Friday, February 17, 2023

காரியம் மாறுதலாய் முடியும்.

ஆதவன் 🌞 753 🌻 பிப்ருவரி 19,  2023 ஞாயிற்றுக்கிழமை 


"ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது." ( எஸ்தர் 9 : 1 )

நமது தேவன், "காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்." ( தானியேல் 2 : 21 ) அவரது சித்தமில்லாமல் அவருக்கு எதிராகவும் அவரை விசுவாசிக்கும் மக்களுக்கு எதிராகவும் ஒருவரும் எதுவும் செய்துவிட முடியாது. 

யூதர்களை மண்ணில் இல்லாமல் அழித்து ஒழிக்க ஆமான் திட்டம்போட்டான். ஆனால் தேவனோ மொர்தெகாயின் அறிவுரையின்படி எஸ்தரை நடத்தி ஆமானது திட்டத்தை அவனுக்கும் அவனது ஆதரவு மக்களுக்கும் எதிராகத் திருப்பினார். அன்பானவர்களே, வேதாகமத்திலுள்ள எஸ்தர் புத்தகத்தை வாசித்துப்பார்த்தால் அவருக்கு உகந்தவர்களை தேவன் எப்படிப் பாதுகாக்கின்றார், தேவனது அளப்பரிய செயல்பாடு எப்படி தனது மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றது என்பதனை அறிந்துகொள்ளலாம். 

இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தந்திரமான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.  அவர்கள் தங்களை ஞானிகள் என்று எண்ணிக்கொண்டு தந்திரமான உபாயங்களைக் கைக்கொண்டு நமக்கு எதிராகச் செயல்படுகின்றார்கள். ஆனால் வேதம் சொல்கின்றது, " ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார் " ( 1 கொரிந்தியர் 3 : 19 )

மொர்தெகாயை தூக்கில் மாட்டிக் கொலை செய்ய முயன்ற ஆமானின் தந்திரத்தைத் தேவன் அவனுக்கு எதிராகவே மாற்றி, மொர்தெகாவைத் தூக்கில் ஏற்ற அவன் செய்த அதே தூக்குமரத்தில் ஆமானைத் தொங்கவைத்தார்.  

அன்பானவர்களே, மொர்தெகாவும் எஸ்தரும் உபவாசமிருந்து ஜெபித்து தங்களுக்கு எதிரான காரியத்தை முறியடித்தார்கள். இது ஏதோ அன்று நடந்த ஒரு சம்பவமல்ல, தேவனது வல்லமையின் வெளிப்பாடு. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவாயிருக்கின்ற நமது தேவன் இதே அற்புதத்தை இன்றும் செய்ய வல்லவாராயிருக்கின்றார். 

மேலும், நமது ஆவிக்குரிய வாழ்வில் எதிரிகளாக இருப்பவை நமது சரீர இச்சைகளும், ஆசைகளும் பாவ எண்ணங்களும். பாவம் நம்மை மேற்கொண்டு துஷ்ட ஆமானைப்போல நம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றது. யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது என்று இன்றைய வசனம் கூறுவதுபோல ஆவிக்குரிய யூதர்களாகிய நமது பாவ எண்ணங்கள், செயல்கள் போன்ற பகைவரை மேற்கொள்ளும்படி நமது வாழ்விலும் மாறுதலாய் முடியும்.  இதனை நாம் விசுவாசிக்கவேண்டும். எஸ்தரைபோலவும் மொர்தெகாவைப்போலவும் ஜெபிக்கவேண்டும். அப்போது நமது உலகப் பகைவர்களையும் ஆவிக்குரிய பகைஞர்களையும்  மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: