Thursday, February 09, 2023

கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவில் வாழ்வதே முக்கியம்.

ஆதவன் 🌞 745 🌻 பிப்ருவரி 11,  2023 சனிக்கிழமை 

"ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 4 )

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, கிறிஸ்த்துவை அறிந்து ஆவிக்குரிய வாழ்வில் நடக்க ஆரம்பிக்கும்போது நமக்கு கிறிஸ்துவிடம் அதிக  அன்பு ஏற்படும். எப்போதும் அவரது நினைவும் அவருக்கு ஏற்புடைய ஏதாவது ஒன்றினை தினமும் செய்யவேண்டும் எனும் ஆசையும் அதிக அளவில் இருக்கும். அவரது உடனிருப்பை நாம் எப்போதும் உணருவோம். கிறிஸ்துவின்மேலுள்ள இந்த அன்பையும் ஈடுபாட்டையும் நாம் தொடர்ந்து காத்துக்கொள்ளவேண்டும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.    

எபேசு சபைத் தூதனுக்கு ஆவியானவர் இதனைக் கூறுகின்றார். அந்த சபையிலுள்ள நல்ல குணங்களையும் முதலில் பாராட்டுகின்றார். இன்று நமக்கும் இதுபோன்ற நல்ல ஆவிக்குரிய குணங்கள் இருக்கலாம் ஆனாலும் அது மட்டும்போதாது கிறிஸ்துவிடமுள்ள அன்பில் குறைவில்லாமல் இருக்கவேண்டியது அவசியம்.

அது என்ன நல்ல குணங்கள்? கிறிஸ்துவின் பணிகளைச்  செய்யும் பிரயாசம்,  பொல்லாத ஊழியர்கள் செய்யும் காரியங்களை சகிக்கமுடியாமை, கள்ள அப்போஸ்தலர்களை இனம் கண்டறிந்தபின்பும் பொறுமையாக அவர்களை ஏற்றுக்கொள்வது, அவர்கள்மேல் பொறுமையாக இருப்பது,  கிறிஸ்துவின் காரியங்களை செய்ய இளைப்படையாமல் இருப்பது போன்றவை. 

இதனையே, "உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும்,  நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்". ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 2, 3 ) என்று கூறுகின்றார். 

மேற்குறிப்பிட்ட நல்ல குணங்கள் இருந்தாலும், "நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு." என்று தொடர்ந்துவரும் இந்த வசனம் கூறுகின்றது. அதாவது மேற்குறிப்பிட்ட குணங்கள் மட்டும் போதாது கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவில் நாம் இணைந்திருக்கவேண்டும். கிறிஸ்துவோடு நெருங்கிய உறவு இல்லாமல் இருந்துகொண்டும் ஒருவர் மேற்குறிப்பிட்ட ஆவிக்குரிய காரியங்களைச் செய்ய முடியும். 

இது எப்படி என்றால், வீட்டில் மனைவி பிள்ளைகளிடம் தனிப்பட்ட அன்புறவோடு பேசி உறவாடி இருக்காமல் வீட்டுச் செலவுக்கும்,  அவர்களுக்கு வேண்டிய இதரச் செலவுகளுக்கும் பணத்தைமட்டும் கொடுக்கும் மனிதனைப்போல உள்ளது. வீட்டுச் செலவுகளுக்கான பணத்தைக்கொடுப்பது  நல்லதுதான். ஆனால் வீட்டாரிடமுள்ள அன்பையும் தனிப்பட்ட உறவையும்  விட்டுவிட்டால் என்ன பயன்?   

அன்பானவர்களே, ஊழியங்களுக்கும் இதர ஆலயப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மட்டும் போதாது;  கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவில்   வாழ்வதே முக்கியம். அப்படி வாழ்ந்து நல்ல செயல்களையும் செய்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: