Friday, February 10, 2023

புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வோம்.

ஆதவன் 🌞 746 🌻 பிப்ருவரி 12,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 4 : 24 )

கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நாம் வாழ முற்படும்போது நமது பழைய மனிதனைக் களைந்துவிடவேண்டியது அவசியம். நான் இப்படியே இருப்பேன் ஆனால் தேவன் என்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்று நாம் கூறமுடியாது.  தேவன் மனிதனைத் தனது சாயலாகவும் தனது ரூபமாகவும் படைத்தார். ( ஆதியாகமம் 1:27)  ஆனால் அந்த மனிதனை நாம் பாவத்தால் இழந்துவிட்டோம். 

இந்த உலகத்தில் நாம் பாவம் செய்து தேவ மகிமையை இழந்து விடுகின்றோம். எனவே நாம் தேவனோடு ஐக்கியப்படவேண்டுமானால் நாம் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட காலத்தில் இருந்ததுபோல  புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளவேண்டும்.

மேலும் இன்றைய வசனம், "மெய்யான நீதி" எனும் வார்த்தை ஒன்றையும் கூறுகின்றது. இந்த உலகத்தில் மனிதர்களது நீதி என்று ஒன்று  உண்டு. ஆனால் நாம் அதன்படிமட்டுமல்ல, தேவ நீதியின்படி வாழவேண்டியது அவசியம்.   ஏனெனில் மனிதர்களுக்களது நீதி நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக மாற்றாது. நாம்  நீதியான வாழ்வுதான் வாழுகின்றோம் என நாம் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாம் ஒருவேளை தேவ நீதியின்படி வாழாதவர்களாக இருக்கலாம். தேவ நீதியின்படி நாம் வாழ்கின்றோமா என்பதே முக்கியம். 

ஏனெனில் மனிதர்களது நீதி அழுக்கான கந்தையைப்போல இருக்கின்றது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64 : 6 ) என்று  வசனம் கூறுகின்றது. 

அழுக்கும் கந்தையுமான மனித நீதியின்படியல்ல, தேவ நீதியின்படி வாழ நாம் முற்படவேண்டும். இதுவே மெய்யான நீதி.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெயர் நீதியின் சூரியன். எனவே, நீதியின் சூரியனான அவரே நம்மை மெய்யான  நீதியின் பாதையில் நடத்திட முடியும். அன்பானவர்களே, அவரது வழி நடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். அவரே நம்மை "மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் நடத்திட முடியும். மட்டுமல்ல, அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை நாம் தரித்துக்கொள்ள முடியும்.

அப்படி புதிய மனிதனாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப்பெற்று மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: