Tuesday, June 18, 2024

நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,232    💚 ஜூன் 23, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்." ( 1 யோவான்  5 : 11 )

நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வைச் சுதந்தரித்துக்கொள்வதே கிறிஸ்தவ வாழ்வின் இலக்காகும். நாம் இந்த உலகத்தில் அனைத்துச் செல்வங்களையும் உடையவர்களாக வாழ்ந்தாலும் நித்திய ஜீவனை இழந்துவிட்டோமானால் அதனால் எந்த பயனும் இல்லை. 

இந்த நித்திய ஜீவன் தேவனுடைய ஒரே குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றது. எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்று. ஆம் அன்பானவர்களே, பிதாவோடு இணைந்துகொள்வதே நித்தியஜீவன். அதற்கு ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

எனவேதான் இன்றைய தியான வசனத்தை எழுதிய அப்போஸ்தலரான யோவான் தொடர்ந்து அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 ) எனவேதான் நாம் இயேசு கிறிஸ்துவை அறியவேண்டியது அவசியமாய் இருக்கின்றது; கிறிஸ்து நமது உள்ளத்தில் வரவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

நாம் பாலை காய்ச்சும்போது சரியாக கழுவாத அழுக்கான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சுவோமானால் அது உடனேயே திரிந்துபோய்விடும்.  அதனால் எந்த பயனுமின்றி வெளியே கொட்டப்படவேண்டும். அதுபோலவே பரிசுத்தரான இயேசு கிறிஸ்து நமது உள்ளத்தில் வரவேண்டுமானால் நமது உள்ளம் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். 

ஆனால் மனிதர்கள் இயல்பிலே பரிசுத்தர்கள் அல்ல என்பதாலும் மனிதர்களால் தானாக பரிசுத்தமாக முடியாது என்பதாலும்  இயேசு கிறிஸ்து தன்னாலேதானே சுத்திகரிப்பை உண்டாக்கினார்; இரட்சிப்பு அல்லது மீட்பு அனுபவத்தை ஏற்படுத்தினார். அதற்காகவே அவர் தனது இரத்தத்தைச் சிந்தினார். இதனை நாம், "எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13 : 11, 12 ) என்று வாசிக்கின்றோம். 

எனவே, ஆத்தும மீட்பு என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே சாத்தியமாகின்றது. அவரே தனது சுய இரத்தத்தைச் சிந்தி நமக்காக மரித்து பரிசுத்த பலிபொருளானார். எனவேதான், "தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்"  என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

எனவே அன்பானவர்களே, நமது பாவங்கள் அனைத்தையும் கிறிஸ்து இயேசுவிடம் அறிக்கையிடுவோம். அவரே நமது பாவங்களைக் கழுவி பரிசுத்தமாக்கி நமக்கு முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவனைத்  தந்து பிதாவோடு இணைந்திருக்கச் செய்வார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

No comments: