நாம் நமது ஆலோசனைகளை அவரிடம் திணிக்க முடியாது.

ஆதவன் 🌞 755 🌻 பிப்ருவரி 21,  2023 செவ்வாய்க்கிழமை 


"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 55 : 8 )

மனிதர்கள் நமது அறிவு குறைவுள்ளது; காலம், இடம் இவைகளுக்குக் கட்டுப்பட்டது. நாம் நமது அறிவுக்கும் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்பவே சிந்திக்கின்றோம், முடிவுகள் எடுக்கின்றோம். ஆனால் சர்வ வல்லவரான தேவனோ அனைத்தையும் கடந்தவர். எனவே, அவரே நமக்கு ஆலோசனைகளையும்,  அறிவையும் வழியையும் காண்பிக்க  முடியும். மனிதர்கள் நாம் நமது ஆலோசனைகளை அவரிடம் திணிக்க முடியாது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?" ( ரோமர் 11 : 34 ) என்கின்றார். 

நாம் நமது மனதில் பல ஆசைகளையும் எதிர்காலத்துக்குரிய திட்டங்களையும் வைத்திருக்கலாம். இந்த ஆசைகளும் திட்டங்களும் நமது மன விருப்பத்தின் அடிப்படையிலானவைகள். ஆனால், தேவ சித்தம் என்று ஒன்றும் உள்ளது என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை.  நமது எண்ணங்களும் திட்டங்களும் நடைபெறாமல் போகும்போது பலரும் கடவுள்மேல் பழிபோடுகின்றார்கள். நமது எண்ணங்கள், செயல்கள்  தேவனுக்கு உகந்தனவா என்று பலரும் எண்ணிப் பார்ப்பதில்லை. 

ஆனால், நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போதும் நமக்கு எதிராகச் சில பல காரியங்கள் நடக்குமானால் நாம் பயப்படத் தேவையில்லை. தேவன் நமக்காக  வேறு ஏதோ திட்டம் வைத்துள்ளார் என்று நாம் அந்த நல்ல நாளை எதிர்பார்த்துப் பொறுமையோடு காத்திருப்பதே நல்லது. காரணம், "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 ) என்று வேத வசனம் கூறுகின்றது.

கல்லூரிப்  பேராசிரியராகவேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்று அந்த முயற்சியில் தோல்வியுற்ற ஒருவருக்கு வேறு நல்ல வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய வேலையில் சேர்ந்து மனக் கவலையோடு உண்மையாய்ப் பணியாற்றிவந்தார். அவர் தேவ அன்பை ருசித்தவர் ஆதலால் கர்த்தர் தனக்காக ஏதோ திட்டம் வைத்துள்ளார் என்பதில் உறுதியாக நம்பிக்கையாக இருந்து ஜெபித்துவந்தார். 

இவர் பணியாற்றிய அந்த சிறு நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு பெரிய தொழிலதிபர் நண்பராக இருந்தார். அவர் ஒரு கல்லூரி ஆரபிக்க முயற்சி செய்து வந்தார். அவர் கல்லூரி ஆரபித்தபோது தேவ பக்தியுள்ள இந்த நபரைத் தனது புதிய கல்லூரிக்கு முதல்வராக்கினார்.  அந்தக் கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக உயர்வடைந்தது. இவரே அந்தப் பல்கலைக்கழத்தின் வேந்தரானார். ஆம் அன்பானவர்களே, வெறும் கல்லூரிப் பேராசிரியராக வேண்டுமென்று ஆசைப்பட்ட தனது அடியானை தேவன் பல்கலைக்கழக வேந்தராக்கி பல நூறு பேராசிரியர்கள் அவருக்கு கீழ் பணியாற்றுமளவுக்கு உயர்த்தினார். 

"பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது."( ஏசாயா 55 : 9 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பொறுமையாகக் காத்திருப்போம். ஏற்றகாலத்தில் கர்த்தர் நமக்கு ஏற்புடையவற்றைச் செய்வார். நாம் பரவசமடைவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்