ஆவியானவர் நமக்குத் துணையாக இருப்பார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,222      💚 ஜூன் 13, 2024 💚 வியாழக்கிழமை 💚

"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

நமது தேவன் தனது மக்களோடு பல்வேறு சமயங்களில் உடன்படிக்கை செய்துகொள்பவராக இருக்கின்றார். இது ஏனென்றால் தனது மக்கள் நம்பிக்கையோடு தங்களது வாழ்வைத்  தொடரவேண்டும் என்பதற்காகவே. இன்றைய வசனம் எகிப்திலிருந்து புறப்பட்டபோது இஸ்ரவேல் மக்களோடு தேவன் செய்த உடன்படிக்கையினைக் குறித்துக் கூறுகின்றது. ஆனால் இஸ்ரவேல் மக்கள் அந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. 

அதாவது எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களோடு தேவன் உடன்படிக்கைச் செய்திருந்தும் அவர்கள் அந்த உடன்படிக்கைக்கு கீழ்ப்படிந்து நடக்கவில்லை.   வேற்று தெய்வங்களை வழிபடவும் தேவனது கட்டளைகளை புறக்கணிக்கவும் செய்தனர். எனவே தேவன் அவர்களைப் புறக்கணித்து பல்வேறு சமயங்களில் வேற்று அரசர்களுக்கு அடிமைகள் ஆக்கினார். 

இதுபோலவே, நாம் எகிப்தாகிய நமது பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலையாகும்போது தேவன் நம்மோடு உடன்படிக்கை பண்ணுகின்றார்.  இந்த உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களோடு பண்ணிய உடன்படிக்கை போன்றதல்ல என்று நாம் எபிரெய நிருபத்தில் வாசிக்கின்றோம். 

"அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எபிரெயர் 8 : 9 )

அன்பானவர்களே, இன்று பாவ வாழ்க்கையான எகித்தைவிட்டு வெளிவரும் நம்மோடு தேவன் பண்ணுகின்ற உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களோடு பண்ணிய உடன்படிக்கையைவிட மேலானது. இதனையே,  "அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்." ( எபிரெயர் 8 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது.

மோசேயோடு உடன்படிக்கைச் செய்து கட்டளைகளை கற்பலகைகளில் எழுதியதுபோல அல்லாமல் இன்று நமது உள்ளமாகிய பலகையில் தேவன் தனது உடன்படிக்கையினை எழுதியுள்ளார். பாவ எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து  நாம் வெளிவரும்போது ஆவியானவர் நம்மோடு உடன்படிக்கை பண்ணுகின்றார். எனவே, "நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." என்று ஆகாய்  தீர்க்கத்தரிசி மூலம் தீர்க்கத்தரிசனமாகக் கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, புதிய உடன்படிக்கையின் மக்களாகிய நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ ஆவியானவர் நமக்குத் துணையாக இருப்பார். எனவே நாம் பயப்படாமல் நமது ஆவிக்குரிய பயணத்தைக் தொடர்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்