Tuesday, February 07, 2023

"உமக்குப் பிரியமானதைச் செய்ய"

ஆதவன் 🌞 743 🌻 பிப்ருவரி 09,  2023 வியாழக்கிழமை 

"உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." ( சங்கீதம் 143 : 10 )

மனிதர்கள் இன்று அவர்களாக சில காரியங்களைச்  சிந்தித்து  அது தேவனுக்கும்  பிரியமாயிருக்கும் என்று எண்ணிக்கொள்கின்றனர். அதாவது தங்களுக்கு எது உகந்தது என எண்ணுகின்றார்களோ அதுவே தேவனுக்கும் உகந்தது என்று எண்ணிக்கொள்கின்றனர். உதாரணமாக, குறிப்பிட்ட முறைப்படிக்  காணிக்கைக்  கொடுப்பது, ஜெபிப்பது, வேதாகமத்தை வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது இவையே தேவன் விரும்புவது அல்லது தேவனுக்கு உகந்தது என எண்ணிக்கொண்டு அவற்றைச்செய்ய ஆர்வமாகவுள்ளனர். தேவனுக்கு உகந்தது என்ன என்பதை பெரும்பாலும் மனிதர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.

வெறும் பக்திச் செயல்பாடுகளே போதுமென்றால் இன்றைய வசனத்தில் தாவீது இப்படி விண்ணப்பம் செய்திருக்கமாட்டார். ஏனென்றால் யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே இவைகளைச் செய்யவேண்டுமென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் தாவீது "உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." என்று    கூறுகின்றபடி செம்மையான வழி என்று ஒன்று இருக்கின்றது. தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே நம்மை அந்தப்பாதையில் நடத்திட முடியும் என்பது தெளிவு. .   

ஏனெனில் எல்லா காணிக்கைகளையும், ஜெபங்களையும், சபைக் கூட்டங்களையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. அக்கிரமச் செய்கைகளைச் செய்துகொண்டு அதிகமாக ஜெபிப்பதையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. இதனையே ஏசாயா மூலம் தேவன் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்:-

"இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்." ( ஏசாயா 1 : 13 )

"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது." ( ஏசாயா 1 : 15 )

ஆம் அன்பானவர்களே, ஜெபம், காணிக்கை, உபவாசம், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது இவைகளைவிட முதலில் நமது வாழ்க்கை நல்லதாக இருக்கவேண்டும் என தேவன் விரும்புகின்றார். மணிக்கணக்கில் ஜெபிப்பதையல்ல நமது வாழ்க்கை செயல்பாடுகளைத்தான் தேவன் முதலில் பார்க்கின்றார். 

இப்படிக் கூறுவதால் அதிகநேரம் ஜெபிக்கவேண்டாம் என்று பொருளல்ல; தேவனுக்குள் நாம் வாழும்போது நாமே நம்மை அறியாமல் அதிக நேரம் ஜெபிப்போம். ஜெபமே ஆவிக்குரிய வாழ்வின் அடித்தளம். பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்று மீட்பு அனுபவம் பெறும்போது நமது ஜெபம் வித்தியாசமானதாக இருக்கும். உலகத் தேவையளுக்காகவே மணிக்கணக்கில்  நாம் தேவனைக் கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டோம். 

எனவேதான் தாவீது, "உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." என்று ஜெபிக்கின்றார். நாம் நாமாக தேவனுக்கு இவை இவை பிரியமாய் இருக்கும் என எண்ணிக்கொள்வதல்ல, தேவன் எதனில் பிரியமாய் இருக்கிறார் என்று எண்ணிப்பார்க்கவேண்டும். அவற்றின்படி நடக்கவேண்டும்.  தேவனது பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்தி அத்தகைய நல்ல வழியில் நடத்திட ஜெபிப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: