Wednesday, February 15, 2023

ஆவியானவரைத் துக்கப்படுத்தும் காரியங்கள் நம்மிடமுள்ளதா ?

ஆதவன் 🌞 751 🌻 பிப்ருவரி 17,  2023 வெள்ளிக்கிழமை 

"நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 )

பரிசுத்த ஆவியானவரைப்பற்றி கிறிஸ்தவர்களுக்குளேயே பல சந்தேகங்களும் தெளிவின்மையும் உள்ளன. "ஆவி" என்று சொல்வதால் அவரை ஏதோ ஆவி என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் பிதா, குமாரனைப்போல தனி ஆள் தத்துவம் உள்ளவர். இதனை இயேசு கிறிஸ்து கூறும் வார்த்தைகள் மூலம் அறியலாம். 

"சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்குத் தருவார் "  (யோவான் 14:16)

பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார்" (யோவான் 14:26) 

"சத்திய ஆவியாகிய  தேற்றவாளன் வரும்போது அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்" (யோவான் 15:26)

"நான் போகாதிருந்தால் தேற்றவாளன் உங்களிடத்தில் வரார்"  (யோவான் 16:7)

நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பு அனுபவம் பெறும்போது நமக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகின்றார். இதனையே, "மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப்பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி" என்று இன்றைய வசனம் கூறுகின்றது.  நமக்குள் வரும் ஆவியானவர் இப்படி ஆள் தத்துவம் உள்ளவராகையால் ஆவியானவரும் மன மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுள்ளவராக இருக்கின்றார். இந்த கிருபையின் நாட்களில் அவரே நம்மை வழிநடத்துகின்ற "வழிநடத்தும் ஆவியானவராக" இருக்கின்றார். 

அவரது வழிநடத்துதலை நாம் புறக்கணிக்கும்போது ஆவியானவர் துக்கப்படுகின்றார். அப்படி நாம் புறக்கணித்துச் செய்யும் செயல்களே துற்செயல்கள் என்று பவுல் அடிகள் கூறுகின்றார். இதனையே தொடர்ந்துவரும் வசனத்தில், "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது." ( எபேசியர் 4 : 31 ) என்று கூறுகின்றார். 

அதாவது, மற்றவர்கள்மேலுள்ள கசப்புகள், கோபம், மூர்க்க எண்ணங்கள்,  மற்றவர்களை எதிர்த்து கூக்குரலிடுதல், தூஷணம் இவைபோன்றவை ஆவியானாவரைத் துக்கப்படுத்துகின்றன. பீடி, சிகரெட், வெற்றிலை பழக்கங்களைவிட இத்தகைய குணங்களே கேடானவைகல். 

அன்பானவர்களே எனவே, ஆவியானவரைத் துக்கப்படுத்தும் காரியங்கள் நம்மிடமுள்ளதா என்று நிதானித்து அறிந்து அத்தகைய குணங்களை நம்மைவிட்டு அகற்றுவோம். தேவனோடு எப்போதும் ஜெப உறவில் தரித்திருந்தால் ஆவியானவரின் வழிநடத்துதலை நாம் நமது அன்றாட வாழ்வில் உணரமுடியும்.  

முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருபோமாக.!!

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: