவர்களோ அவற்றின் மறைபொருளை உணர்ந்துகொள்வதில்லை. இயேசுவின் தந்தை யோசேப்பை தேவன் கனவுமூலம் வழிநடத்தியதை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். அவர் தேவனது கட்டளைகளை அதன்மூலம் அறிந்து அதற்கேற்றபடி நடந்து தேவ சித்தத்தை நிறைவேற்றினார். 

"தேவனை அறியேன்" என்று கூறிய பார்வோனுக்கும்  தேவன் கனவுமூலம் தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவனால் அதன் பொருளை உணர்ந்துகொள்ளமுடியவில்லை. எனவே யோசேப்பு அதற்கான பொருளை உணர்த்திக்கொடுத்து எகிப்தின் அழிவைத் தடுத்து நிறுத்தினார். இதுபோலவே, தானியேல் கனவுக்குப் பொருள்கூறும் வரம் பெற்றவராக இருந்தார். 

இப்படித் தேவன் ஏன் கனவுமூலம் சில காரியங்களை உணர்த்துகின்றார் என்பதற்கு யோபு புத்தகத்தில் பதில் உள்ளது. "அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு, மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்." ( யோபு 33 : 16, 17 ) என்று வாசிக்கின்றோம். இங்கு, மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதுபோலவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நியாயம் விசாரிக்கப்படுவதற்கு முந்தினநாள் பிலாத்துவின் மனைவிக்குத் தேவன் கனவுமூலம்  சில உணர்த்துதலைக் கொடுத்தார். எனவே, அவளால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எனவே அவள்  "அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்."

ஆனால் பிலாத்து தனது மனைவிமூலம் தேவன் கொடுத்த எச்சரிக்கையினைப் புறக்கணித்தான். இதுபோலவே நாமும் பலவேளைகளில் இருக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, தேவன் அளிக்கும் கனவு தெளிவான கனவாக இருக்கும். அதன்மூலம் நாம் ஒரு செய்தியினை உணர்ந்துகொள்ளமுடியும். அப்போது நாம் அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நடப்போமானால் இக்கட்டுகளுக்கு நீங்கலாகிவிடுவோம்.

எல்லா கனவுகளும் அர்த்தமுள்ளவையல்ல. "தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல...." ( பிரசங்கி 5 : 3 ) என்று நாம் வாசிக்கின்றோம். அதாவது நாம் பல்வேறு தொல்லைகளால் நெருக்கப்படும்போது சரியான உறக்கமில்லாமல் கனவுகள் தோன்றும். ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது கனவுமூலம் தேவன் நம்மோடு பேசுவதை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். தேவன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களோடு பேசுகின்றார். கனவு அவற்றில் ஒன்றாகும். 

எனவே, கனவுகளை நாம் அற்பமாக எண்ணாமல் அவைகூறும் கருத்துக்களை நிதானித்துப் பார்த்து நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும். நமது குடும்பத்து உறுப்பினர்களது செயல்பாடுகளையும் அவற்றைத் திருத்திக்கொள்ளவும் தேவன் இப்படி வழிகாட்டலாம். பிலாத்துவின் மனைவிக்குத்  தேவன் இப்படித்தான் தவறுக்கு நீங்கலாக்க வழி காட்டினார். எனவே கனவுகள் நமக்குத் தோன்றும்போது தேவனிடம் அதன் விளக்கத்தைக் கேட்டு அறிவோம்; நம்மைத் திருத்திக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

No comments: