உலக மனிதர்களைப்போல போராடுவது தேவ சித்தமல்ல.

ஆதவன் 🌞 757 🌻 பிப்ருவரி 23,  2023 வியாழக்கிழமை 

"யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." (ரோமர் 13:7)

கிறிஸ்தவர்களாகிய நாம் விண்ணுலக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் இந்த உலகத்தில் வாழும் நாட்களில் நாம் வாழும் நாட்டின் அரசியல் சட்டத்துக்கும், இதர சட்டங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆளுவோருக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும், சட்டங்களையும் அதிகாரிகளையும் ஆளுவோரையும் மதிக்கவேண்டும்.

சில கிறிஸ்தவ பிரிவினர் தங்கள் ஏதோ இன்னொரு உலகத்திலிருந்து வந்தவர்கள்போல பேசுவார்கள். நாம் கர்த்தர் ஒருவரையே கனம் பண்ணவேண்டும் என்பார்கள் ஆனால், தங்களுக்கு உலகினில் ஏதாவது காரியம் நிறைவேறவேண்டுமானால் அதிகாரிகளையும்  அரசியல்வாதிகளையும் தேடி ஓடுவார்கள்.

அப்போஸ்தலரான பவுல் அடிகள் உலக அதிகாரிகளும் தேவ ஊழியர்களாக இருக்கிறார்கள் என்கின்றார். அதாவது அவர்களது அதிகாரம் தேவனால் உண்டாயிருக்கிறது.  "எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது." (ரோமர் 13:1)

மேலும், "உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே." (ரோமர் 13:4)

இந்த உலக அரசாங்கங்கள் மக்களிடம் வரி வசூலிக்கின்றன. அந்த வரிப்பணம் அரசாங்கத்தின் இத்தகைய செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆம், " இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே." (ரோமர் 13:6) 

"எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் கர்த்தருக்குப் பயப்பட்டு அவரைக் கனம் பண்ணவேண்டியது அவசியம். அது முக்கியமானது. ஆனால் உலக காரியங்களில் அதிகாரம்பெற்ற மனிதர்களுக்குப் பயப்படவேண்டியதும் அவர்களைக் கனம்பண்ணவேண்டியதும் அவசியம்.   

நமக்குப் பிடிக்காத அரசியல் கட்சியும் தலைவர்களும் நம்மை ஆளலாம். அவர்கள் துன்மார்க்கர்களாக இருக்கலாம். ஆனால் நாம் அதனைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. தேர்தலில் அவர்களுக்கு எதிராக வாக்களிக்கவேண்டுமே தவிர  உலக மனிதர்களைப்போல போராடுவது தேவ சித்தமல்ல. அவர்களுக்காக  ஜெபிக்கவே வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்