Thursday, February 23, 2023

பாவத்தில் மரித்துப்போயிருக்கும் மனிதர்களையும் பரிசுத்தவான்களாக மாற்றமுடியும்.

ஆதவன் 🌞 759🌻 பிப்ருவரி 25,  2023 சனிக்கிழமை 

"தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பக்கூடாத  காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 8 )

தேவன்மேல் நாம் அசைக்கமுடியாத விசுவாசமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். வெறுமனே "விசுவாசிக்கிறேன்" என்று கூறுவதல்ல, அவரால் எல்லாம் செய்ய முடியும் என்று விசுவாசிக்கவேண்டும். தேவன் அபிராமுக்குத் தரிசனமானபோது தன்னை சர்வ வல்லமையுள்ள தேவன் என்றே அறிமுகப்படுத்திக்கொண்டார். "ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு." ( ஆதியாகமம் 17 : 1 ) என்றார் என்று வாசிக்கின்றோம். 

சர்வ வல்லமை என்பது எதனையும் செய்யக்கூடிய வல்லமை. இல்லாதவைகளை இருக்கின்றவைகளாக  செய்யத்தக்க வல்லமை.  "அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்." (ரோமர் 4:17) என்று வாசிக்கின்றோம்.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது மரித்த பலரை உயிரோடு எழுப்பினார். அவற்றில் உச்சக்கட்ட அதிசயம் மரித்து நான்கு நாட்களுக்குப்பின் கல்லறையில் சென்று மரித்த லாசரை உயிரோடு எழுப்பியது. அவரது சீடர்கள் மட்டுமல்ல, "அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்." ( யோவான் 12 : 17 )

ஆனால் யூதர்கள் பலரும் அதிகாரிகளும் இதனை நம்பவில்லை. நம்பிய சிலரும் இதற்குச் சாட்சி இல்லாமல் போகவேண்டும் என்று லாசருவையும் கொலைசெய்ய எண்ணினார்கள். ஆம், அவர்கள் மேசியா வருவார் என நம்பினார்கள் ஆனால் வந்த மேசியாவை அடையாளம் காணவில்லை. 

எனவே தான் உறுதியான விசுவாசம் நமக்குத் தேவைப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவை சர்வ வல்லவர் என்று விசுவாசிக்கும்போதுதான் அவரால் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கமுடியுமென்று விசுவாசிக்கமுடியும். இல்லையானால் சில உலக மனிதர்கள் கூறுவதுபோல, "நாம் மனிதர்கள்தானே எனவே இந்தப் பாவங்கள் நமக்கு இயற்கையாகவே உள்ளவை; இவைகளை மேற்கொள்ளமுடியாது" என்று கூறிக்கொண்டு தொடர்ந்து குடியிலும், விபச்சாரத்தில், பொய்யிலும், பொறாமையிலும், வஞ்சகத்திலும் வாழ்ந்துகொண்டிருப்போம்.  

ஆம் அன்பானவர்களே, மரித்தவர்களை உயிரோடு எழுப்ப வல்ல தேவனுக்கு பாவத்தில் மரித்துப்போயிருக்கும் மனிதர்களையும் பரிசுத்தவான்களாக மாற்றமுடியும். பல புனிதர்களது வாழ்க்கை வரலாறுகள் இதற்குச் சாட்சிகூறுகின்றன. நமக்கு உண்மையிலேயே ஒரு தூய வாழ்வு வாழவேண்டுமெனும் எண்ணமும் ஆசையும் இருந்தால் தேவனிடம் நமது விருப்பதைத் தெரிவிக்கும்போது நமக்கு உதவுவார். 

அகிரிப்பா ராஜாவைநோக்கிக் கேட்ட அதே கேள்வியை அப்போஸ்தலரான பவுல் நம்மைப்பார்த்தும் கேட்கின்றார், "தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்கூடாத  காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?" 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: