Tuesday, February 21, 2023

ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

ஆதவன் 🌞 756 🌻 பிப்ருவரி 22,  2023 புதன்கிழமை 

"சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." (1 தீமோத்தேயு 4:8) 

இந்த உலகத்தில் மனிதர்கள் தங்கள் உடலைப் பேணுவதற்குப் பல முயற்சிகளை எடுக்கின்றனர். மருத்துவர்களும் உடலைப் பேணுவதற்கு பல்வேறு உணவு முறைமைகளையும் உடற்பயிற்சிகளையும் செய்யும்படி அறிவுறுத்துகின்றனர். இதனைப் பலரும் தவறாமல் கடைபிடிக்கின்றனர். இவை தேவையே. ஏனெனில் நாம் நமது உடலைப் பேணவேண்டியது அவசியம். அது பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாயிருக்கின்றது. (1 கொரிந்தியர் 6:19). ஆனால் இப்படி உடலைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் அதனைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமைகொடுக்கவேண்டியது அவசியம். 

இங்கு பவுல் அடிகள் குறிப்பிடும் சரீர முயற்சி என்பது தேவனது அன்பினைப்பெறுவதற்கு என ஆலய பணிகளுக்காக அயராது ஓடியாடி உழைப்பதைக் குறிக்கின்றது. இந்த உழைப்பை ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டும் அல்லது பாவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டும்கூடச் செய்யலாம். இப்படி உடல் உழைப்பின்மூலம் தேவ அன்பினைப்பெறுவதற்கு முயல்வது அற்ப பிரயோஜனையுள்ளது. இவற்றைவிட நமது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 

மேலும், சரீரமா ஆவியா என வரும்போது நாம் ஆவிக்குரிய காரியங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். காரணம், "சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." 

இந்த உலக வாழ்க்கையுடன் நாம் சரீரத்துடனான தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடுகின்றோம். ஆனால் அழிவில்லாத ஆத்துமா நித்திய நித்திய காலமாய் கர்த்தரோடு இருக்கப்போகின்றது. எனவே நாம் நமது ஆத்துமாவை அதற்குத் தகுதிப்படுத்தவேண்டியது அவசியம். 

அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதுடன் ஆவிக்குரிய காரியங்களுக்கும் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் நமது அதிகாலை நேரத்தை தேவனோடு செலவழிக்கும்போது அந்த நாளுக்குரிய கிருபையையும், தேவனோடு நெருங்கிய தொடர்பையும் நாம் உறுதிப்படுத்துகின்றோம். மேலும் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தில் நாம் பல்வேறு பாவச் சூழ்நிலையில் விழக்கூடிய வாய்ப்புகள் வரக்கூடும். ஜெப வீரர்களாக நாம் இருக்கும்போது நாம் நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்கின்றோம். 

அன்பானவர்களே, நாம் பல்வேறு உடல் உழைப்புகள் மூலம் ஆலயங்களுக்கு உதவலாம்; அது நல்லதுதான். ஆனால் அதனைவிட நமது உடலைப் பாவமில்லாமல் பேணி நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை கட்டி எழுப்புவதே முக்கியம். 

நாம் இங்கு அறியவேண்டியது இரெண்டு காரியங்கள். ஒன்று ,  நமது  உடலைப் பேணவேண்டியது அவசியம் ; ஆனால் அதனைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். 

இரண்டாவது, நமது சரீர முயற்சி மூலம் தேவனுக்கு உகந்தவர்கள் ஆக முடியாது; அது அற்பமானது. முதலில் நமது சரீரத்தை பாவமில்லாமல் பரிசுத்தமாக காத்துத் தேவனுக்கு  உகந்ததாக்கிக்கொண்டு ஆவிக்குரிய காரியங்களிலும் ஈடுபடவேண்டும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: